Home > அரசியல் > கிராமசபை மக்கள் சபையாக மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கிராமசபை மக்கள் சபையாக மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அ.தி.மு.க. அரசின் அவலங்களை அம்பலப்படுத்தும் வகையில் திமுக கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும்” என்று கடந்த வாரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அவர் திருவள்ளூரில் கிராம சபைக் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.

இந்நிலையில், கிராமசபை என்பது அரசியல் சட்டத்தால் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாக அமைப்பு. அந்தப் பெயரில் அரசியல் கட்சிகள் நடத்தக்கூடாது.

மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஒரு செய்திக்குறிப்பை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழக அரசு அனுப்பியிருக்கிறது.

இதையடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று இரவு (டிசம்பர் 24) கிராம சபை என்பதை மக்கள்கிராம சபை என்று பெயர் மாற்றி நடத்துமாறு திமுகவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களில் அமைக்கப்படும் கிராமசபை வேறு! திராவிட முன்னேற்றக் கழகம் நடத்தும் கிராம சபைக் கூட்டம் வேறு என்பதைக் கூட இந்த உத்தரவின் பின்னணியில் ஒளிந்து கொண்டிருக்கும் முதலமைச்சரும் உணரவில்லை.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் அறியவில்லை.தி.மு.க. நடத்தும் கிராமசபைக் கூட்டத்திற்கு ஊராட்சிகளின் ஆய்வாளராக இருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு விடவில்லை. ஏன் ஊராட்சி தலைவர்களும் அழைப்பு விடவில்லை.

இக்கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்பு அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டியதில்லை. ஏன் இக்கூட்டத்தில் எந்த அரசு அதிகாரியும் வந்து பங்கேற்க வேண்டியதில்லை.

இது முழுக்க முழுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிராமசபைக் கூட்டம். இது அ.தி.மு.க அரசின் தோல்விகளை – அரசு கஜானாவில் அமைச்சர்கள் அடித்த கொள்ளைகளை – மாநில உரிமைகளை அடகு வைத்த முதலமைச்சரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் பிரச்சாரக் கூட்டம்.

இது தேர்தலை முன்னிட்டு நடத்தப்படும் பிரச்சாரக் கூட்டம்! ஆனால் கிராமசபைக் கூட்டம் துவங்கிய இரு தினங்களிலேயே எடப்பாடி பழனிசாமிக்குக் காய்ச்சல் வந்து விட்டது. கூட்டத்தைப் பார்த்து பதற்றம் அதிகரித்து விட்டது.

எனவேதான், அரசியல் சட்டம் வகுத்துத் தந்த கிராம சபையின் கூட்டத்தைக் கூட நடத்த ஊராட்சிகளை அனுமதிக்காமல் – கட்சிக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சரும் – அமைச்சர்களும் சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணம் நின்று விடும் என்று கற்பனை செய்து கொண்டு- தி.மு.க.வின் கிராமசபைக் கூட்டத்தைத் தடுக்கிறார்கள்.

கிராம சபை பெயரில் அரசியல் நடத்தக் கூடாது என்றால், முதலமைச்சர் பதவிக்கும் அமைச்சர் பதவிக்கும் ஏன் பொருந்தாது? திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிராமசபைக் கூட்டத்தை எக்காரணம் கொண்டும் அ.தி.மு.க. அரசால் தடுத்து விட முடியாது.

பிரச்சாரத்தையும் வழக்குகளைக் காட்டி முடக்கி விட முடியாது. அதே நேரத்தில் –அமைதியான தேர்தலுக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சென்னையில் நடைபெற்ற அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள இந்த சூழ்நிலையில்- திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிராம சபை கூட்டங்கள் இனி ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’ என்ற பெயரில் நடத்தப்படும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 1700 நிர்வாகிகள் – 16500 கிராமங்கள்/வார்டுகளை நோக்கி – மக்கள் சந்திப்பும் பிரச்சாரமும் தொடரும். அதை இந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் மட்டுமல்ல- எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தி விட முடியாது” என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

Leave a Reply