Home > கட்டுரைகள் > காந்தியின் தீவிர பக்தர் – Periyar Life History – 4

காந்தியின் தீவிர பக்தர் – Periyar Life History – 4

தனக்கு சரியென்று பட்டால் அதன் விளைவுகளை பார்க்காமல் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்.
அதேசமயம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் தயவுதாட் சண்யம் பார்க்காமல் மல்லுக்கு நிற்பார்.
இதுதான் ராமசாமி நாயக்கரின் குணம்.
காந்தி பக்தராக மாறி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகி விட்டார். அதன்பிறகு அவருடைய நடை உடை பாவனை அனைத்தும் மாறிவிட்டது.
அவரும் அவருடைய குடும்பத்தினரும் பட்டாடை களை அணிவதில்லை. கதராடைக்கு மாறினர்.
விலையுயர்ந்த சிகரெட் அவர் உதட்டிலிருந்து விடை பெற்றது. அணிந்திருந்த நகைகளை உதறினார். வெற்றிலை பாக்கு பழக்கமும் விடைபெற்றது.
1919 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமிர்தசரஸ் நகரில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து 300 பேர் அந்த மாநாட்டிற்குச் சென்றனர். ராமசாமி நாயக்கர் தன்னுடன் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையையும் அழைத்துச் சென்றார்.
தேச விடுதலைக்காக தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்த வ.உ.சி. அப்பொழுது மிகவும் வறுமையான நிலையில் இருந்தார்.
1920 ஆம் ஆண்டு செப்டம்ர் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறப்பு மாநாடு கல்கத்தாவில் நடைபெற்றது. ராமசாமி நாயக்கர் அதிலும் கலந்து கொண்டார். காங்கி ரஸ் இயக்கத்தின் வரலாற்றில் அந்த மாநாடு முக்கியமான ஒன்று.
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குவது என்று அந்த மாநாடு முடிவு செய்தது.
ஆங்கிலேய அரசாங்கத்தின் விருதுகளையும், கௌரவப் பட்டங்களையும் திருப்பித் தந்து விடவேண்டும். உள்ளாட்சி அமைப்பில் நியமனம் செய்யப்பட்டவர்கள் ராஜினாமா செய்து விடவேண்டும். அரசாங்கத்திற்குச் சொந்தமான அல்லது அதன் நிதிஉதவி பெற்று நடத்தப்படுகிற பள்ளிகள், கல்லூரிகளை மாணவர்கள் புறக்கணிக்கணிக்க வேண்டும்.
அவற்றுக்குப் பதிலாக தேசியப் பள்ளிகள், கல்லூரி களை நிறுவ வேண்டும். ஆங்கிலேய நீதிமன்றங்களை வழக்கறிஞர்களும், மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
ஈரோடுக்கு திரும்பிய நாயக்கர், காங்கிரஸ் மாநாட்டு முடிவை நிறைவேற்றும் பணியில் இறங்கினார். அன்னியத் துணியைப் புறக்கணித்து கதர்த்துணியை வாங்கி உடுத்துமாறு ஊர் ஊராக, கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.
கதர்த்துணி மூட்டையை தோளில் சுமந்து சென்று ஆங்காங்கே கடைவிரித்து மக்களை கவர்ந்திழுக்குமாறு பேசுவார். நீங்கள் கதர்த்துணி வாஙகுவதன் மூலம் கதரை நூற்கக் கூடிய, அந்த நூலை நெய்யக்கூடிய ஏழை எளிய மக்களின் வயிற்றுப் பசியைப் போக்குகிறீர்கள் என்று கூடியிருக்கும் மக்களைப் பார்த்து உள்ளம் உருகப் பேசுவார்.
ராமசாமி நாயக்கர் தீவிர கதர்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டவுடன் நிலைமையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஏராளமானோர் கதர் வாங்கி உடுத்த முன்வந்தனர். இதன் விளைவாக கதர் விற்கும் கடைகள் பல ஊர்களில் தோன்றின. தமிடிநாட்டில் நாயக்கர் முன்முயற்சியால் கதர்த்துணி பிரச்சாரமும் விற்பனையும் அதிகரிப்பதைக் கண்ட காந்திஜி மகிழ்ச்சி அடைந்தார்.
ஆங்கிலேய நீதிமன்றங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற மாநட்டு முடிவை அவரும் அமுல்படுத்தினார். ஆனால் அவர் நிறைவேற்றிய விதத்தை யாருமே கற்பனை செய்துகூட பார்த்திருக்க முடியாது.
நாயக்கர் குடும்பத்திடமிருந்து கடன் பெற்றர்வகள் கடன் பத்திரங்களை எழுதிக் கொடுத்திருந்தனர். 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அப்படி பத்திரங்கள் இருந்தன. அவ்வளவும் நீதிமன்றத்தில் செல்லுபடியாகக் கூடிய பத்திரங்கள்.
அவற்றில் ஒரே ஒரு அடமானப் பத்திரம் மட்டுமே 28 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளது.
ஒரு பவுன் தங்கம் 12 ரூபாய் ரூபாய் என்று விற்றுக் கொண்டிருந்த நேரத்தில் 50 ஆயிரம் ரூபாயை கொள்கைக் காக இழப்பது என்பது சாதாரணமான விஷயமில்லை.
இன்றைய ரூபாய் மதிப்பில் கூறுவதென்றால் அது பல கோடி ரூபாய்க்கு சமமானது.
1921 ஆம் ஆண்டு ராமசாமி நாயக்கர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
கள்ளுக்கடைகளுக்கு முன் மறியல் செய்யும்படி காந்திஜி கூறியிருந்தார்.
ஏழை எளிய மக்கள் தங்களுக்கு கிடைக்கும் சிறிதளவு கூலிப் பணத்தையும் கள்ளுக் கடைக்கு கொடுத்து விட்டு குடும்பத்தை பட்டினி போட்டனர். தங்கள் உடல் நலத்தையும் கெடுத்துக் கொண்டனர்.
வட இந்தியாவில் பனைமரங்களில் இருந்து கள் இறக்கு வதால் அந்த மரங்களை வெட்டி விட்டால் அது மதுவிலக்கு லட்சியத்திற்கு நல்லது என்று காந்தி கூறினார்.
தமிழ்நாட்டில் பனைமரத்தில் இருந்தும், தென்னை மரத்தில் இருந்தும் கள் இறக்குவதுண்டு. சொல்லப் போனால் பனங் கள்ளைவிட தென்னங் கள்ளுக்கு விலை யும் சற்று அதிகம். காந்திஜியின் அறிக்கையை கண்ட நாயக் கர் உடனே ஒரு முடிவுக்கு வந்தார்.
மதுவிலக்குக் கொள்கையை ஏற்பதற்கு முன்பு சேலம் தாதம் பட்டியிலிருந்த அவரது குடும்பத்தின் தென்னந் தோப்பை கள் இறக்குவதற்காக குத்தகைக்கு விட்டிருந் தார்கள். குத்தகைதாரருக்கு நஷ்ட ஈடுகொடுத்து குத்த கையை முறிக்க நாயக்கர் முனைந்தார். ஆனால் குத்தகை தாரர் அதற்கு உடன்படவில்லை.
இதைக் கண்ட நாயக்கர் வேறொரு திட்டமிட்டார்.
ஒரு முடிவெடுத்தால் எப்படியும் நிறைவேற்றுவது ராமசாமி நாயக்கருக்கு பழக்கம். அவர் விடுவாரா?
மரம் வெட்டும் பலரை ஒருநாள் மாலை தனது தென்னந் தோப்புக்கு அழைத்து வந்தார். இரவோடு இரவாக 500 தென்னை மரங்களையும் வெட்டி வீழ்த்தச் செய்தார். அடுத்தநாள் காலையில், வழக்கம்போல் கள் இறக்க வந்த குத்தகைதாரர் அதிர்ச்சியடைந்து போய்விட்டார். செல்வாக்கு மிக்க நாயக்கருக்கு எதிராக அவர் என்ன செய்ய முடியும்?
ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகத் திற்கும் தயாராக இருப்பார். கள்ளுக் கடை முன் மறியல் செய்வதைக் காட்டிலும் கள் இறக்குவதற்கு காரணமான மரங்களை வெட்டி விடலாம் என்கிற அளவுக்கு தீவிரம் காட்டியவர் ராமசாமி நாயக்கர்.
சுதந்திரப் போராட்ட லட்சி யத்திற்காக அனைத்தையும் இழப்பது என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்துவிட்டாரே.
ஈரோடு நகரில் கள்ளுக் கடைகளுக்கு முன்பாக மறியலைத் துவக்கினார். அவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ்காரர்களும் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு 1 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். இதுதான் நாயக்கரின் முதல் சிறை வாசம்.
சிறையிலிருந்து விடுதலையான நாயக்கர் மீண்டும் மறியல் போராட்டத்தை துவக்கினார். தமிழ்நாட்டில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு இந்தப் போராட்டம் வலுவாக இருப்பதைக் கண்ட ஆங்கிலேய அரசாங்கம் அந்நகரில் 144 தடை விதித்தது. தடையை மீறி மறியலில் ஈடுபட்ட நாயக்கர் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து நாயக்கரின் மனைவி நாகம்மா ளும், தங்கை கண்ணம்மாளும் மறியலில் ஈடுபட்டனர். இவர்களோடு சேர்ந்து ஆயிரக்கணக்கான பெண்களும் மறியலில் குதித்தனர். நாயக்கர் குடும்பத்துப் பெண்களை கைது செய்தால் நிலை கட்டுமீறிப் போய்விடும். பெரும் கலவரம் வெடித்துவிடும் என்றுணர்ந்த மாகாண நிர்வாகம் 144 தடை உத்தரவை ரத்து செய்தது.
