Home > அறிவியல் > கொந்தளிக்கும் புதன் – கோள்கள் எட்டு : பகுதி- 3

கொந்தளிக்கும் புதன் – கோள்கள் எட்டு : பகுதி- 3

சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் மெர்குரி. அதாவது தமிழில் புதன்.

அதுமட்டுமல்ல, இந்தக் குடும்பத்தின் இரண்டாவது மிகச்சிறிய குட்டிப் பிள்ளை.

மெர்குரிக்கு சென்றால், நாள் ஒன்றுக்கு இருமுறை சூரிய உதயத்தை பார்க்க முடியும்.

இரவில் மைனஸ் 170 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவுக்கு கடுங்குளிர் அல்ல. கொடிய குளிர் நிலவும்.

பகலிலோ 350 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவுக்கு வறுத்தெடுக்கும் வெப்பம் இருக்கும்.

மெர்குரி கோளில் தெளிவாக தெரிகிற அம்சம் ஒன்று உண்டு. அதன் பெயர் கலோரிஸ் பேஸின். இது ஒரு பள்ளத்தாக்கு. சாதாரண பள்ளத்தாக்கு அல்ல. பிரிட்டிஷ் தீவுகள் அளவுக்கு மிகப்பெரியது. இதன் குறுக்களவு மட்டும் 1300 கிலோ மீட்டர் என்றால் கற்பனை செய்து பாருங்கள்.

சூரிய மண்டலத்தில் இதுபோன்ற மிகப்பெரிய பள்ளத்தாக்கு எந்த கிரகத்திலும் இருக்காது. மெர்குரி மீது வேறு ஒரு விண்பாறை மோதியதால் ஏற்பட்ட பள்ளம் இது.

மெர்குரி உருவான துவக்க காலத்தில் இந்த மோதல் நிகழ்ந்திருக்கலாம்.

இந்தப் பள்ளத்தாக்கின் தரைப்பகுதியில் மேலும் பல தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

மெர்குரியில் நடைபெற்ற இந்த மோதலின் நிஜத் தன்மையை புரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் மெர்குரியின் அடுத்த பக்கத்திற்கு பறந்து செல்ல வேண்டும்.

அங்கு மிகப்பிரம்மாண்டமான மலைகளை பார்க்கலாம். எல்லாம் முன்பக்க மோதலினால் ஏற்பட்ட அதிர்வு காரணமாக உருவானவை.

பூமியிலிருந்து மெர்குரியைப் பார்ப்பது கடினம். சூரியனின் மிக நெருங்கிய கோள் என்பதால், சூரிய ஒளி இதை மூடி மறைத்துவிடும்.

சூரியன் மறையும் மாலை நேரத்திலோ, சூரியன் உதயமாகும் காலை நேரத்திலோ மட்டுமே மெர்குரியை அடையாளம் காண முடியும். இரவு நேரத்தில் மெர்குரியை காண முடியாது. சூரியனுக்கு அருகில் இருப்பதால் சூரியன் மறையும்போது இதுவும் மறைந்துவிடும்.

சில அரிதான சமயங்களில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே மெர்குரி கடக்கும். அப்போது சூரியனில் மிகச் சிறிய புள்ளி போல இது தெரியும்.

மெர்குரிக்கு செல்ல ஐந்தரை மாதம் பயணம் செய்ய வேண்டும். 88 நாட்கள் தான் ஒரு மெர்குரி ஆண்டு. மெர்குரியிலிருந்து பூமிக்கு தொடர்பு கொள்ள 920 வினாடிகள் ஆகும்.

சூரியனிலிருந்து வெடித்து கிளம்பும் கங்குகள் மெர்குரி மீது தாக்கும். அந்த வெடிப்பை தடுக்கிற அளவுக்கு மெர்குரியின் ஈர்ப்புவிசை இல்லை.

ரோமானியர்கள் தங்களுடைய கடவுளின் தூதுவரான மெர்குரியின் பெயரை இந்த கோளிற்கு சூட்டினர். ஏனென்றால் அவ்வளவு விரைவாக இது இரவு வானுக்குள் மறைந்து விடுகிறதாம்.
காலை வானில் பார்க்கும் போது இதை ‘அப்போலோ’ என்றும், மாலை வானில் இதை பார்க்கும் போது ‘ஹெர்மெஸ்’ என்றும் மெர்குரியை கிரேக்கர்கள் அழைத்தனர்.

மெர்குரி உங்களுக்கு அச்சமூட்டுகிறதா? ஆர்வத்தை தூண்டுகிறதா?

0 Response

  1. Pingback : 1. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - FACTS OF SCIENTISTS - 1 - Puthiyamugam

Leave a Reply