Home > சினிமா > சித்ரா தற்கொலைக்கு காரணம் என்ன ஹேம்நாத் வழக்கறிஞர் விளக்கம்

சித்ரா தற்கொலைக்கு காரணம் என்ன ஹேம்நாத் வழக்கறிஞர் விளக்கம்

நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல்துறையினர் கைது செய்து பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனர்.

ஹேம்நாத்தை விசாரணைக்காக ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ பொன்னேரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். நேற்று காலை 8.20 மணிக்கு ஹேம்நாத் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ சித்ராவின் தாய், தந்தை மற்றும் ஹேம்நாத்தின் தாய், தந்தை ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நேற்று விசாரணை நடத்தினார்.

8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்து ஹேம்நாத் தகுந்த பாதுகாப்புடன் காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை முடிந்து நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பதால் பொன்னேரி கிளைச்சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம் என சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் ஆர்.டி.ஓ விசாரணை முடிந்த பின் ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது….

விசாரணை ஒரு பக்கமாகவே நடைபெறுவதாக தெரிகிறது. சித்ராவின் நெருங்கிய வட்டாரங்களில் விசாரணை நடைபெற்றதாகத் தெரியவில்லை.

என் மகனிடம் 6 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில் 7 ஆவது நாள் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு முன்பு அவசர அவசரமாகக் கைது செய்யப்பட்டார்.

சித்ராவின் செல்போன் தகவல்களை முறையாக ஆராய்ந்து, அதில் கிடைக்கும் உண்மைத் தகவல்களை ஆராய வேண்டும். சித்ராவுக்கு ஏதோ ஒரு வகையில் பெரிய மன அழுத்தம் இருந்துள்ளது.

சித்ரா தற்கொலை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தன் வீட்டின் மீது தான் வாங்கிய கடன் தொகையைச் செலுத்தப் பணம் தரும்படி என்னிடம் கூறியபோது நான் சம்மதம் தெரிவித்தேன். ஆகையால் ஏதேனும் பொருளாதாரப் பிரச்சினையில் அவர் சிக்கினாரா? இல்லை அது சம்பந்தமாக யாரேனும் மிரட்டினார்களா எனத் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

ஹேம்நாத்தின் வழக்கறிஞர் விஜயகுமார் கூறுகையில்…..

தனிப்பட்ட இருவரின் சண்டையால் இந்தத் தற்கொலை நடைபெறவில்லை. இது ஒரு பிரபலத்தின் தற்கொலை என்பதை நினைவில் வைத்து விசாரணை நடத்த வேண்டும்.

சித்ரா கார் வாங்கியுள்ளார். புதிதாக வீடு கட்டியுள்ளார். இதனால் பொருளாதார ரீதியாக பிரச்சினை வந்து இருக்கலாம். அது குறித்த விசாரணையையும் நடத்த வேண்டும். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Leave a Reply