இந்தியப் பத்திரிகைகள் இந்தப் போராட்டம் குறித்த செய்தியினை பிரசுரித்திருந்தன. நாயக்கர் குடும்பம் நாடு முழுவதும் பிரபலமாகி விட்டது. மறியல் போராட்டச் செய்திகளை கூர்ந்து கவனித்து வந்த காந்தி, தன்னுடைய ‘யங் இந்தியா’ பத்திரிகையின் 1921 டிசம்பர் 28 ஆம் தேதி இதழில் ஈரோடு மறியலைப் பற்றி பெருமையாக எழுதினார்.
இந்தப் போராட்டத்தை நிறுத்த முயற்சி நடைபெற்றது. ஆனால், காந்தி சொன்ன பதில்,
“மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை. அது ஈரோட்டிலுள்ள இரண்டு பெண்களிடம் இருக்கிறது அவர்களைக் கேட்க வேண்டும்.”
காந்தியின் இந்த பதிலுக்கு காரணம் இருக்கிறது.
கள்ளுக்கடை மறியல் செய்வதாக முதன் முதலில் முடிவு செய்த இடம் ஈரோடுதான். ஈ.வெ.ரா. வீட்டில் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கூடிய போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
1920 ஆம் ஆண்டு முதல் இரட்டை ஆட்சி முறை அமுலாக்கப்பட்டது.
முதல் தேர்தல் 1920 ஆம் அண்டு நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நீதிக்கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.
இந்த ஆட்சியில்தான், 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி ‘முதல் வகுப்புவாரி உத்தரவு’ பிறப்பிக்கப்பட்டது.
இரண்டாவது வகுப்புவாரி உத்தரவு 1922 ஆம்ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
மற்றொரு முக்கியமான சட்டத்தையும் நீதிக்கட்சி அரசாங்கம் இயற்றியது. 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். ஆண்கள் மட்டுமே சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்ற நிலை இருந்தது. பெண்களுக்கு வாக்களிக் கவோ, போட்டியிடவோ உரிமை கிடையாது.
இதை மாற்றுவதற்காக சென்னை சட்டமன்றக் கவுன்சில் நீதிக் கட்சியைச் சேர்ந்த கிருஷ்ணன் நாயர் என்ற உறுப்பினர் 1921 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். சட்டமன்றக் கவுன்சி லுக்கு வாக்களிக்கவும், போட்டியிடுவதற்கும் ஆண்களுக்கு உள்ள உரிமைகள் பெண்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கோரியது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பின்னர் சட்டமாக ஆகியது.
இன்னொரு சட்டத்தின்படி மத அறக்கட்டளைகளில் உபரியாக இருக்கும் பணத்தை கல்விக்காவும், பக்தர்கள் கூடும் இடங்களில் சுகாதார வசதி செய்து கொடுப்பதற் காகவும் பயன்படுத்தலாம் என்று கூறியது.
காங்கிரஸிலிருந்த பிராமணத் தலைவர்கள் பலர் இதை வன்மையாக எதிர்த்தனர். இது மதத்தின் உள்விவகாரங் களில் தலையிடும் முயற்சி எனக் கண்டித்தனர். ஆனால் காங்கிரசில் இருந்த ராமசாமி நாயக்கர் இதை முழுமன துடன் வரவேற்றார்.
1923 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டமன்றக் கவுன்சிலுக்கு இரண்டாவது பொதுத்தேர்தல் நடைபெற் றது. நீதிக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்தாலும் உறுப்பினர் பலம் குறைந்து விட்டது.
இந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வந்தது. ஆனால் அது தேர்தலை புற்க்கணித்த தால் நீதிக்கட்சி திரும்பவும் ஆட்சிக்கு வர முடிந்தது.

You may also like
அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
வெளிநாட்டில் கல்வி – AMBEDKAR LIFE HISTORY – 2
1.நெருப்பு பிறந்த வேளை… – DR.AMBEDKAR LIFE HISTORY – 1
வைக்கம் வீரர் பெரியார் – PERIYAR LIFE HISTORY – 5
திமுகவின் குடும்ப அரசியல் – #DMK #HITORY_OF_FAMILY_POLITICS_IN_INDIA -PART-2

Leave a Reply