Home > கட்டுரைகள் > 1.நெருப்பு பிறந்த வேளை… – DR.AMBEDKAR LIFE HISTORY – 1

1.நெருப்பு பிறந்த வேளை… – DR.AMBEDKAR LIFE HISTORY – 1

பல நூறு ஆண்டுகளாக இந்தியாவில் மக்கள் நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்டு இருந்தனர். பிராமணர்கள் தங்களுடைய சுகமான வாழ்க்கைக்கு தகுந்தபடி மக்களை பிரித்து ஆண்டனர்.
தீண்டத் தகாதவர்கள், பார்க்கவே தகாதவர்கள் என்று மனிதர்களை பிரித்து, எல்லோரும் தங்களுக்கு கீழானவர் கள் என்று கூறி வந்தனர்.
சண்டை போட ஒரு ஜாதி, விவசாயம் செய்ய ஒரு ஜாதி, கூலி வேலைக்கு ஒரு ஜாதி என்று மக்கள் பிரிக்கப் பட்டிருந்தனர். கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்ட இவர்கள் கொடூரமான ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள்.
மராட்டியத்தில் பேஷ்வா மன்னராட்சி நடந்து கொண்டிருந்தது. பேஷ்வாக்களை 1818 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ராணுவம் தோற் கடித்தது.
மாராட்டியத்தில், பல நூறு ஆண்டுகளாக காடுகளி லும் மலைகளிலும் அலைந்து திரிந்து கடின வாழ்க்கை வாழ்ந்த மக்கள் மஹர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
பேஷ்வா ஆட்சி முடிவுற்றதும் அந்த மக்கள் ஆங்கிலேய ராணுவத்தில் சேர ஆர்வம் காட்டினார்கள். அந்த ராணுவத்தில் அவர்களுக்கு ஓரளவு சமத்துவமும் நவீன கல்வியும் கிடைத்தது.
ஆனால், ஆங்கிலேயரும்கூட தங்களுடைய படைப் பிரிவுகளை இந்திய சமூக அமைப்புக்கு தகுந்தபடியே அமைத்தனர். அவற்றில் மஹர் ரெஜிமெண்ட்டும் ஒன்று.
இந்தப் படைப்பிரிவில் ராம்ஜி சக்பால் என்பவர் பணிபுரிந்தார். மூன்று தலைமுறைகளாக இவருடைய குடும்பம் ராணுவத்தில் பணிபுரிந்தது.
மராட்டிய மாநிலம் அம்பவாதே என்ற கிராமம் ராம்ஜியின் பிறந்த ஊர்.
ராம்ஜி பிறந்த மஹர் பிரிவு தாழ்த்தப்பட்ட ஜாதியாக கருதப்பட்டது. அந்தச் ஜாதியினர் உயர்ஜாதிக்காரர்களின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு ஆளாகி வந்தார்கள்.
அவர்கள் கிராமத்திற்கு வெளியேதான் வாழ்ந்தார்கள். அவர்கள்தான் கிராமத்தை காக்கும் காவலாளிகளாக வேலை செய்ய வேண்டும். அதற்காக அவர்களுக்கு கூலி எதுவும் கொடுக்கப்பட மாட்டாது.
அவர்கள் பொதுக் குளத்திலிருந்தோ, பொதுக் கிணற்றிலிருந்தோ தண்ணீர் எடுக்க முடியாது. கோவிலுக்கு போக முடியாது. மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும்.
இதுதான் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நேரத்தில் மராட்டிய கிராமப்புற நிலைமை.
ராம்ஜி சக்பால் பீமாபாய் என்ற பெண்ணை மணந்தார். அவருடைய குடும்பமும் ராணுவ வீரரின் குடும்பம்தான்.
இந்தத் தம்பதிக்கு மொத்தம் 14 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் நான்கு ஆண்குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகள் மட்டுமே உயிரோடு இருந்தன.
இவர்களுடைய கடைசிக் குழந்தை இந்தூருக்கு அருகிள் உள்ள மோ என்ற நகரில் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி பிறந்தது.
அந்தக் குழந்தைக்கு பீம்ராவ் என்று பெயரிட்டனர்.
தனது சமுதாயத்தை தரணியில் உயர்த்தும் பலத்துடன் அந்த குழந்தை பிறந்தது. அதனாலேயோ என்னவோ, அதற்கு பீம்ராவ் என்ற பெயர் பொருத்தமாக அமைந்து விட்டது.
