Home > கதை > தங்கச் சங்கிலி – கல்கியின் சிறுகதைகள் – 3

தங்கச் சங்கிலி – கல்கியின் சிறுகதைகள் – 3

என்னுடைய மனைவியின் நற்குணங்களை யெல்லாம் விவரிக்க வேண்டுமானால், ‘விகட’னில் இடம் போதாது. ஆகையால் துர்க் குணங்கள் இரண்டை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன். அவளுக்கு நகைப் பைத்தியம் அசாத்தியம். ஜோதிடத்தில் பைத்திமோ அதைவிட அதிகம். என்ன காரியமானாலும் நாள் நட்சத்திரம் பாராமல் செய்ய மாட்டாள். அதிலும் அண்ணாசாமி ஜோசியர் நாள் பார்த்துச் சொன்னால் தான் அவளுக்குத் திருப்தி.
ஃ ஃ ஃ
என் மனைவியின் கலியாணத்தின்போது அவளுக்குக் கழுத்தில் ஒரு வடம் சங்கிலி செய்து போட்டிருந்தார்கள். சென்ற வருடத்தில் எனக்கு சம்பளம் 50-ரூபாயிலிருந்து 60-ரூபாய்க்கு பிரமோஷன்
ஆனதும் ஒற்றை வடம் சங்கிலியை இரட்டை வடமாக்கிக் கொள்ள வேண்டுமென்று என் மனைவி பிரேரணை செய்தாள். அதை அவளே ஆமோதித்து, ஆதரித்தும் விட்டாள். வாக்கெடுக்கும்போது நான் நடுநிலைமை வகித்தபடியால் பிரேரணை நிறைவேறிவிட்டது. எனவே, அதைக் காரியத்தில் நடத்தி வைப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லாமல் போயிற்று.
ஃ ஃ ஃ
அதாவது, அந்த மாதம் முதல் மாதம் 10-ரூபாய் மீதி செய்து பாங்கியில் போட்டுவரத் தொடங்கினேன். சென்ற மாதத்தில் இது 120-ரூபாய்க்கு வந்தது. மற்றொரு வடம் சங்கிலிக்கு எட்டுப் பவுன் வேண்டும். பவுன் ரூ.131/2 வீதம் எட்டுப் பவுனுக்கு 108 ரூபாயும், கூலிக்கு பாக்கி 12-ரூபாயும் போதுமாகையால், ஒருநாள் நகைக் கடைக்குப் போய் வருவதென்று தீர்மானித்தோம்.

செப்டம்பர் மாதம் 20-ம் தேதி எனக்கு அவகாசமிருந்தது. “இன்றைக்குப் போகலாமா? பாங்கியில் போய்ப் பணம் வாங்கி வரட்டுமா?” என்று கேட்டேன். “ஆக்கப் பொறுத்தது ஆறப் பொறுக்கவில்லையா? நாலுநாள் போகட் டும்” என்றாள் என் மனைவி. எனக்கு இது மிகவும் அதிசயமாய் இருந்தது. ஆனால் காலையில் அண்ணசாமி ஜோசியர் வந்துவிட்டுப் போனது ஞாபகம் வந்ததும் அதிசயம் போய்விட்டது. “ஓகோ! நாள் நன்றாயில்லையோ? என்றைக்குத்தான் நன்றாயிருக்கிறது?” என்று கேட்டேன். “அடுத்த வெள்ளிக்கிழமை நகை பண்ணுவதற்கு ரொம்ப நல்ல நாளாம்” என்றாள் என் மனைவி.
ஃ ஃ ஃ
பத்திரிகை, கித்திரிகை படிக்கும் வழக்கம் என்னிடம் கிடையாது. யார் எப்படிப் போனால் என்ன என்று என்பாட்டில் இருப்பேன். எனவே, வியாழக்கிழமை பாங்கிக்குச் சென்றபோது, சென்ற நாலுநாளாக பாங்கி மூடியிருக்கிறதென்று அறிந்து திடுக்கிட்டுப் போனேன். “பிச்சைக்காரன் குடிசையில் சனீசுவரன் புகுந்தது போல” என்னுடைய சொற்பப் பணத்துக்கு மோசம் வந்து விடுமோ வென்று பீதி யடைந்தேன். நல்லவேளையாக மறுநாள் காலையில் பாங்கி திறந்து பணமும் கொடுத்தார்கள். முதல் நாள் இரவு கலங்கியிருந்த என் மனைவி இப்போது “பார்த்தயளா? பார்த்தயளா? தட்டாமல் கிடைத்ததே! பெரியவாள் நாள் பார்த்துச் சொல்றது வீண்போகுமா?” என்று சொல்லி சந்தோஷப்பட்டாள்.
ஃ ஃ ஃ
சாயங்காலம் நகைக் கடைக்குப் போனோம். எட்டுப் பவுனில் மனதிற்குப் பிடித்ததாய்ப் பார்த்து என் மனைவியே ஒரு சங்கிலியை எடுத்துக் கொண்டாள். கடைக்காரன் பில் எழுதிக்கொடுத்தான்.

