Home > அரசியல் > சீனா முதல் இஸ்லாம் வரை சீறித் தாக்கும் கொரோனா வைரஸ்

சீனா முதல் இஸ்லாம் வரை சீறித் தாக்கும் கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் அறிமுகமானதில் இருந்து அதை வைத்தே அமெரிக்காவில் ட்ரம்பும், இந்தியாவில் மோடியின் பாஜக அரசும் மிகப்பெரிய அரசியலை நடத்துகிறார்கள்.

அதிலும் பாஜக நடத்தியதோ, மதவாத அரசியல். இந்தியாவில் இஸ்லாமியர்களால்தான் கொரோனா வைரஸ் பரவியதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

2019 டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி சீனாவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உடனே, அந்த கிருமியின் தீவிரத்தன்மை உலகிற்கு அறிவிக்கப்பட்டது.

சீனாவில் கிருமி கண்டறியப்பட்டவுடன், அந்த கிருமியின் தன்மையை அறிந்த தென்கொரியா விஞ்ஞானிகள் உடனடியாக கிருமியைக் கண்டறியும் கருவியைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஜனவரி 20 ஆம் தேதி தென்கொரியாவில் அந்தக் கிருமி பரவத் தொடங்கியது. அதேமாதம் ஜனவரி 30 ஆம் தேதி இந்தியாவில் கேரளா மாநிலத்திலும் அந்த கிருமியால் பாதிக்கப்பட்ட நபர் கண்டறியப்பட்டார்.

உடனே, விமான நிலையங்களில் வெளிநாட்டிலிருந்து வருவோரை தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பினார்.

அதை பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை. அது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்கும் ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தது. பிறகு, மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பதில் கவனமாக இருந்தது.

மார்ச் 12 ஆம் தேதிதான் உலக சுகாதார அமைப்பு சர்வதேச பேரிடர் என்று அறிவித்தது. அப்போதும் இந்தியா உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜக தலைவர்கள் பலர் கனிகா கபூர் என்ற பாடகியின் விருந்தில் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

மார்ச் 24 ஆம் தேதிதான் மத்திய அரசு முழு ஊரடங்கு அறிவித்தது. ஆனால், மார்ச் 12 ஆம் தேதி டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் என்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்றவர்களை குறிவைத்து பொய்ப் பிரச்சாரத்தை பாஜக கிளப்பியது.

அது என்ன தப்லிக் ஜமாத்? இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரை தப்ளிகிகள் என்று அழைக்கிறார்கள். டெல்லி தப்ளிகி மாநாட்டிற்கு சென்று வந்த இஸ்லாமியர்களில் பெரும்பான்மையானவர்கள் சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் யாரும் பெரும் செல்வந்தர்களோ, மெத்தப் படிதவர்களோ இல்லை.

அவர்களில் பெரும்பாலும் கூட்டமாக வாழும் பழக்கம் உடையவர்கள். வழிபாட்டுத் தலத்தில்கூட நெருக்கமாகவும் கூட்டமாகவும் நின்றபடியும் வழிபடும் வழக்கம் உடையவர்கள். வழிபாடு முடிந்தவுடன் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொள்வார்கள்.

இத்தகைய பழக்கம் உள்ளவர்கள் டெல்லி மாநாட்டில் பங்கேற்று, மார்ச் 13 ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கிவிட்டார்கள். அதாவது, மார்ச் 20 ஆம் தேதிக்குள் பெரும்பான்மையான தனி நபர்கள் தமிழகம் திரும்பி விட்டார்கள்.

இந்நிலையில்தான் மார்ச் 23 ஆம் தேதிக்கு பின்னர், டெல்லி தப்லிகி மாநாட்டுக்குச் சென்று திரும்பிய இஸ்லாமியர்கள் வைரஸை சுமந்து வந்திருப்பதாக செய்தியை பரப்பினார்கள்.

இப்படி ஒரு செய்தி வந்ததும், ஆயிரத்துக்கு மேற்பட்ட தப்லிகிகள் தாமாகவே முன்வந்து, கொரோனா தொற்றுக்கான சிகிச்சைக்கு தங்களை உட்படுத்திக் கொண்டார்கள்.

அதுவரை, கொரோனா தொற்று குறித்து அறிவித்த விஜபாஸ்கருக்கு பதிலாக, சுகாதாரத்துறை செயலாளர் பீலா செய்தியாளரைச் சந்தித்தார். அவர் குறிப்பாக டெல்லி மாநாடு சென்றவர்களில் எத்தனை பேருக்கு சோதனை என்றும், எத்தனை பேருக்கு நோய்த் தொற்று என்றும் வெளிப்படையாக அறிவிக்கத் தொடங்கினார்.

