Home > தொடர்கள் > ஈழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு – பகுதி – 1 The Rising History of the Eelam Liberation Struggle – 1

ஈழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு – பகுதி – 1 The Rising History of the Eelam Liberation Struggle – 1

வவுனியா.

“புலிகளின் கோட்டையை சுற்றி வளைத்துவிட்டோம். அவர்கள் பொறியில் சிக்கிக் கொண்டார்கள். கூண்டோடு அவர்களை ஒழிக்கவேண்டும். தயவுசெய்து யோசனை சொல்லுங்கள்”

இலங்கை ராணுவப் பிரிவுகளின் தளபதி கெஞ்சினார்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகளுடன் இந்தியாவின் ராணுவ உயர் அதிகாரிகளும் வவுனியாவில் கூடியிருந்தனர்.

வவுனியா பகுதியில் இலங்கை ராணுவத்தின் கமாண்டராக பொறுப்பேற்று இருக்கும் மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்யா அந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கிளிநொச்சி மாவட்டத்தை இதோ கைப்பற்றப் போகிறோம் என்று இலங்கை ராணுவம் அறிவித்து மாதக் கணக்கில் ஆகிவிட்டது. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. “என்னதான் செய்கிறீர்கள்?” என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே துருவிக்கொண்டே இருந்தார். அவருக்குப் பதில் சொல்லமுடியாமல் ஜெயசூர்யா திணறினார்.

இந்நிலையில்தான், தங்களுக்கு உதவக்கூடிய நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகளை வரவழைத்தார் ராஜபக்ஷே. வன்னிப் பகுதிக்கு வந்த அவர்களை ஜெயசூர்யா ஆர்வத்துடன் வரவேற்றார். ராணுவத் தலைமையகத்தில் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தியா சார்பில் கேப்டன் பிரதீப் சிங், அமெரிக்கா சார்பில் லெப்டினன்ட் கேனல் லாரன்ஸ் ஸ்மித், பிரிட்டன் சார்பில் கேனல் ஆண்டன் கோஸ், பாகிஸ்தான் சார்பில் கேனல் சையத் ஹுரம் ஹஸ்னைன் ஆலம், வங்கதேசம் சார்பில் கமாண்டர் இமாம்ஹோசைன், ஜப்பான் சார்பில் கேப்டன் மசகருமுரை, மாலத்தீவு சார்பில் கேனல் அக்மட் ஷநீர் ஆகியோர் ஜெயசூர்யாவிடம் நிலவரம் குறித்து விசாரித்தனர்.

“கிளிநொச்சியை பிடிப்பதுதான் இலங்கை ராணுவத்தின் இப்போதைய அவசர தேவை. ராஜபக்ஷே எங்களை வாட்டி எடுக்கிறார். நாங்களும் எத்தனையோ வியூகங்களை வகுத்துவிட்டோம். எதுவுமே நடக்கவில்லை. நீங்களாவது ஒரு வழிகாட்டுங்கள்”.

பரிதாபமாக பேசினார் ஜெயசூர்யா.

ராணுவ அதிகாரிகள் நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டார்கள். ஜெயசூர்யாவுக்கு வெட்கமாக இருந்தது. ஆனாலும் தன் விதியை நொந்துகொண்டு, அவர்கள் சொல்லப்போவதை எதிர்பார்த்து காத்திருந்தார்.

“புலிகள் எத்தனைபேர் இருப்பார்கள்?”

“நீங்கள் எத்தனைபேர் இருக்கிறீர்கள்?”

“கிளிநொச்சியை சுற்றிலும் எத்தனை இடங்களில் உங்கள் படையணிகள் நிறுத்தப்பட்டு இருக்கின்றன?”

ராணுவ அதிகாரிகள் சரமாரியாக வினா தொடுத்தனர்.

எல்லாவற்றுக்கும் பதில் அளித்தார் ஜெயசூர்யா.

“இரண்டாயிரம் புலிகள் இருக்கிறார்கள் என்கிறீர்கள். கிளிநொச்சியைச் சுற்றிலும் ஐந்து முனைகளில் ஒரே சமயத்தில் தாக்குதலை நடத்துங்கள். அப்படிப்பட்ட தாக்குதலை புலிகள் எதிர்பார்க்கமாட்டார்கள். ஐந்து முனைகளிலும் ராணுவத்தை சமாளிக்க புலிகள் வெளிவந்துதான் ஆகவேண்டும். மொத்தம் இருக்கிற புலிகள் அனைவரும் வெளிவரும்போது அவர்களை எளிதில் சமாளித்துவிடலாம். ஒரே சமயத்தில் பல இடங்களில்

முதன் முறையாக நடத்தப்போகும் தாக்குதலில் புலிகள் அழிந்து போவார்கள்”.

