Home > அரசியல் > மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறாரா? அரசாங்கம் நடத்துகிறாரா?

மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறாரா? அரசாங்கம் நடத்துகிறாரா?

கட்சி என்றால் கட்டிப் போட்டுவிடலாம். அதுவே ஒரு அமைப்பு என்றால் அமுக்கி வைத்துவிடலாம். ஆனால், திமுக என்பது ஒரு இயக்கம். இயக்கத்தை முடக்கிவிட முடியாது என்பதை அதன் வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள். அடக்குமுறைகளையும், தோல்விகளையும் கடந்து அது 70 ஆண்டுகளுக்கு மேலாக அது தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. தமிழ்நாட்டின் அரசியலை அந்த இயக்கம்தான் தீர்மானித்திருக்கிறது. அண்ணா தொடங்கி, கலைஞர் முடிய என்று அந்த இயக்கம் முடிவே இல்லாமல் இயங்கியது. கலைஞருக்குப் பிறகு அதை முடக்கிவிடலாம் என்று நினைத்தவர்களை கலைஞரின் தொடர்ச்சியாக இதோ மு.க.ஸ்டாலின் இயக்கி வருகிறார். கலைஞரிடம் கற்ற பாடம் வீண் போகவில்லை. கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக அரசு ஊரடங்கு அறிவித்தாலும், கஷ்டப்படும் மக்களைத் தேடித்தேடி உதவி செய்து, தொடர்ந்து தானும் இயங்கி தனது இயக்கத்தினரையும் இயக்குகிறார் ஸ்டாலின். எதிர்க்கட்சியே ஒரு அரசாங்கத்தைப் போல மக்களுக்கு உதவுவதைப் பார்க்க முடிகிறது. இந்தியாவிலேயே எந்த ஒரு எதிர்க்கட்சியும் இப்படி மக்களோடு நெருக்கத்தை ஏற்படுத்தியதை பார்க்க முடியவில்லை. இதைக் கவனிக்கும்போது எனக்கு நெருக்கடி நிலைக் காலமும், தமிழகத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் கலைஞர் இந்த இயக்கத்தை எப்படியெல்லாம் இயக்கினார் என்பதும் நினைவுக்கு வருகிறது. 1975ல் இந்தியாவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் இந்திரா. வட மாநிலங்கள் அனைத்திலும் தலைவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். வட மாநிலங்களில் எதிர்க்கட்சி அரசுகளை கலைத்தார். தமிழகத்தில் திமுக அரசை கலைக்கவில்லை. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே சுதந்திரக் காற்று வீசியது. வட இந்தியாவில் இருந்து தலைமறைவாக விரும்பும் தலைவர்கள் தமிழகத்தில் பாதுகாப்பு பெற்றார்கள். இடைப்பட்ட காலத்தில் நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்கு கலைஞர் அரசின் ஆதரவை பெறுவதற்காக இந்திரா எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால், ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக எதையும் எதிர்கொள்ள துணிந்தார் கலைஞர். நெருக்கடி நிலையை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, திமுக மாநாட்டிலும் தீர்மானம் நிறைவேற்றிய ஒரே இயக்கம் திமுகதான் என்பது வரலாறு. கடைசியில் திமுகவின் ஆட்சிக்காலம் முடிய 16 நாட்கள் இருக்கும்போது தமிழக அரசு கலைக்கப்பட்டது. இதையே, ஊழலுக்காக கலைக்கப்பட்ட அரசு என்று இன்றும் சில அறிவிலிகள் பேசித்திரிகிறார்கள். திமுக ஆட்சியைக் கலைத்ததும், ஆளுநர் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகத்துக்கு தமிழகம் மாறியது. தமிழகம் முழுவதும் திமுகவினர் வேட்டையாடப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். கலைஞரை விட்டுவிட்டு, அவருடைய பிரதிநிதியாக ஸ்டாலினை சிறையில் போட்டார்கள். அன்றைக்கே கலைஞருக்கு பதிலாக ஸ்டாலினை இந்திராவே தேர்வு செய்துவிட்டார். பொதுக்கூட்டத்துக்கு அனுமதி இல்லை. கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை. பத்திரிகைகளில் திமுகவினரை தொடர்பு கொள்ள முடியாது. கலைஞரையும் திமுகவினரையும் பிரித்துவிட்டால், அந்த இயக்கத்தை முடக்கிவிடலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டது. அதிமுக தலைவர் எம்.ஜி.ஆரின் சினிமா சூட்டிங்குகள் மட்டும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. உலகில் எங்குமே எந்த ஒரு தலைவரும் யோசிக்காத வகையில் நெருக்கடி நிலையிலும் தனது தொண்டர்களையும் அவர்களுடைய குடும்பத்தினரையும் சந்திக்க புதிய வியூகங்களை வகுத்தார் கலைஞர். நாட்டு நடப்புகளை சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றின் வரிகளைப் பயன்படுத்தியும், உலக வரலாறுகளைச் சொல்லியும் தொண்டர்களுக்கு புரியவைத்தார். முரசொலி பேப்பரை வைத்தே கட்சிக்காரர்களை இணைத்தார். தணிக்கையாளர்களை தவிக்கவிட்டார். அரங்கக் கூட்டங்களுக்கு அனுமதி பெற்று அரசியலைத் தாண்டி இலக்கிய கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்து, தொண்டர்களை சந்தித்தார். குடும்ப உணர்வை பாதுகாத்தார். அவருக்காக திருமணம் முடிந்தவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. பூப்புனித நீராட்டு விழா, புதுமனை புகுவிழா, பழைய வீட்டுக்கு பெயிண்ட் அடித்து அதற்கு திறப்புவிழா என்று கலைஞர் தமிழகம் முழுவதும் சுழன்றடித்தார். அவருடைய இயக்கத்தை முடக்க முடியவில்லை. ஒரு கஷ்டம் வரும்போது அதிலிருந்து மீள்வதற்கு புதிய வழிகள் கண்டறியத் தோன்றும் என்பார்கள். தொண்டர்களையும் மக்களையும் தொடர்ச்சியாக சந்தித்துப் பழகிய தலைவர்கள், வீட்டுக்குள் முடக்கப்பட்டாலும் காணொலிக் காட்சி மூலம் இயங்க முடியும் என்பதையும், ஆளுங்கட்சியைப் போல இல்லாமல், மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் மக்களுக்கு உதவிகளைச் செய்ய முடியும் என்பதையும் ஸ்டாலின் நிரூபித்திருக்கிறார். உலகில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அறிவித்துள்ள அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் மக்களுக்கு அறிவித்துள்ள உதவிகள் பகிரங்கமாக வெளிவருகின்றன. இந்தியாவில் மோடி அரசோ, தமிழகத்தில் எடப்பாடி அரசோ மக்களுக்குச் செய்த உதவிகளை வெளிப்படையாக அறிவிக்க தயாராக இல்லை. வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டால், அரசியல் செய்கிறார் என்கிறார்கள். அவர் அரசியல் செய்யவில்லை, அரசாங்கம் நடத்துகிறார் என்பதை மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். இதுதான் உண்மை.

You may also like
சீர்காழி தொகுதியில் வெற்றி யாருக்கு?
தோழர் தா.பாண்டியனின் தோழமை உணர்வு!
உனது கடைசிக்காலம் மிக மோசமாக இருக்கும்டா நாயே…!
திமுகவில் புதிய “காக்காய் புடிக்கி” பழக்கம்!

Leave a Reply