Home > அரசியல் > பிரபாகரன் வென்ற யுத்தங்கள் எத்தனை?

பிரபாகரன் வென்ற யுத்தங்கள் எத்தனை?

பிரபாகனை மாவீரன் என்றும், தமிழினத்தை காக்க வந்த தலைவன் என்றும் அவருக்காக தமிழகத்தில்தான் இன்னும் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். நாய்க்கு பிரபாகரன் பெயர் வைக்கப்பட்டதை நடிகர் துல்கர் சல்மான் கிண்டல் செய்தாராம். தமிழ்தேசியவாதிகள் பொங்குகிறார்கள். அவர் கிண்டல் செய்ததில் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன். நாய்க்கு ஒருவேளை ஒரே ஒரு பிஸ்கட் போட்டாலும், போட்டவனுக்கு அது விசுவாசமாக இருக்கும். ஆனால், பிரபாகரன் தனக்காக பிள்ளைகளை அனுப்பிய தமிழர்களுக்கு செய்தது என்ன? தமிழர்கள் என்றால் தமிழ்பேசும் எல்லோரையும் தமிழர்களாக நினைத்திருக்கிறாரா பிரபாகரன்? இலங்கையில் வாழ்ந்த தமிழ்பேசும் முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி கொன்றவர் அல்லவா பிltteரபாகரன்? ஈழத்தில் வாழ்ந்த உயர்சாதி இந்துக்களை பத்திரமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு, வெளியேற முடியாத ஏழை எளிய தமிழ் மக்களின் பிள்ளைகளை படிக்கக்கூட விடாமல், படிப்பதற்கு ஏற்பாடுகூட செய்யாமல் சயனைடு குப்பியை கழுத்தில் மாட்டிவிட்டு, மனிதக் குண்டுகளாக சாகடித்தவர்தானே பிரபாகரன்? பிரபாகரன் ஏதோ சுயம்புவாக போர்க்குழுவை உருவாக்கியவர்போல இங்கே இருக்கிற தமிழர்கள்தான் சொல்லித் திரிகிறார்கள். பிரபாகரனுக்கு மட்டுமின்றி, சிரிசபாரத்தினம் உள்ளிட்ட பல்வேறு குழுக்களுக்கும் போர்ப்பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கி, இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் இந்திரா காந்தி. இந்திய மண்ணில் ஈழப்புரட்சிகர குழுக்களுக்கு இடமளித்து, அமெரிக்காவுக்கு இலங்கை இடம்கொடுத்துவிடாமல் மிரட்டி வைத்திருந்தார். அதாவது இலங்கையை இந்தியாவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க போராளிக் குழுக்களை பயன்படுத்திக் கொண்டார். ஆனால், ஈழப் போராளிக்குழுக்களை நயவஞ்சகமாக ஒழித்துக்கட்டியவர் பிரபாகரன். போராளிக் குழுக்களை ஒழித்துக் கட்டியது மட்டுமின்றி, தன்னை எதிர்த்த தமிழ்களையும் கொன்று குவித்த பாசிஸ்ட் பிரபாகரன். தனி அரசாங்கம் நடத்தினார் பிரபாகரன் என்று பெருமை பேசுகிறார்கள். பிரபாகரன் தனது கட்டுப்பாட்டில் இருந்த ஈழப் பகுதியில் எத்தனை பள்ளிக்கூடங்களை நடத்தினார்? மக்களுக்கு பாதுகாப்பு என்ற வகையில் அவர்களை அச்சுறுத்தி வரிவசூல் செய்ததுதான் அவருடைய சாதனை. பச்சிளம் பாலகர்களைக்கூட ஆயுதமேந்தச் செய்து, அவர் நடத்திய நேரடிச் சண்டையை பட்டியலிட முடியுமா? பள்ளிக்கூட பேருந்துகளையும், ராணுவவீரர்கள் செல்லும் வாகனத்தையும் மனித