இதுதான் ஏழு நாட்டு ராணுவ அதிகாரிகளும் வெளியிட்ட யோசனை.

இது சாத்தியமா? என்று அறிந்துகொள்ள உடனடியாக இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை தொடர்பு கொண்டார் ஜெயசூர்யா.

அவர் உடனடியாக அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து இந்த வியூகம் பற்றி விவாதித்தார். ராஜபக்ஷேவுக்கு ஒரே சந்தோஷம்.

“கோ அஹெட்” என்றார்.

அடுத்த நொடியில் வியூகத்தை நிறைவேற்ற மளமளவென்று ஏற்பாடுகள் தொடங்கின.

இதோ, புலிகள் ஒட்டுமொத்தமாக ஒழியப் போகிறார்கள் என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டார்கள்.

ஏதோ நடக்கப்போகிறது. எது நடந்தாலும் சமாளிக்க தயாராக இருங்கள். அடுத்த நாள் வரைகூட காத்திருக்க வேண்டியதில்லை. இன்று இரவேகூட தாக்குதல் நடத்தக்கூடும்”
புலிகளின் சக்திவாய்ந்த உளவுபிரிவு எச்சரித்தது.

ஏழு நாட்டு அதிகாரிகள் வன்னிக்கு வந்திருக்கும் தகவலை உளவுப்பிரிவு தெரிந்துகொண்டது. அவர்களுடைய நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்தது.

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவ்வப்போது தகவல்கள் தரப்பட்டன.

உடனே ஆலோசனை நடைபெற்றது. கிளிநொச்சியை நோக்கி, எந்தெந்த வழிகளில் ராணுவம் முன்னேற முடியும் என்று ஆராயப்பட்டது. 5 வழிகளில் முன்னேற முடியும் என்று முடிவானது.

“ஐந்து வழிகளிலும் தாக்குதலுக்கு தாயாராகுங்கள்”

தளபதிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார் பிரபாகரன்.

கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் இருந்து புறப்பட்டது இலங்கை ராணுவம்.

மக்கள் நடமாட்டம் இல்லாத சூனியப் பிரதேசங்களில் அணிவகுத்த இலங்கை ராணுவப் பிரிவுகளில் சிறுவர்களும் இடம்பெற்று இருந்தனர்.

கிளிநொச்சியில் சிங்களவீரர்

விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறுவர்கள் இருப்பதாக ஐ.நா.வில் புகார் செய்த இலங்கை ராணுவம் தனது படைப்பிரிவுகளில் எப்படி சிறுவர்களை சேர்த்தது?

இலங்கை ராணுவத்தில் ஆள்பலம் குறைந்துவிட்டது. அதை ஈடுகட்ட வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதற்காக டீன் ஏஜ் சிறுவர்களையும் ராணுவத்தில் சேர்க்கத் தொடங்கிவிட்டது இலங்கை அரசு.

கிளிநொச்சியை நெருங்க நெருங்க இலங்கை ராணுவத்துக்கு ஆச்சர்யம்.

எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை.

அதோ கிளிநொச்சியை சுற்றிலும் புலிகளின் மண் அரண்கள் தெரிகின்றன.

அரண்களுக்கு சற்று தூரத்தில் மிகப்பெரிய அகழிகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அந்த அகழிகளுக்குள் புலிகள் பதுங்கியிருக்கக் கூடும். அங்கிருந்து தாக்குதல் நடத்தக் கூடும்.
அகழிகளுக்கு வெகு தொலைவிலேயே ராணுவம் உஷாராக நின்று கொண்டது.

“அட்டாக்”

இலங்கை கமாண்டர்கள் உத்தரவிட்டனர்.

சரமாரியான தாக்குதல். அகழிக்குள் குண்டுமழை.

புலிகள் இருப்பதற்கான அறிகுறிகளே இல்லை. இலங்கை ராணுவத்தினர், தங்கள் வேலை எளிதாகிவிட்டதாக நினைத்தனர்.