அதில் மொத்தம் 145ரூபாய் போட்டிருந்ததைக் கண்டு நான் புன்சிரிப் புடன் “செட்டியாரே! கணக்கு தவறாகப் போட்டிருக்கிறீர்களே!” என்றேன். செட்டியார் வாங்கிப் பார்த்துவிட்டு “தவறு ஒன்றும் இல்லையே” என்றார். “தவறு இல்லையா? எட்டுப் பவுனுக்கு 131/2 ரூபாய்வீதம் 108 ரூபாய்தானே. 136 ரூபாய் போட்டிருக்கிறீர்களே?” என்றேன். செட்டியார் சிரித்துவிட்டு “பவுன் விலை17 ரூபாய்” என்றார். “இது என்ன கூத்து?” என்றாள் மனைவி. “என்ன செட்டியாரே!

என்னைப் பட்டிக்காட்டான் என்று நினைத்துக்கொண்டீரா?” என்று கோபமாய்க் கேட்டேன். “இல்லை, ஸார்! நீங்கள் பட்டணத்து மனிதர் தான். ஆனால் வாசலிலே போர்டில் எழுதியிருக்கிறது. போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்” என்றார் செட்டியார். சங்கிலி வாங்காமலே நாங்கள் வீடு திரும்ப வேண்டியதாயிற்று.

வீடு சேரும் வரையில் வாயை மூடிக்கொண்டு வந்த என் மனைவி, வீட்டுக்குள் நுழைந்தோமோ இல்லையோ, தன்னுடைய ஆத்திரத்தை யெல்லாம் அண்ணாசாமி ஜோசியர் மீது காட்டத் தொடங்கினாள். “அந்த கட்டேலே போற பிராமணன் இனிமேல் இங்கே வரட்டும். காப்பியா காப்பி! கழுநீரைக் கரைத்துக் கொடுக்கிறேன்” என்றும், இன்னும் பலவிதமாகவும் அவரை வசை மொழிகளால் அலங்கரிக்கத் தொடங்கினாள்.

“ஏன் இவ்வளவு ஆத்திரப்படுகிறாய்? நாளை தினம் வேண்டு மானால் 30 ரூபாய் கடன் வாங்கிக் கொண்டு வருகிறேன். சங்கிலி வாங்கிக் கொண்டு வந்துவிடலாமே!” என்றேன். “நன்றாய்ச் சொன்னீர்கள். இதுதான் புருஷாள் அசட்டுத்தனம் என்பது. நேற்று 131/2 ரூபாயாயிருந்த பவுனை இன்றைக்கு 17 ரூபாய் கொடுத்து யாராவது வாங்குவார்களா? அப்படி என்ன வந்தது இப்போது? பாங்கியில் பணம் இருந்தாலும் வட்டியாவது கிடைக்கும்” என்றாள் என் மனைவி. அண்ணாசாமி ஜோசியரை என் மனத்திற்குள் வாழ்த்தினேன்.

“இன்னொரு வடம் சங்கிலி யில்லை யென்று என் கழுத்துஒன்றும் அழவில்லை. பிழைத்துக் கிடந்தால் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் அந்தக் கட்டேலே போற பிராமணன் ஜோசியம் பார்க்கிறானே, ஜோசியம்? பவுன் விலை இப்படி ஏறப்போறது என்று ஜோசியத்தில் பார்த்துச் சொல்கிறதுதானே! அன்றைக்கு எட்டுப் பவுன் வாங்கி வைத்திருந்தாள் இப்போது 28 ரூபாய் லாபத்துக்கு விற்கலாமே?” என்றாள்.
ஃ ஃ ஃ
அப்பொழுதுதான் என்னுடைய மனைவி கேவலம் ஓர் ஆபீஸ் குமாஸ்தாவுக்கு வாழ்க்கைப்பட்டது பெருந்தவறு என்பதையறிந்தேன். பெரிய பாங்க் முதலாளியையாவது பொக்கிஷ மந்திரியையாவது அவள் மணம் புரிந்துக் கொண்டிருக்க வேண்டும்!- நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

– ஆனந்த விகடன் , 12-10-1931

Leave a Reply