அம்பேத்கருக்கு பத்து வயது ஆன சமயத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
அவனுடைய தந்தை ராம்ஜி மறுமணம் செய்து கொண்டார். அது அம்பேத்கருக்கு பிடிக்கவில்லை. இனி, தனது தந்தையிடம் செலவுக்கு எதிர்பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தான்.
பம்பாய்க்கு ஓடிப்போய் ஏதேனும் மில்லில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து பிழைத்துக் கொள்ள லாம் என்று நினைத்தான்.
ஆனால், அவனுடைய அத்தை அந்த நினைப்பை மாற்றினார். கல்வி கற்பதுதான் வாழ்க்கையில் உயர முடியும் என்று அவர் கூறினார். இதையடுத்து எவ்வளவு கஷ்டப்பட்டாலும் படிப்பை தொடர முடிவு செய்தான்.
அம்பேத்கருக்கு முடிவெட்டுவது கூட தீட்டு என்று முடி திருத்துபவர்கள் மறுத்தார்கள். சகோதர சகோதரிகள்தான் அம்பேத்கருக்கு முடி வெட்டி விடுவார்கள்.
தபோலி உயர்நிலைப் பள்ளியில் படித்த சமயத்தில் அம்பேத்கரின் குடும்பம் பம்பாய்க்கு குடிபெயர்ந்தது. அங்கு மிகச் சிறிய அறையில் குடும்பத்தினர் மொத்தமும் வசிக்கத் தொடங்கினர்.
அதேசமயம், பம்பாயில் இருந்த எல்பின்ஸ்டன் உயர்நிலைப் பள்ளியில் அம்பேத்கரும் அவனுடைய அண்ணனும் சேர்க்கப்பட்டனர். அது பம்பாயின் சிறந்த பள்ளியாக கருதப்பட்டது. இந்தப் பள்ளியில் எப்போதும் படித்துக் கொண்டே இருந்தான் அம்பேத்கர்.
அங்கும் தீண்டாமைக் கொடுமை தொடரத்தான் செய்தது. சம்ஸ்கிருத மொழியைப் படிக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினான். ஆனால், தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு சம்ஸ்கிருத மொழியை கற்பிக்க முடியாது என்று சாதி வெறி கொண்ட பிராமண ஆசிரியர்கள் மறுத்து விட்டார்கள்.
எனவே, பாரசீக மொழியை எடுத்துப் படித்தான்.
அம்பேத்கரின் வீடு ஒரே ஒரு அறைதான் இருந்தது. அங்குதான் தட்டுமுட்டுச் சாமான்கள் இருக்கும். அங்குதான் சமையல் செய்ய வேண்டும். அறை முழுவதும் புகை மண்டியிருக்கும். மின்சார விளக்கு இருக்காது.
மண்ணெண்ணெய் விளக்குதான். அதற்கும் கண்ணாடி சிமிழ் கிடையாது. அந்த விளக்கில்தான் அம்பேதகர் படிக்க வேண்டும்.
தனது மகன் நன்றாக படிக்க வேண்டும் என்று தந்தை ராம்ஜி விரும்பினார். மகனுக்குத் தேவையான புத்தகங் களை குடும்ப நகைகளை அடகுவைத்து வாங்கிக் கொடுத்தார்.
ஆங்கில மொழியை நன்கு அறிந்திருந்த அவர், தன் மகனுக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் கற்றுக் கொடுத்தார். ஆங்கிலத்திலிருந்து மராத்தி மொழியில் சரளமாக மொழிபெயர்க்கவும் கற்றுக் கொடுத்தார்.
இரவில் அம்பேத்கர் படிக்க வசதியில்லை. எனவே, இரவு எட்டு மணியளவில் மகனைத் தூங்கும்படி சொல்வார். அருகிலேயே அவர் உட்கார்ந்திருப்பார். இரவு 2 மணிக்கு மகனை எழுப்பி விடுவார். அந்த இடத்தில் அவர் படுப்பார். விடியும்வரை அம்பேத்கர் பாடங்களை படிப்பார்.
எல்பின்ஸ்டன் பள்ளியில் இரண்டு மகன்களுக்கும் பணம் கட்டுவது ராம்ஜிக்கு கஷ்டமாக இருந்தது. எனவே, மூத்த மகன் ஆனந்த் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு போவது என்று முடிவு செய்தார்.
1907 ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் வகுப்பில் அதிக மதிப்பெண்களுடன் தேறினான் அம்பேத்கர். பாரசீக மொழியில் மிக அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.