பதுங்கிப் பதுங்கி அகழியை நெருங்கினர். அகழிக்குள் ஆட்களே இல்லை.

அப்போதும்கூட இலங்கை ராணுவத்தினர் யோசிக்கவே இல்லை. தங்கள் வியூகம் வெற்றி பெற்றுவிட்டதாகவே நினைத்தனர். ஏழு நாடுகளின் வியூகம் பலன் அளித்துவிட்டதாகவே பெருமைப் பட்டனர்.

அகழிக்குள் இறங்கி மேட்டுக்கு வந்தனர். புலிகளின் மண் அரணை நோக்கி வெற்றிநடை போட்டனர்.

மண்மேடுக்கு அப்பால் புலிகள்

திடீரென்று மணல் அரணுக்கு அப்பாலிருந்து எழுந்தனர் புலிகள். அவர்களிடம் நவீன ஆயுதங்கள் இருந்தன. ராக்கெட் லாஞ்சர்கள், பல்குழல் துப்பாக்கிகள் என சகட்டுமேனிக்கு தாக்குதல் நடத்தினர்.

இலங்கை ராணுவத்தினருக்கு அதிர்ச்சி. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முன்னணியில் சென்றவர்கள் குண்டடிபட்டு விழ, விழ பின்னால் சென்றவர்கள் ஆயுதங்களை போட்டுவிட்டு உயிர்தப்பிக்க ஓடினர்.

புலிகள் தரப்பில் மொத்தத்தில் 28 பேர் மட்டுமே பலி. ஆனால், இலங்கை ராணுவத்துக்கு, 160 பேர் பலி. 250க்கு மேற்பட்டோர் காயம்.

காயமடைந்த ராணுவத்தினரை புலிகள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான நவீன ஆயுதங்களை கைப்பற்றினர்.

தகவல் கிடைத்ததும் அதிபர் ராஜபக்ஷே அதிர்ச்சியில் உறைந்தார். புலிகளின் பலம் அவரை திகைக்கச் செய்தது. ஈழப் போராட்டம் தொடங்கியதில் இருந்து புலிகளின் தீரத்தை அறிந்தவர்தான். ஆனால், ஒரேசமயத்தில் ஐந்து முனைகளிலும் ராணுவத்தை திணறச் செய்யமுடியும் என்பதை இப்போதுதான் அவர் அறிந்தார்.

ஏழு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் வகுத்துக் கொடுத்த வியூகத்தை புலிகள் முறியடித்துள்ளனர் என்பது ராணுவத்தையே கலங்கடித்தது.

நேரடித் தாக்குதலில் தோல்வியடையும் போதெல்லாம், வான்தாக்குதலை ஏவுவது இலங்கை அரசுக்கு வாடிக்கையான விஷயம்தான்.

இப்போதும் அதுபோலத்தான் நடந்தது. இலங்கையின் வான்படை கிளிநொச்சி மீது சரமாரியாக தாக்குதலை தொடங்கியது. தமிழ் மக்கள் அலறியடித்து பதுங்குமிடங்களுக்கு ஓடினர்.

குண்டுவீச்சில் வழக்கம்போலவே குழந்தைகளும் பெண்களும் காயமடைந்தனர்.

விமானத் தாக்குதலின் துணையோடு இலங்கை ராணுவம் கிளிநொச்சியை நெருங்கியது. முன்புபோல இப்போது எதிர்ப்பே இல்லை.

கிளிநொச்சிக்குள் நுழைந்தது ராணுவம்.

ஆனால், அங்கு யாருமே இல்லை. விமானத் தாக்குதலில் சிதிலமடைந்த கட்டிடங்கள் மட்டுமே இருந்தன.

கிளிநொச்சியில் வாழ்ந்த மக்கள் எங்கே?

வான் தாக்குதலில் காயமடைந்த, உயிரிழந்த மக்கள் எங்கே?

இலங்கை ராணுவத்துக்கு எதுவுமே புரியவில்லை.

ஆனாலும், இலங்கை தலைநகரில் சிங்களரின் வெற்றிக் கொண்டாட்டம் தூள்பறந்தது.

இனி, முல்லைத்தீவு மட்டுமே விடுதலைப் புலிகளின் கையில் இருக்கிறது.

இலங்கை ராணுவம் முல்லைத்தீவை நோக்கி முன்னேறும் என்றார் ராஜபக்ஷே.

வழக்கம்போல, விமானப்படையின் துணையோடு அணிவகுத்தது இலங்கை ராணுவம்.

