தமிழ் சினிமாவில் ‘ஆந்தாலஜி’ சீசன் துவங்கியிருக்கிறது என்று கூறலாம் தமிழிலிருந்து அடுத்த ஆந்தாலஜி திரைப்படமாக ‘பாவக்கதைகள்’ வெளியாக இருக்கிறது. படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
திரையரங்கம் முழு வீச்சில் செயல்படாமல் முடங்கிக் கிடப்பதாலும், சினிமா ரசிகர்கள் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் படம் பார்க்க தொடங்கிவிட்டதாலும், தமிழ் சினிமா இயக்குநர்கள் OTTபக்கம் சாய்ந்துவிட்டார்கள்.
அதோடு, OTTயில் ஆந்தாலஜி படங்களையும் தொடர்ச்சியாக இயக்கிவருகிறார்கள்.
சமீபத்தில் பிரைம் வீடியோவில் ‘புத்தம் புது காலை’ ஆந்தாலஜி படத்துக்கு நல்ல வரவேற்பு. ராஜீவ் மேனன், கெளதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், சுதா கொங்கரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் என ஐந்து இயக்குநர்கள் காதல் சார்ந்த களத்தில் ஒவ்வொரு கதையை இயக்கியிருந்தார்கள்.
தமிழில் ஆந்தாலஜி சினிமா ஒன்றும் புதிதல்ல… சமீபத்தில் கூட ஹலிதா சமீம் இயக்கத்தில் ‘சில்லுக்கருப்பட்டி’ எனும் படம் திரையரங்கில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைக்குரிய தன்மையும், வடிவமைப்பும் அதோடு, திரையில் கதை சொல்லும் திறமையுமே ஆந்தாலஜி படங்களின் சிறப்பு என கூறலாம் அடுத்தடுத்து தயாராகி வரும் ஆந்தாலஜி படங்கள் எவை என விசாரித்த போது
பிரைம் வீடியோவுக்கு புத்தம்புது காலை படம் வெளியாகிவிட்டது.
இதைத்தொடர்ந்து, மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரிக்கும் ‘நவரசா’ தயாராகிவருகிறது. கே.வி.ஆனந்த், கவுதம் மேனன், கார்த்திக் நரேன், பொன்ராம், ஹலிதா சமீம், அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார், ஜெயந்திரா மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் இது உருவாகிவருகிறது.
இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், ஜிப்ரான், இமான், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகரன், அருள்தேவ், கார்த்திக், ரோன் எத்தன் யோஹான் பணியாற்றுகிறார்கள்.
ஆக, ஒன்பது கதைகள், ஒன்பது இயக்குநர்கள், ஒன்பது இசையமைப்பாளர்கள் என பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது நவரசா.
வேல்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ஆந்தாலஜி தான் ‘குட்டி லவ் ஸ்டோரி’.
இந்த ஆந்தாலஜியை கௌதம்மேனன், வெங்கட் பிரபு, விஜய் மற்றும் நலன் குமாரசாமி என நான்கு பேரும் ஒவ்வொரு கதையை இயக்குகிறார்கள்.
வெங்கட் பிரபுவின் ப்ளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பிலும் ஒரு ஆந்தாலஜி ரெடியாகி வருகிறது. அதில், வெங்கட் பிரபு, பா.இரஞ்சித், ராஜேஷ் மற்றும் சிம்பு தேவன் ஆகியோர் ஒரே கருவில் நான்கு கதைகளை இயக்குகிறார்கள்.
இந்த அந்தாலஜிக்கு ‘விக்டிம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பட்டியலில் அடுத்த ஆந்தாலஜி ரிலீஸ் தான் நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘பாவக்கதைகள்’. இந்த ஆந்தாலஜியை, வெற்றிமாறன், சுதா கொங்கரா, கெளதம் மேனன் மற்றும் விக்னேஷ் சிவன் என நான்கு இயக்குநர்கள் இயக்குகிறார்கள்.
இதில், சுதா கொங்கரா இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம், சாந்தனு பாக்கியராஜ் நடிக்கிறார்கள். விக்னேஷ் சிவன் கதையில் அஞ்சலி, கல்கி கொச்சிலின் நடிக்க, வெற்றி மாறன் கதையில் ஹரி, பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி ஆகியோரும், கௌதம் மேனன் கதையில் அவரும், சிம்ரனும் நடிக்கிறார்கள்.
நெட்ஃபிளிக்ஸிலிருந்து முதல் தமிழ் ஆந்தாலஜி இது. இதன் டீஸர் தான் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ஆந்தாலஜியானது, வரும் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாக இருக்கிறது.