Home > முகப்பு > ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுபயணம்

ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுபயணம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டுவரும் வரவேற்புகள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நினைவூட்டும் வகையில் உள்ளதாக சொல்கிறார்கள் அதிமுகவினர் கொரானா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் மற்ற வளர்ச்சிப் பணிகளையும் ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப் பயணம் செய்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அந்த வகையில் செப்டம்பர் 7ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு சென்றார்.சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்ல கான்வாய் வாகனங்கள் வழக்கமாக 45 நிமிடம்தான் ஆகும்.

ஆனால் சென்னையில் இருந்து புறப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளூர் சென்று சேர சரியாக இரண்டரை மணி நேரம் ஆனது.அந்த அளவுக்கு சென்னையிலிருந்து முதல்வர் செல்லும் சாலையெல்லாம் ரோஜா, சாமந்தி, சம்பங்கி, மல்லி போன்ற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வரவேற்றார்கள் அதிமுகவினர்.

அந்த மலர்கள் மீதுதான் முதல்வர் வாகனம் பயணித்தது. ஆங்காங்கே 400 முதல் அதிகபட்சமாக ஆயிரம் பேர் வரையில் கூட்டி நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கொரானா தொற்றுப் பரவலை ஆய்வு செய்ய வரும் முதல்வரை வரவேற்ற எந்த இடத்திலும் சமூக இடைவெளி பின்பற்றப்படவே இல்லை. அதிலும் குறிப்பாக அதிமுக கரைபோட்ட வேட்டி அணிந்த ஆண்கள், ஒரே டிசைனில் புடவைகள் அணிந்திருந்த பெண்கள் யாரும் சமூக இடைவெளி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்களாகவே இருந்தார்கள் சாலை நெடுகிலும் பிளக்ஸ் போர்டுகள், விவசாயிகளின் தலைவா, மக்கள் தலைவரே, வழிகாட்டியே, என முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு கையில் நெல் கதிரும், ஒரு கையில் அரிவாள் இருப்பது போலவும், சில இடங்களில் மண்வெட்டி வைத்திருப்பதுபோல் விளம்பரப் பலகைகள் வைத்திருந்தார்கள்.

இதையெல்லாம் விட ஆங்காங்கே மாணவர்கள் கூடி எடப்பாடிக்கு வரவேற்பு அளித்தனர். முதல்வரின் கார் வேகம் எடுக்கத் தொடங்கியபோது., ‘ஐயா… அரியர் மாணவர்கள் சார்பா நன்றிங்கய்யா…’ என்று சிலர் குரல் எழுப்ப கையை அசைத்து தன் மகிழ்வைத் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

அப்போது அதிமுகவின் திருவள்ளூர் மாவட்ட மாணவரணியைச் சேர்ந்த முல்லை வேந்தன் உள்ளிட்டோர் கொட்டும் மழையிலும் முதல்வருக்கு மலர்களை அளித்து மாணவர்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

எப்போதும் இல்லாத அளவுக்கு விளம்பரங்கள், வரவேற்புகள், முதல்வர் வரும் கார் வரும்போது கட்சி நிர்வாகிகள், எம்.எல்.ஏ, அமைச்சர்கள், காரைத் தொட்டு வணங்குவது போன்ற ஏற்பாடுகளையும் செய்துள்ளார்கள் மூவர் குழு.யார் அந்த மூவர் குழு என்று அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

“அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்விக்கு இன்னும் வெளிப்படையாக தீர்வு காணவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பு மட்டும் செய்யாமல், மற்ற எல்லா வகையிலும் அவரையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்காகவே இந்த மாவட்டப் பயணங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓ.பன்னீர் தர்மயுத்தம் தொடங்கியபோது கணிசமான ஆதரவு இருந்தது. இந்த நிலையில்தான் முதல்வரின் திருவள்ளூர் பயணத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பிளக்ஸுகள், வரவேற்புகள், மலர்கள், மக்கள் கூட்டம் என்று கச்சிதமாக திட்டமிட்டு முதல்வர் எடப்பாடியே மீண்டும் முதல்வர் வேட்பாளர் என்ற மெசேஜை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

இனி முதல்வர் செல்லும் எல்லா மாவட்டங்களிலும் இதேபோன்ற பிரம்மாண்டத்தை தொடர்வது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மூவரணியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி சத்தியமூர்த்தி, முதல்வர் மகன் மிதுன், சுனில் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தான் முதல்வர் எடப்பாடியை அடுத்த தேர்தலின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்திக் காட்டுவதை முனைப்போடு செயல்பட்டு வருகிறார்கள்.

ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரப் பயணத் திட்டத்தை செங்கோட்டையன் முடிவு செய்வார். ஜெயலலிதா எந்த பாயின்ட்டுக்கு எப்போது வரவேண்டும், அங்கே அவரை வரவேற்க என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதெல்லாம் செங்கோட்டையன் கைகளில் தான் ஆரம்ப காலத்தில் இருந்தது. அதேபோல இப்போது எடப்பாடி பழனிசாமியின் பயண ஏற்பாடுகளை இந்த மூவரணி தான் இப்போது முழு மூச்சில் கையிலெடுத்திருக்கிறார்கள். தேர்தல் நெருங்க நெருங்க எடப்பாடியை ஓ. பன்னீரால் தவிர்க்க முடியாதபடி செய்வது தான் இந்த மூவரணியின் அஜெண்டா என்கிறார்கள் அதிமுகவில்

Leave a Reply