ஆனால், ராணுவம் நுழைந்த இடங்கள் அனைத்திலும் மக்கள் நடமாட்டமே இல்லை. அங்கிருந்த மக்கள் எங்கே போனார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக பின்தொடர்ந்தது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் நீண்டகாலம் இருந்த வவுனியாவின் அனைத்து முக்கிய பகுதிகளும் ராணுவத்தின் வசம் வீழ்ந்தது. புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதி சுருங்கிக்கொண்டே போனது.

இன்னும் 10 சதுர கிலோ மீட்டர் மட்டுமே புலிகளிடம் இருக்கிறது. 6 சதுர கிலோ மீட்டர் மட்டுமே அவர்கள் வசம் இருக்கிறது. இதோ நெருங்கிவிட்டோம். புலிகளை அழித்து ஒழிப்பது நிச்சயம். அவர்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு சரணடைவதைத் தவிர வேறுவழியே இல்லை. ராஜபக்ஷே கொக்கரித்தார்.

நிஜம்தானா?

புலிகள் சிக்கலில் சிக்கிக்கொண்டார்களா?

உலகம் முழுவதும் தமிழர்கள் நெஞ்சில் கேள்விக் கணைகள் பாய்ந்து கொண்டிருந்தன.

புலிகளை ராணுவம் நெருங்க முடியாது. அவர்களைச் சுற்றிலும் இரண்டரை லட்சம் தமிழர்கள் கவசமாக நிற்கிறார்கள். சுலபத்தில் புலிகள் சரணடைய மாட்டார்கள் என்று அடுத்தடுத்து செய்திகள் வெளிவந்தன. தமிழர்கள் சற்றே நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

உலகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. இனப்படுகொலையை தடுத்து நிறுத்துங்கள் என்று உலக சமுதாயத்தை அவர்கள் வற்புறுத்தினர். ஐ.நா. சபை தலையிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அப்பாவி மக்களுக்கு எந்த இடையூறும் வரக்கூடாது, அவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தக் கூடாது என்று உலக நாடுகள் இலங்கை அரசை வலியுறுத்தின.

இலங்கை ராணுவத்தின் வேகம் மட்டுப்பட்டது. ஆனால் புலிகள் இருக்கும் பகுதியை நெருக்கமாக சுற்றி வளைத்தது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்திருந்தது. அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு உலகத் தமிழர்கள் மத்தியில் உருவெடுத்திருந்தது.

முல்லைத் தீவின் முள்ளிக்கரைவாய்க்கால்.

திடீரென மழை கொட்டத் தொடங்கியது. பெரியவர்களும் சிறியவர்களும் பெண்களுமாக இரண்டரை லட்சம் பேர் நனைந்தனர். தங்குவதற்கு கூடாரமின்றி உண்பதற்கு உணவின்றி புலிகளை பாதுகாக்க அவர்கள் கேடயமாக நின்றனர்.

பின்னாலிருந்து ராணுவம் நெருக்கிக் கொண்டிருந்தது.

புலிகளிடம் இருந்து அப்பாவி மக்களை மீட்போம் என்று ராணுவத் தளபதி கூறினார். பிரபாகரன் தனது தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

“நமக்காக இந்த ஜனங்களும் பலியாக வேண்டுமா? அவர்களை வெளியேறச் சொல்லுங்கள்”

                                                          மக்களை வெளியேறச் சொல்லுங்கள்

ஆலோசனை முடிவில் உத்தரவிட்டார் பிரபாகரன். மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வயிறு காய்ந்த நிலையில் இலங்கை அரசு அமைத்திருந்த முகாம்களுக்கு வந்து சேர்ந்தனர். 6 நாட்கள் வரை பகுதிபகுதியாக அவர்கள் முகாம்களுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

மக்கள் வெளியேறியவுடன் இலங்கை ராணுவம் மிக நெருக்கமாக புலிகளை சுற்றிவளைத்தது. 200 சதுர மீட்டருக்குள் புலிகள் சிக்கியிருப்பதாக ராணுவம் அறிவித்தது.

அடுத்து என்ன? என்ற பரபரப்பு உலகத் தமிழர்களை தொற்றிக் கொண்டது. சண்டை நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. ஆவேசமான ஆர்ப்பாட்டங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தன. இந்தியா வாக்குப்பதிவு மும்முரத்தில் இருந்தது.

