Home > சினிமா > மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடத்தை ஒப்படைக்காத தமிழக அரசு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடத்தை ஒப்படைக்காத தமிழக அரசு

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை தோப்பூர் பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை ரூபாய் 1, 266 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டது.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதற்கான நிதியை, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ஜிக்கா கடனாக வழங்குகிறது.

இரண்டு வருடங்கள் ஆன போதிலும் இதுவரை கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தொடங்கவில்லை.

தற்போது, சுற்றுச் சுவர் அமைக்கும் பணி மட்டுமே நடந்துள்ளது. எனினும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது.

இந்நிலையில் தென்காசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து கேள்வி எழுப்பினார்.

எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்கும், முடியும் மாதம், மருத்துவப் படிப்புகள் எப்போது துவங்கும், கடன் வாங்கும் விவகாரம் எப்படி இருக்கிறது உள்பட 17 கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில், “மதுரை எய்ம்ஸ்க்கு, ஜிக்காவிடம் கடன் பெறும் நடவடிக்கை இன்னும் முடியவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தானால் தான் கடன் விபரம் தெரிவிக்கப்படும்.

ஒப்பந்தம் கையெழுத்து ஆன பின்னர் உடனடியாக கட்டுமான பணி தொடங்கும்” என்று தெரிவித்துள்ளது. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசு இன்னும் இடம் தரவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என சமீபத்தில் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply