Home > அரசியல் > “தி.மு.க. கரை வேட்டியை உருவாக்கிய அண்ணாவின் தம்பி”

“தி.மு.க. கரை வேட்டியை உருவாக்கிய அண்ணாவின் தம்பி”

பி.ஏ.சாமிநாதன் என்ற பெயர் சாதாரணமானதல்ல. மிகப்பெரும் ஆளுமைக்குச் சொந்தக்காரர். அந்தக் காலத்தில் ஒன்றுபட்ட கோவை மாவட்ட தி.மு.க.செயலாளர். இன்றைக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு என நான்கு வருவாய் மாவட்டங்கள்.கழக நிர்வாகத்தில் 13 மாவட்ட கழக நிர்வாகம் இவை அனைத்தும் ஒரே ஒரு நபராக இருந்து பணியாற்றியவர்.

கழக கொடியின் நிறமான கருப்பு சிவப்பு கலரில் வேட்டியில் கரையாக போட்டு கட்டலாம் என்ற சிந்தனையைக் கொண்டு தன்னுடன் இருந்த கழகத் தோழர் திரு. பு.கா.ஆறுமுகம் அவர்களுடன் இணைந்து கரை வேட்டியை உருவாக்கி அதை1957 தி.மு.கழக மாநாட்டில் அறிமுகம் செய்தவர் திரு.பி.ஏ.எஸ்.அவர்கள் தான். அதன் பின்புதான் அதைப் பார்த்து காங்கிரஸ் கட்சி கரை போட்ட வேட்டி வந்தது. முதன் முதலில் ஒரு அரசியல் கட்சி கரை போட்ட வேட்டி என்றால் அது தி.மு.க கரை போட்ட வேட்டிதான் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

1967ல் கோபி நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் அமைச்சர் திரு.சி.சுப்பிரமணியம் அவர்களை தோற்கடித்தும்,1971ல் நாடாளுமன்ற தேர்தலில் திரு.ஈ.வி.கே.சம்பத் அவர்களை தோற்கடித்தும் இரண்டு முறை வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.

திரு.பி.ஏ.எஸ் அவர்கள் மாவட்ட செயலாளராக (1970-1976) இரண்டு முறை இருந்தார். அவர் மாவட்ட செயலாளராக இருந்தபோது தான் 1975ல் கோவையில் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். காரியம் என்று யார் சென்றாலும் அவர்களை தன்னுடைய செலவில் அழைத்து சென்று சாப்பிட வைத்து வேலையை முடித்துக் கொடுப்பார்.

தொண்டர்களிடம் எளிமையாக பழகக் கூடியவர். 1976 மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அப்போது இவரது துணைவியார் திருமதி.சம்பூரணம் சாமிநாதன் அவர்கள் கழக வேலையை செய்தும் கழக தோழர்களின் இல்லங்களில் நடைபெறும் சுக துக்க நிகழ்ச்சிகளுக்கு சென்று பி.ஏ.எஸ்.அவர்கள் வராத குறையை நிவர்த்தி செய்தார்.

திரு.பி.ஏ.எஸ் அவர்கள் வீட்டில் சாப்பிடாத தலைவர்கள் இல்லை. தலைவர்கள் மட்டுமல்ல, பல தொண்டர்களும் கூட. எவ்வளவு பெரிய தலைவர்களானாலும் அரசியலில் சறுக்கல்கள் தவிர்க்க முடியாதது. அப்படித்தான் இவருக்கும் உட்கட்சி பிரச்சினையில் ஏற்பட்ட நிகழ்வில் கழகத்திலிருந்து விலக்கப்பட்டார். அதன் பின் 1996ல் மீண்டும் கழகத்தில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து கழகப் பணியை செய்து வந்தார். தான் மாவட்ட செயலாளராக இருந்து பணியாற்றினோமே என்றெல்லாம் பார்க்காமல், புளியம்பட்டி பேருர் அளவில் தனது பணியை தொடர்ந்தார். திரு.கோவை மு.இராமநாதன் அவர்களின் பொதுக் கூட்டம் 16.03.2010ல் புஞ்சைபுளியம்பட்டியில் நடந்தது அந்தக் கூட்டத்திற்கு நான் (ஆ.செந்தில்குமார்) சென்றிருந்தேன். கூட்டம் முடிந்ததும் அவர் வீட்டில் உணவு சாப்பிட்டோம். அநேகமாக அது தான் நான் அவரை கடைசியாக பார்த்தது என நினைக்கிறேன்.

ஊரில் மக்கள் இறந்து போனவர்களை அடக்கம் செய்ய சுடுகாடு இல்லாமல் சிரமப்பட்டதால் தனது தோட்டத்திற்கு ஒட்டிய இடத்தை தன்னுடைய பணத்தில் வாங்கி ஊராட்சியிடம் ஒப்படைத்து அதை சுடுகாடாக ஏற்படுத்தி கொடுத்தார். புதியதாக பஸ் நிலையமோ அல்லது சுற்று சாலையோ வருவது தெரிந்தால் உடனே அங்கே இடம் வாங்கி போடலாம் என்று நினைக்கும் மனிதர்கள் இருக்கும் உலகில் தனது இடத்தையொட்டி சுடுகாடு அமைத்த பெருந்தகை.

#22.01.2011ல் அவர் தனது உழைப்பை நிறுத்திக் கொண்டார் ஆம் இதே நாளில் மறைந்து விட்டார் அவரது உடல் அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டது.மாவட்ட அளவில் எனக்கு தெரிய அப்படி ஒரு ஊர்வலத்தையும்,மக்கள் வீடுகளிலிருந்து பூ தூவி அஞ்சலி செலுத்தியதும் பார்க்கவில்லை. அந்த அளவு மிகச் சிறப்பாக அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஊரில் ஒரு சிறு கடை கூட திறக்கப்படவில்லை. அந்த அளவிற்கு மக்களிடம் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், பேராசிரியர்,தலைவர் தளபதி ஆகியோரிடம் நல்ல தொடர்பு வைத்தவர். #அவரது_நினைவு நாளில், அவரது புகழ் ஓங்குக! ஒங்குக!!என வீர முழக்கமிடுகிறேன்.

அன்புடன்… ஆ .செந்தில்குமார், மாவட்ட துணைச் செயலாளர், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க.

தகவல் உதவி – Panju Aravindan

You may also like
அற்புதங்களின் குவியல் அண்ணா!

Leave a Reply