ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாட்டால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 15 சதவீதம் குறைந்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிகம் வரத் தொடங்கியிருப்பதால் சில்லரை கொடுக்க முடியாமல் ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழக அரசுக்கு கிடைத்து வரும் நிதி வருவாயில், டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியமானதாக இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.60 கோடி முதல் ரூ.65 கோடி வரை மது விற்பனை நடைபெறுகிறது. பண்டிகை காலங்களில் இந்த மது விற்பனை மேலும் அதிகரித்து அரசுக்கு கூடுதல் வருவாயை கொடுத்து வருகிறது.

ஆனால், கடந்த 8-ந் தேதி இரவு பிரதமர் நரேந்திரமோடி அதிரடியாக, கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பிறகு நாட்டில் ஒட்டுமொத்த வர்த்தகமே ஸ்தம்பித்துவிட்டது. அதில், மது விற்பனையும் விதிவிலக்கல்ல.

500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட மறுநாள் (9-ந் தேதி) காலையிலேயே, டாஸ்மாக் நிர்வாகத்திடம் இருந்து அனைத்து மதுபானக் கடைகளுக்கும் உத்தரவு ஒன்று பறந்தது. அதாவது, மது வாங்க வருபவர்களிடம் இருந்து ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் வாங்க வேண்டாம் என்பது தான் அந்த உத்தரவு.

இதனால், 9-ந் தேதி மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடையை திறந்தது முதலே யாரிடமும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ஊழியர்கள் வாங்கவில்லை. இதனால், மது பிரியர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். 100 ரூபாய் நோட்டுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், கடந்த 3 நாட்களில் மது விற்பனை 15 சதவீதம் அளவுக்கு சரிந்திருக்கிறது. வருமானமும் சராசரியை விட ரூ.57 கோடியாக குறைந்திருக்கிறது.

ஆனால், நேற்று முன்தினம் முதல் வங்கிகளில் செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை கொடுத்து, புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வங்கிகளில் 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளை பெற்ற மது பிரியர்கள் பலர், டாஸ்மாக் கடையை திறந்த அடுத்த 10 நிமிடத்திற்குள்ளேயே அங்கு சென்று மது பாட்டில்களை வாங்கினர்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்கிய டாஸ்மாக் ஊழியர்களோ, மது வாங்கியவர்களுக்கு சில்லரை கொடுக்க முடியாமல் தவியாய் தவித்தனர். இதனால், பல இடங்களில் டாஸ்மாக் ஊழியர்களுக்கும், மது வாங்க வந்தவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. போலீசார் வந்து பிரச்சினையை தீர்க்கும் நிலை இருந்தது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சிலரிடம் கேட்டபோது, “டாஸ்மாக் கடைகளுக்கு இப்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய நோட்டுகளும் தான் அதிகம் வருகிறது. 100 ரூபாய் நோட்டுகள் குறைவாகவே வருவதால், எங்களால் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து மது வாங்குபவர்களுக்கு சில்லரை கொடுக்க முடியவில்லை.

ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகளை கொடுத்தாலும் வாங்க மறுக்கிறார்கள். இதனால், பிரச்சினை ஏற்படுகிறது. ரூ.10, ரூ.20, ரூ.50 நோட்டுகளை எண்ணி கட்டுப்போட்டு கணக்கை ஒப்படைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. இதனால் எங்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது” என்று வருத்தத்துடன் தெரிவித்தனர். 

வாசகர் கருத்து (0)(“வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு ‘புதிய முகம்’ நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.” )


உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.

Type the article in tamil here then copy to past A Details Colomn (Press Ctrl+g toggle between English and Tamil)