அவருடைய அறிவிப்பைத் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக குறிவைத்து பிரச்சாரத்தை தொடங்கினார்கள்.

இதில் கொஞ்சம்கூட உண்மையில்லை என்பதையும், திட்டமிட்ட வதந்தி என்பதையும் ஒரு சிறிய கணக்குப்போட்டால் நிரூபிக்க முடியும்.

டெல்லியிலிருந்து மார்ச் 13 ஆம் தேதிமுதல் 20 ஆம் தேதிவரை தப்லிகிகள் சொந்த வீடுகளுக்குத் திரும்பினார்கள். அப்போதெல்லாம் அவர்களுக்கு நோய்த் தொற்று குறித்து எதுவுமே தெரிந்திருக்கவில்லை. எனவே, அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனும், மசூதியில் தொழுகை நடத்தியவர்களுடனும் நெருக்கமாகவே இருந்திருப்பார்கள். அப்படிப் பார்த்தால்கூட பல ஆயிரக்கணக்கானோருடன் அவர்கள் தொடர்பு வைத்திருப்பார்கள்.

ஆனால், டெல்லி சென்ற தப்லிகிகளில் 500க்கு மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக பீலா அறிவித்தது எப்படி? யாருக்காக என்பது அன்றிலிருந்தே கேள்விக்கு உள்ளாகியது.

கடந்த 40க்கு மேற்பட்ட நாட்களில் கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை காணும்போது, 2 மீட்டர் இடைவெளி இருந்தால்கூட பரவும் என்பதை அறியமுடிகிறது. உணவு வழங்கும் தன்னார்வலர்களுக்கும், பொருள்கள் விற்கும் வியாபாரிக்கும், அவரிடம் பொருள் வாங்கியவருக்கும் நோய் தொற்றியிருக்கிறது.

அப்படி இருக்கும்போது, நோய்த் தொற்று இருப்பதாக கூறப்பட்ட 500 பேரால் எத்தனை ஆயிரம் பேருக்கு இந்த கிருமி பரவியிருக்க வேண்டும் என்று கணக்கிட்டுப் பார்த்தால் தெரியும். சாதாரணமாக ஒரு நபர் மூன்று நாட்களில் குறைந்தது நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 100 பேரை தொடர்பு கொண்டிருப்பார். அப்படியானால், குறைந்தது 50 ஆயிரம் பேருக்காவது அவரால் நோய் தொற்றியிருக்க வேண்டும்.

ஆனால், மே 3 ஆம் தேதிவரை 3023 பேருக்குத்தான் நோய்த் தொற்று இருக்கிறது. இது 50 ஆயிரத்தில் 4 சதவீதம் கூட இல்லையே. இப்படி இருக்கும்போது, தினமும் மாலையில் டெல்லி சென்று வந்தவர்களில் இத்தனை பேருக்கு கொரோனா தொற்று என்று செய்தியாளர்களிடம் பீலா சொன்னதெல்லாம் பொய்தானே.

அது இருக்கட்டும், டெல்லி சென்றவர்களில் நோய்த் தொற்று இருப்பதாக கூறப்பட்டவர்களில் இன்னும் எத்தனை பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்? எத்தனை பேர் குணமடைந்து திரும்பினார்கள் என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? ஏன் தகவல் தெரிவிக்கவில்லை?

இஸ்லாமியர்களால் பரப்பியதாக கூறப்பட்ட கொரோனாவை, இப்போது கோயம்பேடுக்கு வந்த வெளிமாநிலத்தவர் பரப்பியதாக ஒரு பொய் கட்டமைக்கப்படுகிறதோ என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்பத் தொடங்கினார்கள்.

அதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டை மூட முடிவெடுத்த அரசு, மதுபானக் கடைகளை திறந்துவிட முடிவெடுத்திருக்கிறது. அடுத்து, மதுபானக் கடைகளால் கொரோனா பரவல் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

You may also like
பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் மீது பாஜக பாலியல் புகார்!
நாளிதழ் பாக்கி பணம் கேட்ட ஏஜண்டை தாக்கிய பாஜக நிர்வாகி!
தடுப்பூசி போட்டிருக்கேன்… ஆனா போடல! – சோழராஜன்
தமிழர்களை சுரண்டும் குஜராத்திகள் – Venkat Ramanujam

Leave a Reply