Home > சினிமா > T.ராஜேந்தர் மீது நடவடிக்கையா

T.ராஜேந்தர் மீது நடவடிக்கையா

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன.

தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் சொன்னார் டி.ராஜேந்தர். அது தொடர்பாகப் பதிவாளர் அலுவலகத்திலும் புகாரளித்துள்ளார்.

அதோடு நில்லாமல், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற பெயரில் புதிய சங்கத்தைத் தொடங்கப்போவதாகவும் சொல்லப்படுகிறது.

புதியசங்கம் தொடர்பான அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்றிரவு தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் முரளி இராமநாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்….

சக தயாரிப்பாளர்களுக்கு வணக்கம்.

நமது வாழ்க்கையை மறுமலர்ச்சி அடையச்செய்ய, ஜனநாயக ரீதியில் நடைபெற்ற நமது சங்கத் தேர்தலில், சங்கத்திற்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்த அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்கள் கலந்துகொண்டு, வெற்றிச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்த பதவி ஏற்பு விழாவிற்குப் பெருந்திரளாக வந்திருந்து நம் ஒற்றுமையை நிலைநாட்டிய அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் நமது சங்கத்தின் அனைத்து நிர்வாகிகளின் சார்பாக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தற்போது வி,பி,எப் கட்டணம் சம்பந்தமாக நடந்துள்ள குளறுபடிகளைச் சுட்டிக்காட்டி தயாரிப்பாளர்கள் வி.பி.எப். கட்டணம் கட்ட இயலாது என்ற நமது நிலைப்பாட்டினைக் குறிப்பிட்டு டிஜிட்டல் புரவைடிங் நிறுவனங்களுக்கு நமது சங்கம் சார்பாகக் கடிதம் எழுதி உள்ளோம்.

மேலும் திங்கட்கிழமை நடைபெற உள்ள செயற்குழுவில் வி.பி.எப். கட்டணம் குறித்து விரிவாக ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்ததாக நமது மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்கள்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தான் நிரந்தரமானது என்று குறிப்பிட்டு நம் சங்கத்தை பெருமைப்படுத்தியிருப்பதற்காக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நமது தயாரிப்ப்பாளர்கள் சங்கம் சார்பாக ஒவ்வொருவரும் இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒற்றுமையே உயர்வு. அப்படிப்பட்ட நமது சங்கத்தின் ஒற்றுமையைச் சீர் குலைக்கும் வகையில் சங்க நலனிற்கும்.

சக தயாரிப்பாளர்களின் நலனிற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் யார் பேசினாலும் சரி, யார் செயல்பட்டாலும் சரி அவர்கள் மீது சங்க விதிகளுக்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த நிர்வாகம் தயங்காது என்று உறுதி படக் கூறிக்கொள்கிறேன்.

நமது சங்கம் .. நமது வலிமை..

நம்மை பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டோம். ஒன்று படுவோம் உயர்வடைவோம். நன்றி.. வணக்கம்.

என்றென்றும் அன்புடன்
முரளி இராமநாராயணன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தலில் தோல்வியுற்ற டி.ராஜேந்தர் தலைமையில் புதிய சங்கம் உருவாகும் என்று சொல்லப்பட்டிருக்கும் நிலையில் முரளி வெளீயிட்டுள்ள இந்த அறிவிப்பு முழுக்க முழுக்க டி.ராஜேந்தருக்கானதே என்று சொல்லப்படுகிறது.

இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You may also like
அந்தக் காலத்திலேயே கெத்தாக பைக் ஓட்டிய நடிகை கே.ஆர் விஜயா
சோனு சூட் மேற்கொண்ட அதிவிரைவு உதவி
ஹீரோ பிரபாஸ் ரூ. 1கோடி நிதி உதவி …

Leave a Reply