விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் வெளியாகவிருக்கிறது என்கிற செய்தி பரவியதால் பரபரப்பு நிலவுகிறது.
திடீரென இப்படி ஒரு தகவல் பரவியது எதனால்? என்று விசாரித்தால் அதன் பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது.
முதலில் நெட்ப்ளிக்ஸ் இணையத்தில் படம் வெளியாகவிருக்கிறது என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று. ஏனெனில் இந்தப்படத்தின் இணைய வெளியீட்டு உரிமை ஏற்கெனவே அமேசான் நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அதை இரத்து செய்துவிட்டு நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்துக்குக் கொடுக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றாலும் அது எளிதில் நடந்துவிடக்கூடியதல்ல என்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது நெட்ப்ளிக்சில் படம் வெளியாகவிருக்கிறது என்று செய்தி பரவியது எப்படி?
இந்தப்படத்தை ஏற்கெனவே சொன்னபடி 2021 பொங்கல்நாளில் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு அதற்காக திரையரங்குகளோடு ஒப்பந்தம் போடத் தொடங்கியிருக்கிறார்கள்.
அங்கு தொடங்கியிருக்கிறது சிக்கல்.
பொதுவாக விஜய் படம் போன்ற பெரிய படங்கள் வெளியாகும் போது சென்னை, செங்கல்பட்டு மற்றும் மல்டிப்ளெக்ஸ் எனப்படும் வணிகவளாகத் திரையரங்குகளில், நுழைவுச்சீட்டுக் கட்டணத்தில் 50 விழுக்காடு தயாரிப்பாளருக்கு 50 விழுக்காடு திரையரங்குக்காரர்களுக்கு எனப் பங்கிடுவார்கள்.
திருச்சி,சேலம்,கோவை உள்ளிட்ட மற்ற விநியோகப்பகுதிகளில் இது தயாரிப்பாளருக்கு எழுபது திரையரங்குக்கு 30 என்கிற மாதிரி பகிரப்படும்.
முதல்வாரம் இப்படி அடுத்த வாரம் சில மாற்றம் என்று பங்கீடு இருக்கும்.
இப்போது மாஸ்டர் படத்தைத் திரையிடும் ஒப்பந்தம் பற்றிப் பேசத்தொடங்கும் போதே, ஏற்கெனவே பிகில்,சர்கார் போன்ற விஜய் படங்களுக்கு இருந்தது போன்றே பங்கீடு இருக்கவேண்டும் என்று திரையரங்கினர் சொல்லியிருக்கிறார்கள்.
அதை தயாரிப்பாளர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லையாம்.
இந்தப்படம் கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து வெளியாவதால் இதன் முதலீட்டுச் செலவு பன்மடங்கு அதிகமாகிவிட்டது.
அதோடு, கேரளா மற்றும் வெளிநாடுகளில் திரையரங்குகள் முழுமையாகத் திறக்கப்படாத நிலை இருக்கிறது. எனவே அங்கிருந்து கிடைக்கும் வசூலும் கிடைக்காமல் போகிறது.
எனவே, இந்தப்படத்திற்கான வசூலில் தயாரிப்பாளருக்கான பங்கு வழக்கத்தைவிட பத்து அல்லது பதினைந்து விழுக்காடாவது அதிகமாக இருக்க வேண்டும் அதாவது ஐம்பது என்பதை அறுபது அறுபத்தைந்து என்று அதிகப்படுத்தித் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
இதற்கு திரையரங்குக்காரர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்களாம்.
எனவே, திரையரங்குகளில் வெளீயிட்டால் கிடைக்கும் வசூல் தொகையைக் காட்டிலும் கூடுதலாகப் பணம் தருவதாக ஒடிடி தளங்களில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அதையும் மீறி இந்தப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகும் என கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நினைக்கிறோம், ஆனால் வசூல் பங்கீட்டில் நீங்கள் பிடிவாதமாக இருந்தால் எங்களுக்கு ஓடிடிக்குப் போவதைத் தவிர வேறுவழியில்லை என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்பட்டதாம்.
இதனாலேயே மாஸ்டர் நெட்ப்ளிக்சில் வெளியாகிறது என்ற செய்தி வேகமாகப் பரவியிருக்கிறது.
இப்போது, வசூல் பங்கீடு தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மல்டிப்ளெக்ஸ் தவிர பெரும்பாலான திரையரங்குக்காரர்கள் தயாரிப்பாளர் சொல்வது நியாயம் என்று சொல்வதால் விரைவில் சுமுக முடிவு எட்டப்பட்டு மாஸ்டர் திரைப்படம் பொங்கல் நாளில் திரையரங்குகளில் வெளியாகும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.