மஹர் வகுப்பில் முதன்முதலில் மெட்ரிகுலேஷன் தேறியது அம்பேத்கர்தான். எனவே அந்தப் பிரிவினர் அவருக்கு பாராட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்.
அந்த நிகழ்ச்சியில் பிரபல மராத்தி எழுத்தாளரும், சமூக சீர்திருத்தவாதியுமான கேலுஸ்கர் என்பவர் அம்பேத்கரை பாராட்டி பேசினார். தினமும் அவர் பூங்காவில் படிப்பது வழக்கம். அம்பேத்கரும் அங்கேதான் படிப்பார். அந்த வகையில் அம்பேத்கரை அவர் அறிந்திருந்தார். அவரு டைய படிப்பார்வத்தை அறிந்து நிறைய புத்தகங்களை கொடுத்து உதவினார்.
இந்த நிகழ்ச்சியிலும் அவர், தான் எழுதிய புத்தரின் வாழ்க்கைக் கதையை அம்பேத்கருக்கு பரிசாக கொடுத்தார்.
உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் ஆண்களுக்கு திருமணம் செய்வது அந்தக்கால வழக்கம்.
அந்த வகையில் அம்பேத்கருக்கும் திருமணம் செய்து வைக்க ராம்ஜி விரும்பினார். தனது மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடினார். தனது ஊரான தபோலியில் சுமைதூக்கும் தொழிலாளியான பிகு வலங்கர் என்பவரி மகள் ராமியை அவருக்கு பிடித்திருந்தது.
இருவருக்கும் 1906 ஆம் ஆண்டு ஏப்ரம் மாதம் இரவு நேரத்தில் திருமணம் நடைபெற்றது. ஒரு மீன் மார்க்கெட் மைதானத்தில் சாக்கடை நீர் சூழ்ந்திருந்த இடத்தில் இரவு நேரத்தில் அந்தத் திருமணம் நடைபெற்றது.
வேறு எங்கும் திருமணம் நடத்த தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதியில்லை. அதுவும் மீன் மார்க்கெட்டில் இரவு கடைகளை அடைத்த பிறகுதான் திருமணம் நடத்த வேண்டும் என்று இருந்தது.
திருமணத்தின் போது, அம்பேத்கருக்கு 17 வயது. ராமிக்கு 9 வயது.
திருமணம் முடிந்தவுடன் ராமியின் பெயர் ரமாபாய் என்று மாற்றப்பட்டது. அவர் தனது கணவருக்கு ஏற்ற மனைவியாய் வாழ்ந்தார்.
திருமணத்திற்கு பிறகு உயர்கல்விக்காக எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு இண்டர் மீடியட் வரை மட்டுமே படிக்க முடிந்தது.
இப்போதும் அவருக்கு எழுத்தாளர் கேலுஸ்கர் உதவி செய்ய முன்வந்தார். மேல்படிப்புக்கு தகுதிவாய்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவி புரிய பரோடா மன்னராக இருந்த சாயாஜிராவ் தயாராக இருந்தார்.
இதை கேள்விப்பட்டிருந்த கேலுஸ்கர் அம்பேத்கரை சிபாரிசு செய்தார். அவர் அம்பேத்கரை அழைத்து கேள் விகள் கேட்டு பதிலில் திருப்தி அடைந்தார். அம்பேத்கரின் படிப்புக்காக மாதம் 25 ரூபாய் கொடுக்க மன்னர் உத்தரவிட்டார்.
அந்த நாட்களில் அது மிகப்பெரிய தொகையாகும். அந்தப் பணத்தைக் கொண்டு அம்பேத்கரின் குடும்பம் வேறு ஒரு இடத்தில் குடியேற முடிந்தது. அந்த புதிய வீட்டில் இரண்டு அறைகள் இருந்தன. சமையல் செய்ய ஒரு இடம், அம்பேத்கர் படிக்க ஒரு இடம்.
பரோடா மன்னரின் உதவித் தொகையுடன் பி.ஏ., பட்ட வகுப்பைத் தொடர்ந்தார் அம்பேத்கர்.
அந்தக் கல்லூரியின் உணவு விடுதியை நடத்தியவர் ஒரு பிராமணர். அவர், அம்பேத்கருக்கு உணவோ, தேனீரோ கொடுக்க மறுத்தார்.
ஆனால், அங்கு பேராசிரியராக பணிபுரிந்த முல்லர் என்பவர் அம்பேத்கருக்கு உதவி செய்தார். படிப்புக்குத் தேவையான புத்தகங்களைக் கொடுத்தார். உடைகளையும் கொடுத்தார்.