ராம்ஜி சக்பால் ராணுவத்தில் சேரும்போது சிப்பாயா கத்தான் சேர்ந்தார். கற்றறியும் ஆர்வம் ஆங்கில மொழியை நன்றாக கற்றுக் கொள்ள உதவியது. ராணுவத்தில் ஆசிரியராகவும் பணியாற்றினார். சுபேதார் மேஜர் என்ற தகுதியை பெற்றார். மோ நகரில் இருந்த ராணுவ பள்ளியின் தலைமை ஆசிரியராக வேலை செய்து வந்த நேரத்தில் அவர் ஒய்வு பெற்றார்.
இதையடுத்து ராணுவக் குடியிருப்பை காலி செய்ய வேண்டியதாயிற்று. அதுமட்டுமின்றி மகன்களின் படிப்புக் கும் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. எனவே, தபோலி நகருக்கே திரும்பி விட ராம்ஜி முடிவு செய்தார்.
1896 ஆம் ஆண்டு பீம்ராவ் தபோலி நகரின் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டான்.
பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய சில மாதங்களில் பீம்ராவின் தாய் பீமாபாய் நோய் தாக்கி காலமானார். குடும்பம் வேதனையில் தவித்தது. ஆனால், துயரத்தை மறைத்து பிள்ளைகளை நன்றாக வளர்த்தார் ராம்ஜி.
பிள்ளைகளுக்கு தானே எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்தார். அவர் புராணக் கதைகளை தனது மகன் களுக்கு படித்துக் காட்டுவார். கபீர்தாசர் உள்ளிட்ட கவிஞர்களின் பாடல்களையும் பாடிக் காட்டுவார்.
சாதிய அடக்குமுறைக்கு எதிரான கபீர்தாசர் மீது ராம்ஜி ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தார்.
மொத்தத்தில் தனது பிள்ளைகளுக்கு தாயும், தந்தையும், ஆசானுமாக இருந்தார்.
தனக்குக் கிடைத்த ஓய்வூதியம் குடும்பத்துக்கு போத வில்லை. எனவே அவர் வேறு ஒரு வேலைக்கு முயற்சி செய்தார். அந்தச் சமயத்தில் சதாரா நகரில் அவருக்கு ஒரு வேலை கிடைத்தது. எனவே, குடும்பம் அந்த நகருக்கு குடிபெயர்ந்தது.
ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடிந்த பீம்ராவும் அவனு டைய அண்ணன் ஆனந்த்தும் சதாரார நகரிலிருந்த அரசாங்க உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
அந்தப் பள்ளியில்தான் அருவறுக்கத்தக்க சாதியக் கொடுமைகளை முதன்முதலாக பீம்ராவ் எதிர்கொண் டான்.
வகுப்பு அறையில் கடைசியில் சாக்கு விரித்து உட்கார வேண்டும். அவர்களுடைய பாடப் புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் ஆசிரியர்கள் தொடமாட் டார்கள். விடைத் தாள்களை திருத்த மாட்டார்கள். கேள்விகள் கூட கேட்க மாட்டார்கள்.
அதுமட்டும் இல்லை. தாகம் எடுத்தால் அங்கிருக்கு பானைகளில் தண்ணீர்கூட குடிக்க முடியாது. உயர்ஜாதி மாணவர்களைக் கெஞ்சினால் அவர்கள் தண்ணீர் மொண்டு ஊற்றுவார்கள். அதை குனிந்து கைகளால் பிடித்து குடிப்பார்கள்.
தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை தந்தையிடம் கூறி அழுவான் பீம்ராவ். ஆனால், அவர் அவனைத் தேற்றி நன்றாக படிக்க வேண்டும் என்று கூறுவார். பீம்ராவுக்கு படிப்பில் அக்கறை ஏற்பட்டது. ஒரு வைராக்கியத்துடன் அவமானங்களைத் தாங்கி படித்தான்.
ஒருநாள் பலத்த மழை கொட்டியது. வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு மழை பெய்தது. ஆனால், எப்படியும் பள்ளிக்கு போக வேண்டும் என்று பீம்ராவ் முடிவு செய்தான். நனையாமல் போக அவனிடம் எதுவுமே இல்லை. நனைந்து கொண்டே பள்ளிக்கு போனான்.
தொப்பலாக நனைந்து பள்ளிக்கு வந்த அந்த மாணவனை ஒரு பிராமண ஆசிரியர் கனிவோடு பார்த் தார். கல்வியில் அவனுக்கு இருந்த அக்கறையை மனதுக் குள் வியந்தார். அங்கே படித்த தனது மகனை அழைத்தார்.
“பீம்ராவை நம் வீட்டுக்கு அழைத்துப் போ. அவனுக்கு வேறு உடையும் உணவு கொடு”
தந்தை சொன்னபடி அவருடைய மகன் பீம்ராவை தனது வீட்டுக்கு அழைத்துப் போய் உடையும் உணவும் கொடுத்தான்.
