Home > கட்டுரைகள் > கமலிடம் கேள்வியே கேட்கக்கூடாதா? அவ்வளவு யோக்கியரா அவர்?

கமலிடம் கேள்வியே கேட்கக்கூடாதா? அவ்வளவு யோக்கியரா அவர்?

விஸ்வரூபம் வெளியீட்டில் பிரச்சனை வந்த போது கமல் சொன்னது ‘என்னிடம் பணம் இல்லை . திவால் ஆகும் நிலைமையில் உள்ளேன். இந்த படம் வெளியாகவில்லை என்றால் தமிழ்நாட்டை விட்டு இல்லையென்றால் இந்தியாவை விட்டே வெளியேறுவேன்’ என்று அறிவித்தார்.

அதே கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் துவங்கிய போது , கட்சி நடத்த பணத்திற்கு எங்கே போவீர்கள் என்று கேட்ட பொழுது ‘மக்களிடம் நிதி திரட்டி கட்சி நடத்துவோம்’ என்றார்.

அதே கமலிடம் மிக சமீபத்தில் ஹெலிகாப்டர் உபயோகிக்க நிதி ஏது என்று கேட்ட பொழுது, ரிமோட்டை எடுத்து தொலைக்காட்சியை உடைப்பது போல் அவ்வளவு கோவம். அவ்வளவு கோவத்திலும் நிதி எங்கிருந்து வந்தது என்று கூறவில்லை மாறாக எதிர் கேள்வி வைத்தார். “டீ கடை, பூ கடை வச்சவங்க எல்லாம் இன்னைக்கு கோடீஸ்வரங்க ஆயிட்டாங்க. 235 சொச்சம் படம் நடிச்சிருக்கேன். மக்களை பாக்க ஹெலிகாப்டர் இல்ல, போயிங் விமானதுல கூட வருவேன். இது ‘எங்க’ பணம். என்னை பார்த்து கேக்க உங்களுக்கு எங்கிருந்து துணிவு வருகிறது” என்று கேட்டுள்ளார்.

விஸ்வரூபம் ரிலீஸ் போது திவாலாகும் நிலைமையில் இருந்த கமலஹாசன், அந்த படத்திலும், அதன் பிறகு நடித்த மிக சொற்ப படங்களிலும் எவ்வளவு லாபம் வந்தது, அதில் எவ்வளவு கட்சிக்கு கொடுத்தார் என்கின்ற கணக்கையாவது காட்டுவாரா, இல்லை அதை கேட்க கூட மக்கள் பயந்து கொள்ள வேண்டுமா என்று தெரியவில்லை.

ஊழல் ஊழல் என்று கதறும் கமலஹாசன் ஊழலற்ற ஆட்சியை கொடுப்பதாக சொல்கிறார். இந்தியாவில் இல்ல, உலக அரங்கத்தில், அதிகாரத்தில் இருக்கும் எந்த ஒரு கட்சியாவது இதுவரை ஊழல் இல்லாமல் செயல்பட்டிருக்கிறதா என்று ‘உலக’ நாயகன்தான் சொல்ல வேண்டும்.

தன்னிடம் கணக்கு கேட்டதற்கே ‘எங்கிருந்து தைரியம் வந்தது’ என்று கேட்கும் கமல்தான் ஊழலை ஒழிக்க வந்த உத்தமர். அது சரி, நேர்மையான கணக்கிருந்தால் ஆதாரத்துடன் விளக்கி இருப்பார்.

1971 தேர்தலில், திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்று இதே போல் ஊழல் ஊழல் என்று கதறினார்கள் காங்கிரஸ்காரர்கள். தந்தை பெரியார், அதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழலின் பட்டியலை மக்களிடையே பிரச்சாரம் செய்ய, காங்கிரஸ் வேறு வழியின்றி ஊழல் குற்றசாட்டை கைவிட்டது.

ஊழலை தவிர வேறு குறை சொல்ல அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. திமுகவின் ஆட்சி அவ்வளவு சிறப்பாக இருந்தது. இன்றைக்கு சூப்பர் ஸ்டார் செய்த பொய் பிரச்சாரம் போல, பெரியார் ராமனை பெரியார் செருப்பால் அடித்ததாக பொய் பிரச்சாரம் செய்தார்கள். அது மிக பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்று காங்கிரஸ் மட்டுமில்லை, திமுகவும் பெரியாருமே எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்து போல் அல்லாமல், அதுவரை இல்லாத வகையில் திமுக மிக அதிக இடங்களில் வெற்றிபெற்றது.

இப்போது கமல் கூறும் ஊழல் குற்றச்சாட்டிற்கு மக்களிடையே வரவேற்பு இருக்கும். அதற்கு காரணம் திராவிட கழகம் இல்லாத கட்சிகள் கடந்த 60 ஆண்டு காலமாக ஆட்சியில் இல்லை. ஊழல் என்றால் அது கழக கட்சிகள் தான் என்பது போல் பிம்பத்தை உருவாக்க இது நல்ல சந்தர்ப்பமாக இருக்கிறது. இப்போது நாம் என்ன கேட்க வேண்டுமென்றால், கழக ஆட்சியில் தமிழ்நாடு ஊழலால் முன்னேறவில்லையென்றால், பல துறைகளிலும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு எப்படி முன்னேறியிருக்கிறது என்பதுதான்.

ரத்த தானம் , உறுப்பு தானம் கொடுப்பதினால் ஒருவர் தலைவராகி நல்லாட்சி கொடுத்துவிட முடியுமானால், மக்கள் பிளட் பேங்க் donors லிஸ்டை எடுத்து அதில் அதிக ரத்த தானம் கொடுத்தவரைதான் முதலமைச்சர் ஆக்க வேண்டும். இதை தவிர சூரப்பா பதவிக்கு வந்த போது ‘தமிழ்நாட்டில் அந்த இடத்துக்கு தகுதியான ஆள் கிடைக்கவில்லையா?’ என்று பொங்கிய அதே கமலஹாசன் தான் சூரப்பாவின் பெண்ணிற்கு honorary பதவி கொடுத்ததை கேட்கும் பொழுது ‘சூரப்பாவுக்கு அவரின் பெண்ணை விட நேர்மையானவராக வேறு ஒருவரை தெரிந்திருக்காது அதனால் கொடுத்திருப்பார்’ என்றார்.

உலக திரைப்படங்களுக்கு நேர்மையான வகையில் கிரெடிட் கொடுக்காமல் காப்பி அடிக்கும் கமலஹாசன்தான் தமிழ்நாட்டை உலக தரத்திற்கு கொண்டு செல்வேன் என்கிறார்.

தமிழகம் கடந்த 60 வருடங்களாக இந்திய மாநிலங்களை தாண்டி உலக தரத்துடன் தான் போட்டி போட்டு கொண்டிருக்கிறது என்பதை எப்படி மய்யத்திற்கு புரிய வைப்பது.

சுமதி விஜயகுமார்

Leave a Reply