Home > சினிமா > கார்த்தியின் ‘சுல்தான்’ – உடான்ஸா? உண்மையா?

கார்த்தியின் ‘சுல்தான்’ – உடான்ஸா? உண்மையா?

இப்போதைய முன்னணி நடிகர்களில் அண்ணன் –தம்பிகளான சூர்யாவும் கார்த்தியும் தான் உண்மையான சமூக அக்கறை கொண்டவர்கள். ஏழை—எளிய மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் உயரிய நோக்கத்துடன் ‘அகரம் பவுண்டடேஷன்’ மூலம் சீரிய கல்விச் சேவை ஆற்றி வருகிறார் சூர்யா. அவரது தம்பியான கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் மூலம் நலிந்த விவசாயிககளுக்கு தோள் கொடுத்து வருகிறார். இதற்கெல்லாம் காரணம் இவர்களது தந்தையான நடிகர் சிவகுமாரின் வார்ப்பும் வளர்ப்பும் தான் என்றால் மிகையாகாது.

சரி, இப்ப சுடச்சுட சுல்தான் மேட்டருக்கு வருவோம்.

போனவருடம் அதாவது 2020 மார்ச் மாதம் கிளம்பிய கொரோனா பீதி, இந்த 2021 மார்ச்சில் மீண்டும் கிளம்பி இந்தியாவையே அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்தில் வேலை செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள் மீண்டும் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். தமிழகத்தில் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்ததும் லாக்—டவுன் அமலுக்கு வருமோ என்ற அச்சத்திலும் வரும் என்ற பயத்திலும் மக்களின் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

அனைத்துத் தொழில்களுக்கும் இருக்கும் லாக்டவுன் அச்சம் சினிமாத் தொழிலையும் விட்டுவைக்கவில்லை. 2021 பொங்கலுக்கு ரிலீசான விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் தான் தியேட்டர் அதிபர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. ஆனால் அதன் பின் ரிலீசான படங்களும் அத்தனையும் பப்படமாக்கிவிட்டதால் தியேட்டர்கள் மீண்டும் காத்தாட ஆரம்பித்துவிட்டன. வெற்றிகரமான இரண்டாவது நாள் என பல படங்களுக்கு விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.

இந்த நிலையில் தான் பாக்யராஜ் கண்ணன் டைரக்ஷனில் கார்த்தி—ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘சுல்தான்’ படத்தை சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ரிலீஸ் பண்ணலாம் என்ற ஐடியாவில் இருந்தார் படத்தின் தயாரிப்பாளரான கார்த்தியின் நெருங்கிய உறவினர் எஸ்.ஆர்.பிரபு. ஹீரோ கார்த்தியும் அதே மனநிலையில் தான் இருந்தார்.


ஆனால் ஓட்டுப் பதிவு நாளான ஏப்ரல்-06—ஆம் தேதிக்குப் பிறகு 08—ஆம் தேதியோ 10—ஆம் தேதியோ தமிழகத்தில் லாக்—டவுன் அமலுக்கு வரலாம் என்ற பீதி கிளம்ப ஆரம்பித்துவிட்டதால் எஸ்.ஆர்.பிரபுவுக்கு வாந்தி—பேதி ஆகிவிட்டதாம். மீண்டும் லாக்—டவுன் வந்தால் ‘சுல்தான்’ படத்தை ரிலீஸ் பண்ண எத்தனை மாதங்கள் ஆகுமோ? முதல் போட்ட பல கோடி ரூபாயின் கதி என்னாகுமோ? என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர் கார்த்தியும் பிரபுவும்.

அதனால் ஏப்ரல்—02—ஆம் தேதியே சுல்தானை ரிலீஸ் பண்ணினால் ஒரு வார கலெகஷனில் தப்பித்துவிடலாம் என்ற முன் ஜாக்கிரதையுடன் களம் இறங்கிவிட்டனர். ‘சுல்தான்’ படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சியும் மார்ச்.25—ஆம் தேதியே திரையிடப்பட்டது.

படத்தின் பிஸ்னசையும் வேகப்படுத்தினார்கள் பிரபுவும் கார்த்தியும். மார்ச்.31—ஆம் தேதி வரை தமிழக தியேட்டர் அதிபர்கள் படத்தை வாங்க தயக்கம் காட்டினார்கள். ஆனாலும் அசராத தயாரிப்பாளர் பிரபு அமெரிக்காவில் 108 தியேட்டர்களையும் சிங்கப்பூரில் 35 தியேட்டர்களையும் கன்ஃபார்ம் பண்ணினார். மார்ச்.31—ஆம் தேதி நள்ளிரவு தான் தமிழகத்தில் சுல்தான் ரிலீஸ் செய்யப்படும் தியேட்டர்கள் உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவுல மைக்கேல் ஜாக்சன் கூப்ட்டாக, ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்ட்டாகங்கிற கதையா அமெரிக்கா, சிங்கப்பூர் தியேட்டர்களின் முழுப்பட்டியலையும் ரிலீஸ் செய்தார் எஸ்.ஆர்.பிரபு.

கார்த்தியின் ‘சுல்தான்’ உடான்ஸா? உண்மையாங்கிறது ஏப்ரல்-02—ஆம் தேதி சாயங்காலம் தெரிஞ்சுடப் போகுது.

–சீமராஜா

You may also like
தப்பித்தார் சுல்தான்! தப்புவாரா கர்ணன்?

Leave a Reply