இவரைப் போலவே இன்னொரு ஆசிரியரும் இருந்தார். அவரும் பிராமணர்தான். அவர் பெயரே ஜாதிப் பெயர்தான். அம்பேத்கர் என்பது அவருடைய பெயர். இவர் பீம்ராவை தனது மகனைப் போலவே கருதினார்.
தான் சாப்பிடக் கொண்டுவரும் உணவில் பீம்ராவுக்கும் கொடுப்பார். தனது அருகிலேயே உட்காரந்து சாப்பிடும் படி சொல்வார். நன்றாக படித்து பெரிய ஆளாக வரவேண் டும் என்று கூறுவார். அவருடைய ஆதரவு பீம்ராவுக்கு மிகவும் உதவியாக இருந்தது.
அவருடைய நினைவு எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காகவே தனது பெயரை பீம்ராவ் ராம்ஜி சக்பால் என்பதற்கு பதிலாக பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக் கொண்டான்.
உயர்ஜாதிக் காரர்கள் அனைவரும் கொடுமையாளர் கள் அல்ல. அவர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். சாதிய அமைப்புதான் மோசமானது. அதை ஒழித்தால் தான் அனைவரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்று அம்பேகர் நினைத்ததற்கு இந்த இரு ஆசிரியர்களும்தான் முக்கியமானவர்கள்.
பள்ளியில்தான் சாதிக் கொடுமை அனுபவித்தார் என்று இல்லை. வெளியிலும் அந்த வேட்டை நாய் துரத்திக் கொண்டுதான் இருந்தது.
ஒருநாள் பகல் நேரத்தில் தாகம் வாட்டியதால், உயர் ஜாதியினர் பயன்படுத்தும் குளத்தில் இறங்கி தண்ணீர் குடித்து விட்டான். இதைப் பார்த்த உயர்ஜாதியினர் ஓடிவந்து சிறுவன் அம்பேத்கரை கொடூரமாக அடித்தனர். மயங்கி விழும் அளவுக்கு அடித்தனர்.
தனது தந்தையை பார்ப்பதற்காக சென்ற சமயத்தில் அம்பேத்கரின் உள்ளத்தில் இன்னொரு வடு ஆழமாக பதிந்தது. அப்போது, அம்பேத்கரின் தந்தை கோரேகான் என்ற இடத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அம்பேத்கரும் ஆனந்த்தும் ரயிலில் புறப்பட்டு மசூர் ரயில் நிலையத்தில் இறங்கினார்கள். தந்தை வருவார் என்று காத்திருந்தார்கள். அவர் வராததால், ஒரு மாட்டு வண்டியை வாடகைக்கு அமர்த்தி தந்தையைக் காண புறப்பட்டடார்கள்.
முதலில் அவர்கள் ஜாதி என்னவென்று வண்டிக் காரனால் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பயணத்தின் போது அவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரிந்து கொண்டான். உடனே கோபம் அடைந்தான். வண்டியை நிறுத்தி மாட்டை அவிழ்த்து விட்டான். பிறகு வண்டியை பின்புறமாக சாய்த்து சிறுவர்கள் இருவரையும் கீழே தள்ளி விட்டான்.
அவர்களுக்கோ எப்படியும் தந்தையிடம் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.
“ஐயா வண்டிக்காரரே, பேசிய பணத்தைப்போல இருமடங்கு தருகிறோம். கோரேகானுக்கு கொண்டு போய் விடுங்கள்” என்றனர்.
பண ஆசை யாரை விட்டது. அப்போதும் வண்டிக்காரன் தனது கொள்கையை விடவில்லை.
“சரி போகலாம். ஆனால், நான் வண்டியில் வர மாட்டேன். நடந்துதான் வருவேன். நீங்கள்தான் வண்டியை ஓட்ட வேண்டும்”
ஜாதிக் கொடுமை எப்படி தலை விரித்தாடி இருக்கிறது பாருங்கள்.
அம்பேத்கரின் அண்ணன் ஆனந்த் வண்டியை ஓட்டினான். இருவரும் ஒருவழியாய் தந்தையிடம் வந்து சேர்ந்தனர்.

You may also like
பெரியார் திடலில் ஒரு பெரியார் தொண்டரின் அனுபவம்!
பிரபாகரனை போற்றும் பெரியாரியவாதிகளுக்கு ஒரு கேள்வி! – Usman Ghani
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி., பெண்களுக்கு உரிய இடம் ஒதுக்க கி.வீரமணி அறிக்கை!
கனிமொழி கொரோனா வார்டுக்குள் நலம் விசாரித்தார்!

Leave a Reply