Home > சினிமா > மாணவர்களின் மனதில் ஹீரோவான வில்லன் சோனு சூட்

மாணவர்களின் மனதில் ஹீரோவான வில்லன் சோனு சூட்

கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி, அருந்ததி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடிகர் சோனு சூட் நடித்துள்ளார். தனது படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சோனு சூட், நிஜ வாழ்க்கையில் பலருக்கும் ரியல் ஹீரோவாக இருந்து வருகிறார்.

குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில், பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருக்கும் நடிகர் சோனு சூட் மற்றும் அவரது குழுவினர் உதவி செய்து வருகின்றனர். தற்போது, சர்வதேச விமான சேவை தடையால், ரஷ்யாவில் சிக்கியிருந்த தமிழக மருத்துவ மாணவர்களை மீண்டும் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்துள்ளார் நடிகர் சோனு சூட்.

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் சிக்கியிருந்த தமிழக மாணவர்கள், சொந்த ஊருக்கு செல்ல உதவுமாறு நடிகர் சோனு சூட்டிடம் சமூக வலைதளங்கள் வாயிலாக உதவி கேட்டுள்ளனர். இதையடுத்து, ஸ்பைஸ் ஜெட் தனி விமானம் மூலம் அவர்களைச் சென்னை அழைத்து வர உதவியுள்ளார் சோனு சூட். இந்த விமானம் மாஸ்கோவில் இருந்து கிளம்பி ஆகஸ்ட் 5 காலை சென்னை வந்தடைந்தது இதில் வந்த அனைத்து மாணவர்களும் சோனு சூட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் விமானத்தில் வந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. “ஜூலை 3ஆம் தேதி ஏற்பாடு செய்த வந்தே பாரத் திட்டத்தின் மூலம், எங்களால் வர முடியவில்லை. ஏனென்றால் எங்களது பாட வகுப்புகள் ஜூலை 6ஆம் தேதி தான் முடிவடைந்தது. இதையடுத்து, எந்தவொரு வந்தே பாரத் விமானங்களும் இனிஇருக்காது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நாங்கள் அனைத்து அதிகாரிகளுக்கும், இந்தியா அழைத்துச் செல்ல கோரி மெயில்களை அனுப்பத் தொடங்கினோம். இந்நிலையில் நடிகர் சோனு சூட் உதவியால் இங்கு வந்துள்ளோம். நான் அவரது தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் உதவி செய்ததால் நான் இதை சொல்லவில்லை. ஒரு வில்லன் நடிகராக அவர் இருந்தாலும் இன்று எங்களுக்கு உண்மையான ஹீரோ சோனு சூட்” என்று மாஸ்கோவில் இருந்து வந்த மாணவி சக்தி பிரியதர்ஷினி கூறியுள்ளார்.வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்டு வரச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, சட்ட போராட்டம் நடந்து வரும் நிலையில், நடிகர் சோனு சூட் இந்த உதவியை செய்திருக்கிறார்.

முன்னதாக ஆந்திர விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது உட்பட பலருக்கும் சோனு சூட் உதவி செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like
தனது 8 சொத்துக்களை 10 கோடிக்கு வங்கியில் அடமானம் வைத்த சோனு சூட்
பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கு: 70 வயது மருத்துவருக்கு சிறை
மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம்
தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பங்கள் நடைபெற்று வருகிறது.
முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.

Leave a Reply