வெடிகுண்டுகளை வைத்து தகர்த்தது தவிர அவருடைய ராணுவத்தின் சாதனை என்ன? தனக்கு உதவிய இந்திய மண்ணில், இந்திராவின் மகன் ராஜிவ் காந்தியின் உடலை சிதறடித்ததையும், இலங்கைத் தமிழர் தலைவர் அமிர்தலிங்கம் உள்ளிட்ட அந்த நாட்டின் முக்கியமான ஆளுமைகளை கொன்றது தவிர வேறு என்ன சாதித்தார் பிரபாகரன்? பிரபாகரனின் புத்திசாலித்தனமான நடவடிக்கைகள் என்று எதையாவது சொல்ல முடியுமா? புத்திசாலிகளான ஆண்டன் பாலசிங்கம், தமிழ்செல்வன் போன்றோரின் நல்ல யோசனைகளையாவது அவர் கேட்டுச் செயல்பட்டிருக்கிறாரா? கடைசியாக நார்வே குழுவின் பேச்சுவார்த்தையில், போலீஸ் அதிகாரமற்ற சுயாட்சி தமிழ்ஈழம் என்ற முடிவை ஆண்டன் பாலசிங்கமும், கிழக்குப்பகுதி தளபதி கருணாவும் ஏற்றுக்கொள்ளச் சொன்னபோது சரி என்ற பிரபாகரன், மறுநாள் ஏன் மறுத்தார்? அவரை மறுக்கச் செய்தவர்கள் யார்? இதுதானே விடுதலைப் புலிகளின் அழிவோடு, அப்பாவி தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் பலியாக காரணமாகியது. கருணா வெளியேறியதுமே புலிகளின் ரகசியங்கள் இலங்கை ராணுவத்துக்கு தெரிந்துவிடும் என்பதையும், புலிகளுக்கு ஆயுத இருப்பு இல்லை என்ற உண்மை அம்பலமாகிவிடும் என்பதையும் அறியாத அறிவிலியாகவா இருந்தார் பிரபாகரன்? இந்திய மண்ணில் அவ்வளவு பெரிய தலைவரைக் கொன்றுவிட்டு, அவருடைய கட்சியைச் சேர்ந்த அரசாங்கம் தமிழர்களை காப்பாற்றும் என்று பிரபாகரனை நம்பச் செய்தது யார்? அவர்கள்தான் சொன்னார்கள் என்றால், அதை நம்பும் அளவுக்கு பிரபாகரனுக்கு சொந்த புத்தி இல்லையா? தன்னை நம்பி வந்த மக்களையே பிணைக் கைதிகளாக்கி தப்பிக்கும் தந்திரத்தை கையாண்டவர் எப்படி மாவீரனாவார்? இலங்கை ராணுவத்துக்கு தேவை பிரபாகரன் மட்டும்தானே. நிலைமையை சமாளிக்க முடியாது என்றதும், சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் அவர் சரணடையத் தயார் என்று அறிவித்திருக்கலாமே? அப்படிச் செய்திருந்தால் ஆயிரக்கணக்கான உயிரை பலிகொடுத்திருக்க வேண்டாமே? அதைவிட்டு, கடைசி நிமிடத்தில் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடையச் சென்று வெட்டுப்பட்டு செத்ததுதான் தமிழினத் தலைவனின் வீரமா? ரோட்டில் அடிபட்டுக் கிடக்கும் நாயைப் போலத்தானே பிரபாகரனின் வெட்டுப்பட்ட உடலை அம்மணமாக்கி உலகுக்கு காட்டினார்கள். ஆக, துல்கர் சல்மான் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.

You may also like
பிரபாகரனை போற்றும் பெரியாரியவாதிகளுக்கு ஒரு கேள்வி! – Usman Ghani
சிரி சபாவும் பத்மநாபாவுமே மாவீரர்கள் – Venkat Ramanujam
கொல்லம் வேலுப்பிள்ளை மகனின் ஆறு தவறுகள் – Venkat Ramanujam
பிரபாகரனின் ஆளுமை லட்சணம் இவ்வளவுதான்! – Athanurchozhan

Leave a Reply