Home > கட்டுரைகள் > மாரடைப்பில் இறந்தால் இப்படியெல்லாம் செய்யனுமா? அட கொடுமையே!

மாரடைப்பில் இறந்தால் இப்படியெல்லாம் செய்யனுமா? அட கொடுமையே!

ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் அப்போதும் கூட சோசியம், நேரம், காலம் பார்க்கும் மக்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை அறிய என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கல்யாணத்துக்குதான் ஜாதகம் பார்க்கிறார்கள் என்றால். சாவுக்கும் கூட ஜாதகம் பார்க்கப்படுவது என்ன கொடுமைடா சாமி.

அடைப்பு என்பதை இந்த ஊரில்தான் கேள்விப்படுகிறேன். ஒருவர் எந்த நேரத்தில் செத்தார்கள் என்று பார்த்து அதற்கு தனியாக ஒரு சோசியம் பார்க்கப்படுகிறது. இதற்கு தனியாக தனிஷ்டா பஞ்சமி என தனியா அடைப்பு நட்சத்திரம் விசேஷம் உண்டாம்.ஒருவர் அடைப்பு நட்சத்திரத்தில் இறந்தால், அவர் இறப்பு அடைப்பு என்றால், அது 4 மாதம் அல்லது 6 மாதம் இருக்குமாம்.

அதுவரை அந்த வீட்டில் உள்ளவர்கள் கோயிலுக்குப் போகக் கூடாது. கல்யாணம், எழவு, கருமாதின்னு ஒரு நல்லது கெட்டதிலும் அந்த வீட்டில் இருப்பவர்கள் கலந்து கொள்ளக்கூடாதாம். எப்படிப்பா?சொந்த தம்பி, தங்கச்சி, அண்ணன், அக்கா வீட்டில் கூட என்ன நடந்தாலும் போக மாட்டார்கள் இந்த மக்கள், கோயில் அர்ச்சகர் வீட்டில் இறப்பில் அடைப்பு இருந்தால், அவர் அர்ச்சகர் வேலைக்கே போகாமல் வேலைக்கே வேட்டு வைத்துக்கொள்வாரா?

இருக்கிறவரை செத்துப் போன மனுஷனை ஏன்னு கேட்டு இருக்க மாட்டாங்க, நல்ல சாப்பாடு கொடுத்து இருக்க மாட்டாங்க. செத்த பின்னாடி, தினமும் 5 .30 மணிக்கு விளக்கு எத்தணுமாம் அதுவும் அந்த விளக்கு 24 மணி நேரமும் அணையாம எரியணுமாம். என்னாங்கடா இது அநியாயம், அவர்களை என்னென்று சொல்ல.

இவங்களுக்கு எத்தனை பெரியார் வந்தாலும் ஒண்ணும் நடக்காது. போங்கடா நீங்களும் உங்க சோசியக்கார பயலுகளும். வீட்டில் ஒருவர் இறந்தால், அவர் இறந்த அன்று என்ன நட்சத்திரம் என்று பார்ப்பார்களாம், அது அடைப்பு நட்சத்திரமாக இருந்தால் அதற்கான பரிகாரங்கள் செய்யப்பட வேண்டுமாம். இது எப்படி இருக்கு ?

முக்கியமான விஷயம். அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, ரோகிணி, கார்த்திகை, உத்திரம், மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம்,இந்த நட்சத்திர நாட்களில் இறந்தால்…. அவர் இருந்த அறையை பூட்டி வைக்க வேண்டுமாம்.

வீட்டில் அறையே இல்லாமல் ஒரே அறையை எல்லாத்துக்கும் பயன்படுத்துபவர்கள் என்றால் எங்கே போய் அவர்கள் வசிக்க, எந்த அறையைப் பூட்டி வைக்க. மேலும் செத்தவர்கள் வீட்டில் காலை மாலை இரண்டு வேளையும் “வெண்கல விளக்கு (புதியது) வைத்து விளக்கேற்றி வரவேண்டுமாம். அந்த அறையை வேறு யாரும் உபயோகிக்க கூடாதாம்.

