Home > அரசியல் > மே 26 கருப்பு தினம் அனுசரிக்க திமுக உட்பட 12 கட்சிகள் ஆதரவு!

மே 26 கருப்பு தினம் அனுசரிக்க திமுக உட்பட 12 கட்சிகள் ஆதரவு!

வரும் மே 26 அன்று கருப்புக்கொடி ஏற்ற வேண்டும் என்றும், அன்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரித்திட வேண்டும் என்றும் சம்யுக்த கிசான் மோர்ச்சா என்னும் அனைத்து விவசாய சங்கங்களின் முன்னணி விடுத்துள்ள அறைகூவலுக்கு திமுக உட்பட நாட்டில் பிரதான எதிர்க்கட்சிகள் பன்னிரண்டும் ஆதரவினை அளித்துள்ளன.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்றுவரும் அனைத்து விவசாயிகள் முன்னணி தங்களின் வீரஞ்செறிந்த அமைதியான விவசாயப் போராட்டம் தொடங்கி வரும் மே 26 ஆறு மாதங்கள் நிறைவடைகின்றன. இதனைக் குறித்திடும் விதத்தில் அன்றைய தினம் நாடு முழுதும் எதிர்ப்புதினம் அனுசரித்திட வேண்டும் என்று அனைத்து கிசான் முன்னணி அறைகூவல் விடுத்தது. இதற்கு திமுக உட்பட 12 பிரதான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி சார்பாக சோனியா காந்தி, மகாராஷ்ட்ர முதல்வர் உத்தவ் தாக்கரே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் எச்.டி.தேவ கவுடா, தேசியவாதக் காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜம்மு-காஷ்மீர் மக்கள் கூட்டணி தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகிய பன்னிரண்டு பேரும் கையெழுத்திட்டு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

கடந்த ஆறு மாதங்களாக வீரஞ்செறிந்தமுறையில் அமைதியாக நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்தின் ஆறு மாதங்கள் நிறைவடைவதைக் குறிக்கும் விதத்தில் வரும் மே 26 அன்று நாடுதழுவிய அளவில் எதிர்ப்புதினம் அனுசரித்திடுமாறு சம்யுக்த கிசான் மோர்ச்சா என்னும் அனைத்து விவசாயிகள் சங்க முன்னணி விடுத்துள்ள அறைகூவலுக்கு நாங்கள் எங்கள் ஆதரவை விரிவாக்கிக் கொள்கிறோம்.

2021 மே 12 அன்று நாங்கள் கூட்டாக பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தோம். அந்தக்கடிதத்தில், “கொரோனா வைரஸ் பெருந்தொற்றில் பலியாகியிருக்கும் நமக்கு உணவு அளித்திடும் உழவர் பெருமக்கள் (நம் அன்னதாதாக்கள்) பல லட்சக்கணக்கானவர்களைப் பாதுகாத்திட, நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்திட வேண்டும்” என்றும் “அப்போதுதான் அவர்களால் இந்திய மக்களுக்கு உணவு அளித்திட உணவு உற்பத்தியைத் தொடர்ந்திட முடியும்” என்றும் கூறியிருந்தோம்.

வேளாண் சட்டங்கள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் சாமினாதன் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சி2 + 50 சதவீத உயர்வுடன் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்வதை சட்டபூர்வமானதாக மாற்றிட வேண்டும் என்றும் நாங்கள் கோரி வருகிறோம்.

இந்த அடிப்படையில் மத்திய அரசாங்கம் தன் பிடிவாதத்தைக் கைவிட்டு, போராடும் அனைத்து விவசாய முன்னணி தலைவர்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிடவேண்டும்.

இவ்வாறு அவர்கள் தங்கள் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்கள்.

Leave a Reply