2009 மே மாதம் 16ஆம் தேதி.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கின. மத்தியில் காங்கிரஸ் கட்சி வலுவான நிலையில் ஆட்சியமைக்கும் என்பது தெளிவாகிவிட்டது.

பிரபாகரன் தனது சகாக்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தினார்.

“ராணுவம் நெருங்கிவிட்டது. இதுதான் நமது கடைசித் தாக்குதலாக இருக்கும். என்ன செய்யலாம்?”

பிரபாகரன் கேட்டார்.

சமாதான முயற்சியில் ஈடுபடலாம் என்றார் நடேசன். புலிகள் இயக்கத்தின் அரசியல் பொறுப்பாளரான அவர், புலித்தேவனுடன் வெள்ளைக் கொடியேந்தி இலங்கை ராணுவத்தினரை நோக்கி முன்னேறினார். ஆனால், இருவரையும் ராணுவம் சுட்டுக் கொன்றது.

“வேறு சிந்தனையே தேவையில்லை. கடைசித் தாக்குதலை நடத்திப் பார்ப்போம். வாழ்வா? சாவா? போராட்டம் இது.”

பிரபாகரன் குரலில் உறுதி இருந்தது. தற்கொலைத் தாக்குதலுக்கு தயார் செய்திருந்த கரும்புலிகள் அவரது முடிவை வரவேற்றனர். தங்களிடம் இருந்த வெடிப்பொருட்களை இயன்ற அளவு உடலில் கட்டிக் கொண்டனர்.

ஆயிரக்கணக்கில் இலங்கை ராணுவ வீரர்கள் சுற்றி வளைத்து நெருக்கி வந்தனர். அவர்களை நோக்கி அச்சம் சிறிதும் இன்றி கரும்புலிகள் முன்னேறினர். ஆவேசமாக விசையை அழுத்தி வெடித்துச் சிதறினர். இந்தத் தாக்குதலை சிங்கள ராணுவம் எதிர்பார்க்கவில்லை. நூற்றுக்கணக்கான வீரர்கள் செத்து மடிந்தனர்.

புலிகளின் இறுதித்தாக்குதல்

எங்கும் புகை மண்டலம். ராணுவம் பின்வாங்கியது. கரும்புலிகள் அணிஅணியாக வெடிப்பொருளுடன் வந்து கொண்டே இருந்தார்கள். இந்த சமயத்தில் அங்கு என்ன நடந்தது? என்பதே தெரியவில்லை. சிங்கள வீரர்கள் மூவாயிரம் பேர் இறந்திருக்கலாம் என்றார்கள்.

களேபரம் நடந்து கொண்டிருந்த வேளையில், பிரபாகரன் தப்பிச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை தளபதிகள் முன்வைத்தனர். அவர் தயங்கினார். அவர்கள் வற்புறுத்தினார்கள்.

மே மாதம் 17ம் தேதி.

ஜோர்டான் பயணத்தை அவசரமாக முடித்துக் கொண்டு இலங்கை திரும்பினார் ராஜபக்ஷே. கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கியதும் மண்டியிட்டு மண்ணை முத்தமிட்டார். அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி இருந்தது.

மண்ணை வணங்கி முத்தமிட்டார் ராஜபட்சே

“விடுதலைப்புலிகளுக்கு முடிவு கட்டிவிட்டோம். யுத்தம் முடிந்தது” என்றார்.

அவர் இப்படிச் சொன்ன அதே சமயத்தில் பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனி போரில் இறந்து விட்டதாக ராணுவம் அறிவித்தது. அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக புகைப்படத்தை வெளியிட்டது.

அப்படியானால் பிரபாகரன்?

தமிழர்கள் பதைபதைத்தார்கள். அதற்கேற்றபடி மெதுவாக, வதந்தியாக பிரபாகரனும் அவரது முக்கியத் தளபதிகளும் கொல்லப்பட்டதாக தகவல் பரவியது.

குண்டு துளைக்காத ஆம்புலன்ஸ் வேன் ஒன்றில் பிரபாகரன், சூசை, பொட்டு அம்மான் உள்ளிட்டோர் இலங்கை ராணுவத்தினரை நோக்கி வேகமாக வந்தனர். அப்போது வேனை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் வேனில் இருந்த எல்லோரும் உயிரிழந்தனர். உடல்களை தேடி வருகிறோம் என்று ராணுவ அதிகாரிகள் கூறியதாக அந்தத் தகவல் தெரிவித்தது.