1912 ஆம் ஆண்டு அம்பேத்கர் பி.ஏ., வகுப்பில் தேறினார். மேலும் படிக்க விரும்பினார். ஆனால், குடும்ப சூழ்நிலை மோசமாக இருந்தது. அவருடைய தந்தை ராம்ஜி நோய்வாய்ப்பட்டார்.
எனவே, பரோடா மன்னரின் ஆயுதப்படையில் லெப்டினென்ட் பதவியை ஏற்றுக் கொண்டார். ராம்ஜிக்கு இது பிடிக்கவில்லை. அம்பேத்கர் விரும்பியிருந்தால் ஆங்கிலேய அரசாங்கத்தில் நல்ல வேலை கிடைத்திருக்கும்.
ஆனால், அங்கு உயர் பதவியில் இருந்தவர்கள் எல்லோ ரும் பிராமணர்கள். அவர்களுடைய சாதி வெறியை அறிந்திருந்த அம்பேத்கர் அவர்களுக்கு கீழ் வேலை செய்வதை விரும்பவில்லை.
பரோடா மன்னரின் ஆயுதப்படையில் பணியில் சேர்ந்து 15 நாட்களில் தந்தையின் உடல்நிலை மோசமடைந்தது. உடனே தந்தையிடம் வந்தார். அருகில் இருந்து கவனித்துக் கொண்டார். ஆனால், ராம்ஜி மரணமடைந்தார். இது அம்பேத்கரை துயரத்தில் ஆழ்த்தியது.
தனது கனவு தகர்ந்து போவதாக உணர்ந்தார். மேல்படிப்பு என்பது அவருடைய கனவாக இருந்தது. இப்போது, குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பரோடாவிலும் உயர்ஜாதியினரின் கொடுமை நிறைந்திருந்தது. எனவே, அங்கும் செல்ல விரும்பவில்லை.
இந்தச் சமயத்தில் தகுதி வாய்ந்த சில மாணவர்களுக்கு அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிக்க உதவி செய்வதாக பரோடா மன்னர் அறிவித்தார். இதை அறிந்த அம்பேத்கர் பரோடா மன்னரைச் சந்தித்தார்.
அவருக்கு அம்பேத்கரின் திறமை தெரியும் என்பதால், வேறு இரு மாணவர்களுடன் அம்பேத்கருக்கும் உதவ முன் வந்தார்.
மனைவி ரமாபாய்க்கும், மற்றவர்களுக்கு அம்பேத்கர் வெளிநாடு சென்று படிப்பதில் மகிழ்ச்சிதான். இருந்தாலும் குடும்பச் செலவுக்கு என்ன செய்வது?
“பரோடா மன்னர் அனுப்பும் உதவித் தொகையில் சிக்கனமாக செலவழித்து மிச்சமாகும் பணத்தை உனக்கு அனுப்புகிறேன்”
மனைவியிடம் உறுதி அளித்தார் அம்பேத்கர். அமெரிக்காவில் இருந்த சமத்துவ உரிமைகள் அம்பேத்கருக்கு ந்ல்ல சூழ்நிலையை உருவாக்கித் தந்தன. மிக கவனமாக படித்தார்.
எம்.ஏ., வகுப்பில் சேர்ந்த அவர், நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் படித்தார். இரண்டு வருடப் படிப்பு முடிந்து, பட்டம் பெறுவதற்காக 1915 ஆம் ஆண்டு தனது ஆய்வுரையைச் சமர்ப்பித்தார். அந்த ஆய்வுரை ஏற்கப்பட்டு அவருக்கு எம்.ஏ., பட்டம் வழங்கப்பட்டது.
1916 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெறுவதற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வுரையைச் சமர்ப்பித்தார்.
அதைத் தொடர்ந்து அவர் லண்டனுக்குச் சென்றார். அங்கு பொருளாதாரத்தில் எம்.எஸ்சி., டி.எஸ்சி., பட்டம் பெறுவதற்காக சேர்ந்தார். அதோடு பார் அட் லா படிக்க விரும்பி அதற்கான அமைப்பிடம் பதிவு செய்து கொண்டார்.
ஒரே நேரத்தில் மூன்று பட்டங்களையும் பெறுவதற்காக இரவு பகல் பார்க்காமல் படித்தார். இத்தகைய சூழலில் பரோடா மன்னரிடம் இருந்து வந்த கடிதம் அவருக்கு அதிர்ச்சி அளித்தது.