Home > சினிமா > சினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா வைகைப் புயல்?

சினிமாவுக்கு குட்பை சொல்கிறாரா வைகைப் புயல்?

தனது சிஷ்யன் சிம்புதேவனுக்காக ‘இம்சை அரசன் 23—ஆம் புலிகேசி’ படத்தைத் தயாரித்தார் டைரக்டர் ஷங்கர். வைகைப்புயல் வடிவேலுவை வேற லெலவலுக்கு கொண்டு போன சினிமா அது. அதன் பின் அதே பாணியில் வைகைப்புயல் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் கைகொடுக்கவில்லை.

இதற்கிடையே 2011 சட்டமன்றத் தேர்தலின் போது தமிழகமெங்கும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரக் களத்தில் இறங்கி பட்டையைக் கிளப்பினார் வைகைப்புயல். அவருடைய முதல் பிரச்சாரக் கூட்டமே திமுக தலைவர் கலைஞர் போட்டியிட்ட திருவாரூரில்தான் என்பது சிறப்பு வாய்ந்தது. அப்போது திமுகவின் மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் மந்திரிகள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு, லட்சக்கணக்கில் அள்ளிக் கொடுத்து தங்களது தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது வடிவேலுவின் பிரச்சாரக் கலெக்ஷனுக்குப் பொறுப்பாளராக இருந்து அவர்கூடவே சென்ற ஒருவர், கோடிகளுக்கு அதிபதியாகி இப்போது கோடம்பாக்கத்தில் பெரிய தயாரிப்பாளராக வலம் வருகிறார் என்றால் வடிவேலுவுக்கு எவ்வளவு கலெக்ஷன் ஆகியிருக்கும் என்று கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அந்தத் தேர்தலில் திமுகவுக்கு தோல்வி ஏற்பட்டு, செல்வி.ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்ததும் வைகைப்புயலும் பயத்தால் நடுநடுங்கினார். சினிமா வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தன. திமுக ஆதரவு நிலைப்பாட்டில் வடிவேலு உறுதியாக இருந்திருந்தால் திமுகவும் அவருக்கு பக்கபலமாக இருந்திருக்கும். ஆனால் வடிவேலுவுடனேயே இருந்து சம்பாரித்த சிலரின் சந்தர்ப்பவாதத்தால், திமுக முன்னணியினரை பார்ப்பது மட்டுமல்ல, அவர்களின் போனை அட்டெண்ட் செய்யவே மறுத்தார் வைகைப்புயல்.

அதிமுக ஆட்சியின் முதல் இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் வைகைப்புயலை அணுகி இம்சை அரசன் 23—ஆம் புலிகேசியின் இரண்டாம் பாக கதையைச் சொன்னார் சிம்புதேவன். இரண்டாம் பாகத்தையும் தயாரிக்க முன்வந்து வடிவேலுவுக்கு ஒரு பெரிய தொகையை அட்வான்சாகக் கொடுத்து, படத்திற்கான அரண்மனை செட்டுகளையும் பிரம்மாண்டமாக போட ஆரம்பித்தார், படத்தின் தயாரிப்பாளாரான டைரக்டர் ஷங்கர்.

நிலைமை சுமுகமாக போய்க் கொண்டிருந்த நிலையில்தான் படத்தின் கதைய மாத்து சீனை மாத்து என சிம்புதேவனுக்கு குடைசல் கொடுக்க ஆரம்பித்தார் வைகைப்புயல். இதனால் டென்ஷனானாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை தயாரிப்பாளர் ஷங்கர். ஆனாலும் புயலின் குடைசல் குறையாததால் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் ‘இம்சை அரசனின் இரண்டாம் பாகம்’ நிறுத்தப்பட்டது.

இதனால் ஷங்கருக்கு 9 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் பலகட்டப் பஞ்சாயத்து நடந்தும் வைகைப்புயலின் முரட்டுப் பிடிவாதத்தால் முடிவு எதுவும் ஏற்படவில்லை. கடைசியாக வேறு வழியில்லாமல் வைகைப்புயலுக்கு ரெட்கார்ட் போட்டது கவுன்சில்.

தமிழ்ப்படங்களில் நடிக்க முடியாததால் மதுரையிலேயே டேரா போட்டார் வடிவேலு. தான் கொடிகட்டிப் பறந்த காலத்தில் சம்பாரித்த பணத்தை வைத்து மதுரை புறநகர்ப் பகுதியிலும் கொடைக்கானலிலும் பண்ணை வீடுகளையும் ரிசார்ட்டுகளையும் உருவாக்கியிருந்தார் வடிவேலு. அதை பராமரித்து பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார் வடிவேலு.

இந்த நிலையில் தான் நடிகர் கமல்ஹாசனின் (அப்போது அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை) ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் வைகைப்புயல் கமிட் ஆகியிருப்பதாக செய்தி பரவியது. மூன்று வருடங்களுக்கு மேலாகியும் அந்தப் படத்தின் கதி என்னாவானது என்று கமலுக்கே தெரியாத போது வடிவேலுவுக்கு மட்டும் தெரிந்துவிடவா போகிறது.

அதன் பின் டைரக்டர் ஷக்தி சிதம்பரம் தயாரிப்பில் ‘வாண்டு மாமா’ என்ற படத்தில் கதையின் நாயகனாக வடிவேலு நடிக்கப் போவதாக ஒரு செய்தி கிளம்பி, அது வடிவேலுவாலேயே மறுக்கப்பட்டது.

இது போல கடந்த பத்து வருடங்களில் வைகைப்புயல் நடிக்கும் சினிமாக்கள் பற்றிய செய்திகள் வருவதும் சில நாட்களிலேயே அது அமுங்கிப் போவதும் தொடர் கதையாகவே இருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், டைரக்டர் சுராஜ் (‘தலைநகரம்’ படத்தில் நாய் சேகராக வைகைப்புயலை டாப் கியருக்கு கொண்டு போனவர்) டைரக்ஷனில் ‘நாய் சேகர்’ என்ற படத்தின் ஹீரோவாக வடிவேலு நடிக்கப் போவதாக கடந்த வாரம் நியூஸ் கிளம்பியது.

இதெல்லாம் உண்மையா? என கோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனிடம் கேட்ட போது, “ஷங்கருக்கு ஏற்பட்ட நஷ்டத்தைச் சரிக்கட்டாமல் வடிவேலுவால் எந்தப் படத்திலும் நடிக்க முடியாது. மேலும் அவர் ஃபீல்ட் அவுட்டாகி பத்து வருசமாச்சு. அதனால் இனிமேல் அவரால் பழைய பொசிஷனுக்கு வரவே முடியாது. இது தான் நிஜம். இந்த நிஜம் வைகைப்புயல் வடிவேலுக்கும் தெரியும்” என்றார்.

இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு, சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களை பாதுகாக்கும் முடிவுக்கு வைகைப்புயல் வந்துவிட்டதாகவே தெரிகிறது.

ஆனால் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு எப்போதுமே அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக வைகைப்புயல் வடிவேலு மட்டுமே இருப்பார் என்பது மட்டும் உண்மை.

-சீமராஜா

You may also like
கோலிவுட்டில் புதுசு!
இந்த வார ஃப்ரெஷ் போட்டோ ஷூட்
ரஜினி மகளின் வேண்டுகோள்!

Leave a Reply