ஆனால், 19ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்ஷே உரை நிகழ்த்தும் வரை பிரபாகரன் மற்றும் அவரது தளபதிகளின் உடல்களை இலங்கை ராணுவம் காட்டவில்லை. அதிபரும் தனது உரையில் பிரபாகரனுக்கு என்ன நேர்ந்தது? என்பது குறித்து குறிப்பிடவில்லை.

ஆனால், அவர் உரையாற்றிய 2 மணி நேரத்தில் பிரபாகரன் உயிரிழந்துவிட்டதாக ராணுவம் அறிவித்தது. அவரது உடல் இதுதான் என்று உடலை புகைப்படம் எடுத்து வெளியிட்டது.
இது பிரபாகரனின் உடல்தான் என்று புலிகள் இயக்கத்தின் கிழக்குப்பகுதி முன்னாள் தளபதி கருணா சாட்சியம் சொன்னார்.

பிரபாகரன் உடல்

தமிழர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அழக்கூட முடியாமல் ஈழத் தமிழர்கள் உள்ளுக்குள் தேம்பினர்.

ராணுவம் பிரபாகரனின் உடல் என்று சொன்னாலும், முக்கியமான தலைவர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்கள். பிரபாகரன் பத்திரமாக இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

முள்ளிக்கரைவாய்க்கால் பகுதியில் இருந்து அவர் பத்திரமான இடத்துக்கு தப்பிச் சென்றுவிட்டதாக அவர்கள் கூறினார்கள்.

ஏற்கெனவே இருமுறை அவர் இறந்துவிட்டதாக செய்தி பரப்பப்பட்டது. பின்னர் அது பொய்யாகியது. அதுபோல, இதுவும் பொய்யாகி விட வேண்டும் என்று உலகத் தமிழர்கள் விரும்பினார்கள். அவர்கள் விருப்பம் நிறைவேறாது என்பது இப்போது உறுதியாகிவிட்டது.

விடுதலைப் போராட்டங்கள் பலவிதம்.

விடுதலைப் புலிகளின் போராட்டம் தனிவிதம்.

இவர்கள் யார்? இவர்களுடைய பிரச்சனை என்ன? ஒரு அரசாங்கத்தை எதிர்த்து போட்டி அரசாங்கம் அமைத்து அதை இத்தனை காலம் வெற்றிகரமாக இயக்கியது எப்படி? இந்துமகா சமுத்திரத்தின் சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட இலங்கையை வாட்டி வதைத்த அடிப்படை சிக்கல் எங்கிருந்து தொடங்கியது?

ஒன்றுபட்ட இலங்கை என்ற சொற்ப்பதம் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. உண்மையில் இலங்கை எப்போதாவது ஒன்றுபட்டு இருந்திருக்கிறதா?

சரித்திரக்காலத்திற்கு முன்பும் சரி, இலங்கை சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டபோதும் சரி, அதன்பிறகும் சரி, எந்த காலத்திலாவது அந்த நாடு ஒன்றுபட்டு இருந்திருக்கிறதா? என்பதெல்லாம் கேள்விக்குரிய விஷயங்கள்.

இலங்கையின் வரலாற்றில் தமிழர்களின் பங்கு என்ன? சிங்களர்களின் பங்கு என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.

தனி ஈழம் என்ற கோரிக்கையில் ஏதேனும் அர்த்தம் உள்ளதா? இந்தக் கோரிக்கையை முன்வைத்து ஆயுதம் ஏந்தி போராடிய புலிகள்,

விடுதலைப் போராளிகளா?

அல்லது,

ஒருசிலர் கூறுவதுபோல வெறும் பயங்கரவாதிகளா?

உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், இலங்கையின் வரலாற்றை கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டும்.

முதலில் அதைத் தெரிந்துகொள்வோம்…

You may also like
பிரபாகரனை போற்றும் பெரியாரியவாதிகளுக்கு ஒரு கேள்வி! – Usman Ghani
சிரி சபாவும் பத்மநாபாவுமே மாவீரர்கள் – Venkat Ramanujam
கொல்லம் வேலுப்பிள்ளை மகனின் ஆறு தவறுகள் – Venkat Ramanujam
பிரபாகரனின் ஆளுமை லட்சணம் இவ்வளவுதான்! – Athanurchozhan

Leave a Reply