“ஏன் சார் நாங்க இருக்கிறதே ஒத்தை ரூம், ரெட்டை ரூம்னு ஒண்டுக் குடித்தனம். இதுல எங்க ரூமை பூட்றது?” என்பவர்களின் நிலை என்ன? அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி இந்த ஐந்து நட்சத்திர நாட்களில் இறந்தால் 6 மாத காலத்திற்கு பூட்டி வைக்க வேண்டும். ரோகிணி நட்சத்திரமாக இருந்தால் 4 மாதம் பூட்டிவைக்க வேண்டும். கார்த்திகை உத்திர நட்சத்ரங்களாக இருந்தால் 3 மாதம் பூட்டி வைக்கவேண்டும்.

மிருக சீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடம் இந்த நட்சத்திரங்களாக இருப்பின் 2 மாதம் பூட்டி வைக்க வேண்டும். ஆனால் வெண்கல விளக்கு கொண்டு ஏற்றுவது தவறாமல் செய்ய வேண்டுமாம். குறிப்பிட்ட காலம் முடிந்த உடன் அந்த விளக்கை தானமாக யாருக்காவது தரவேண்டுமாம், எங்களால் இப்படி அறையைப் பூட்டி வைக்க முடியாது, அதுவும் இவ்வளவு மாதங்களுக்கு பூட்டுவதெல்லாம் முடியவேமுடியாது என்றால், அவர்கள் … புதிய வெண்கலக் கிண்ணம் ஒன்றை வாங்கி அதில் நல்லெண்ணெய் நிரப்பி யாருக்காவது தானம் தந்தால் போதும், பிரச்சினை தீரும்.

இதைச் செய்ய முடியாது போனால் என்னாகும்? இறந்தவருக்கு யார் ஈமகாரியம் செய்தார்களோ அவருக்கு இந்த குறிப்பிடப்பட்ட காலம் வரை கண்டம் உண்டாக வாய்ப்பு உள்ளது என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதுமட்டுமல்ல இறந்தவரின் ஆத்மா, குறிப்பிட்ட காலம் வரை இங்கேயே சுற்றும். அந்த ஆன்மாவின் சாந்தி அடையவே இந்த பரிகாரம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த சோசியக்காரப் பயலுவ காதில் முழம் முழமாக பூ சுற்றுகிறார்கள். உடலில் இருந்து உயிர் போனதும் அந்த காற்று காற்றோடு கலந்துவிடுகிறது. அதனால்தான் இறந்துவிட்டார் என்பதற்கு Expired என, காற்றை வெளிவிட்டு விட்டார் என்ற பொருளில் சொல்லப்படுகிறது. உடம்பிலிருந்து வெளியேறிய காற்று அங்கேயே சுற்றிக்கொண்டு இருக்குமாம்.

அடைப்பில் இறந்தால் இப்படி எத்தனை பேரின் உயிர் பிரிந்து ஆவியாகி சுற்றிக் கொண்டு இருக்கிறது. கொஞ்சம் கணக்கெடுத்து சொல்லுங்கப்பா.

கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால் கேட்பவருக்கு புத்தி எங்கே போயிற்று. எத்தனை படித்திருந்தாலும் கூட, இந்த அடைப்பு விஷயத்துக்கு வாயே திறக்காமல அப்படியே சோசியர் சொல்வதை கேட்கிறார்கள் படித்திருந்தும் என்ன பதவியில் இருந்தும் இப்படி அறிவில்லாமல் இருக்கும் மக்களை என்ன செய்ய என்ன சொல்ல?

படித்திருந்தும் அறிவியல் விஷயங்கள் தெரியாதா? என்ன மடத்தனம் மிக்க மக்கள்…

Mohana Somasundram

Leave a Reply