Home > சினிமா > கண்ணீரை துடையுங்கள் சகோதரி, புத்தகமும் வீடும் புதிதாய் கிடைக்கும்

கண்ணீரை துடையுங்கள் சகோதரி, புத்தகமும் வீடும் புதிதாய் கிடைக்கும்

கொரானா ஊரடங்கு, அதனை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் மழைவெள்ளம் இவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட விளிம்புநிலை மனிதர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் உதவிகள் கிடைத்து வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரிலிருந்து 400 கி.மீ தொலைவில் உள்ளது பிஜப்பூர் மாவட்டம். மாவோயிஸ்டுகள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இதனால் இப்பகுதியில்பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது அரிதானது என கூறப்படுகிறது. எனினும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற லட்சியத்துடன், கோமலா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவி அஞ்சலி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று 12ஆம் வகுப்பு முடித்தார்.

தற்போது, பிஜப்பூர் மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. கடந்த ஐந்துநாட்களாகப் பெய்து வரும் மழையால் அந்த பகுதியில் சேதம் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். அதன்படி, வாரைகள் வைத்துக் கட்டப்பட்டு, ஒரு அட்டை வீட்டில் வசித்து வந்த, அஞ்சலியின் குடும்பத்தினரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆகஸ்ட் 15 -16 ஆகிய தேதிகளில், கோமலாவிலிருந்து 5 கிமீ தொலைவிலிருக்கும், மிங்காச்சல் பகுதியில் தங்கியிருந்தனர். இரண்டு நாள் கழித்து மழை சற்று ஓயவே, தனது இல்லத்துக்கு ஓடி வந்து பார்த்துள்ளார் அஞ்சலி. அப்போது அவரது வீடு மழையால் இடிந்து முற்றிலும் சேதமடைந்திருந்தது.

வீட்டிலிருந்த பொருட்கள் எல்லாம் சேதமடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அஞ்சலி தன்னுடைய புத்தகங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது என பார்த்துள்ளார். பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மூங்கில் கூடையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து புத்தகங்களும் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. 12ஆம் வகுப்பு முடித்துள்ள அஞ்சலி pre-agricultural test-க்கு தயாராகி வந்துள்ளார். அதற்கான புத்தகங்களும் மழையில் ஊறிப்போனது.

இதனைக் கண்ட அஞ்சலி, நனைந்த புத்தகத்தை ஒவ்வொன்றாய் கூடையிலிருந்து எடுத்துக் கதறி அழுதுள்ளார். இதை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த முகேஷ் சந்திரசேகர், வீடியோவாக எடுத்து ஆகஸ்ட் 18ஆம் தேதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இதுபோன்ற புத்தகங்களைப் பழங்குடி பெண்களிடம் பார்ப்பது. இதுவே முதன்முறை’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவைக் கண்டு மாணவிக்கு பலரும் ட்விட்டரில் ஆறுதல் தெரிவித்து வந்த நிலையில், முதல்வர் பூபேஷ் பாகல், அஞ்சலிக்கு உதவ வேண்டும் என்று பிஜப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். அவரது வீட்டை சீரமைக்க நிதியுதவியும், மாணவியின் கல்விக்கு உதவி வழங்கப்படும் என்றும் மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருந்து பலருக்கும் உதவி வரும் பாலிவுட் நடிகர் சோனு சூட், “கண்ணீரை துடையுங்கள் சகோதரி, புத்தகமும் வீடும் புதிதாய் கிடைக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

“எங்கள் நிதி உதவியும் சோனு சூட் ஆதரவும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது என்பது தற்செயலான நிகழ்வு. முதற்கட்டமாக மாணவிக்கு ரூ .1,01,900 காசோலையும் புதிய புத்தகங்களும் வழங்கப்பட்டது” என பிஜப்பூர் கலெக்டர் ரித்தேஷ் குமார் அகர்வால் கூறினார்.

பிஜப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ விக்ரம் மண்டவி பாதிக்கப்பட்ட மாணவியைச் சந்தித்து, அவரது கல்விக்குத் தேவையான உதவி செய்யப்படும் என்று கூறி குறிப்பிட்ட தொகைக்கான காசோலையை வழங்கியுள்ளார். அதுபோன்று கோமலா பகுதி மக்களும் உதவி வருகின்றனர்.

You may also like
தனது 8 சொத்துக்களை 10 கோடிக்கு வங்கியில் அடமானம் வைத்த சோனு சூட்
ரியல் ஹீரோ நடிகர் சோனு சூட்டின் பிறந்தநாள் ட்ரெண்டாகியுள்ளது.
சோனு சூட் மேற்கொண்ட அதிவிரைவு உதவி

Leave a Reply