Home > முகப்பு > தனித்து களமிறங்க விரும்பும் தேமுதிக

தனித்து களமிறங்க விரும்பும் தேமுதிக

விஜயகாந்த் தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி இன்றுடன் (செப்டம்பர் 14) 15 ஆண்டுகள் முடிந்து 16 ஆம் ஆண்டு தொடங்குகிறது. அண்மையில் விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி மாவட்டச் செயலாளர்களுடன் காணொலியில் பேசிய பொருளாளர் பிரேமலதா, “தொண்டர்களும், நிர்வாகிகளும் தனித்து நிற்பதையே விரும்புகிறார்கள். நாம் வைத்த கூட்டணியால் நம்மை விட அவர்களே ஆதாயம் அடைந்திருக்கிறார்கள்”என்று அதிமுகவைத் தாக்கினார். பின், ‘மாற்று அரசியலை தேமுதிகவே முன்னெடுக்கும். பூனைக்கு மணி கட்டுவோம்’ என்றும் கூறினார் பிரேமலதா.

இந்த சூழலில் தேமுதிகவின் 16 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு விஜயகாந்த் தொண்டர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கட்சியின் வியூகத்தையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

“தேசிய முற்போக்கு திராவிட கழகம் துவங்கிய நாள் “செப்டம்பர் 14” தற்போது 16ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடங்கப்பட்ட தேமுதிக தொடர்ந்து மக்களுக்காக மக்கள் பணி ஆற்றி தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு என்றுமே ஒரு தனி வரலாறு உண்டு. தேமுதிக ஜாதி, மதம், இனம் ஆகியவற்றிக்கு அப்பாற்பட்ட கட்சியாக தமிழ்நாட்டில் துவங்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு துவங்கப்பட்ட இயக்கமாகும். எந்த கட்சியிடம் இருந்து பிரிந்து வராமல் சுயம்புவாக லஞ்சம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக அனைத்து துறைகளிலும் முன்னேற்ற உறுதி கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி தேமுதிக” என்று சொல்லி அதிமுகவை மறைமுகமாகத் தாக்கியிருக்கும் விஜயகாந்த் தொடர்ந்து,

தற்போது இதுவரை உலகம் பார்த்திராத கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த ஆறு மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திப்பதோடு பல உயிர்களை கொரோனா வைரசால் இழந்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் பசி பட்டினி வறுமை வேலையின்மை போன்ற பல இடர்பாடுகளை சந்திக்கின்ற இந்த காலக் கட்டங்களில் தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக தொண்டர்கள் தொடர்ந்து பல்வேறு உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகின்றனர். இதனால் மக்கள் மனதில் தேமுதிக ஒரு நீங்காத இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு உடல் அடக்கம் செய்வதற்கு நமது ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை தருகிறோம் என்று சொன்ன முதல் கட்சி தேமுதிகதான்.

கொரோனா காலகட்டம், ஆகஸ்ட் 25 வறுமை ஒழிப்பு தினம், செப்டம்பர் 14 கட்சியின் 16ஆம் ஆண்டு துவக்க நாள் போன்ற நாட்களில் பல்வேறு உதவிகளை தேமுதிக செய்து வருகிறது. கட்சி துவங்கிய நாள் முதல் இன்று வரை யாரிடமும் பணத்தை வசூல் செய்யாமல், சொந்த உழைப்பில் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை கொண்டு தான் கட்சியை வளர்த்து வருகிறோம். இதற்கு நமக்கு கிடைத்த கழகத்தின் நரம்புகளாகவும், இரத்த நாளங்களாகவும் செயல்படும் தொண்டர்கள் தான் காரணம்.

தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கவும், தேமுதிக தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும். எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், சூழ்ச்சிகள் வந்த போதும் பல சவால்களை சந்தித்து வீறுநடை போடுகிறது நமது தேமுதிக. நம் கழகத்தினர் உண்மை விசுவாசத்தின் பிரதிபலிப்பாகவும், தேமுதிக பல மடங்கு ஒற்றுமையாகவும், உறுதியோடும், தமிழ்நாட்டில் யாரும் தவிர்க்கமுடியாத மாபெரும் இயக்கம் என நம் உழைப்பால் உணர்த்தி வருகிறோம்.

நமது கழகம் தமிழக மக்களிடத்தில் பட்டிதொட்டி எங்கும் அனைத்து இடங்களிலும் வேறூன்றி தழைத்தோங்கி மக்கள் ஆதரவோடு வளர்ந்து வருகிறது. எந்தவித வன்முறைக்கும் இடம்கொடுக்காமல் அறவழியில் மக்கள் பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வருகிறது. வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்றதை கருத்தில் கொண்டு,எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம்.

இந்த ஆண்டு தேமுதிக 16ஆம் ஆண்டு துவக்க விழா மக்களுக்கு பயன்படும் வகையில் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் உற்சாகம் அளிக்கின்ற வகையில் கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். மேலும் வரும் 2021 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக ஒரு அபரிதமான வெற்றி பெற்று மக்கள் சேவை ஆற்ற நாம் தயாராக வேண்டும்”என்று கூறியுள்ளார் விஜயகாந்த். இதன்மூலம் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முயற்சிப்பதை இவ்வறிக்கை கோடிட்டு காட்டியிருப்பதாக அரசில் வட்டாரத்தில் கூறப்படுகிறது

You may also like
சிம்புவை விட, விஜயகாந்தை விட கமல் யோக்கியரா?
பிரேமலதா விஜயகாந்திற்கு கரோனா உறுதி!
’மதுரைக்காரன் மன உறுதி நோயிலுருந்து காப்பாற்றும்’’ – விஜயகாந்தை வாழ்த்திய வைரமுத்து!
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி

Leave a Reply