Home > செய்திகள் > ஸ்டாலினுக்கு நிகராக களத்தில் கனிமொழி!

ஸ்டாலினுக்கு நிகராக களத்தில் கனிமொழி!

கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், ஒரு அரசாங்கம் முன்னெடுக்காத நிவாரணப் பணிகளை திமுக நிறைவேற்றி வருகிறது. அனைத்து வசதிகளும் உள்ள அரசாங்கத்தால் முடியாத விஷயங்களை திமுக செய்துகாட்டி தானே ஒரு அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு உதவி எண்களைக் கொடுத்து அதை கேட்டு குறித்து, உரிய பகுதி திமுகவினருக்கு சொல்லி, உடனடியாக உதவிகள் கிடைக்கச் செய்கிறது. திமுகவின் அணிகளில் கனிமொழி தலைமையிலான மகளிரணியும் களத்தில் சிறப்பாக பணிபுரிகிறது. ஸ்டாலினுக்கு நிகராக தனது தூத்துக்குடி தொகுதியில் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் உள்ள மகளிரணி நிர்வாகிகளையும் அரவணைத்து வேலை வாங்குகிறார் கனிமொழி. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணின் தந்தையின் மரணத்துக்காக அவர் சொந்த ஊருக்குச் செல்ல மகளிர் அணியினர் உதவிசெய்தது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுப்ரியா எம்.பி. ஏப்ரல் மாதம் 28 ம் தேதி தொலைபேசி வாயிலாக மக்களவை உறுப்பினர் கனிமொழியைத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது மகாராஷ்டிரா மாநிலம், ரத்தினகிரி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுப் பெண் யுவாந்தி அணில் சாகேத் என்பவர், சென்னையிலுள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அவருடைய அப்பா மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாகவும், அவரை உடனடியாக ஊருக்கு அனுப்பி வைக்க உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். யுவாந்தி அணில் சாகேத் பணிபுரியும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு பேசியதில், அப்பெண்ணோடு யாராவது ஒருவர் உடன் சென்றால், அனுப்பி வைக்கிறோம் எனப் பதிலளித்துள்ளனர். இதையடுத்து யுவாந்தியை சொந்த ஊருக்குஅனுப்பி வைக்கும் நடவடிக்கையில் இறங்கினார் கனிமொழி. இந்தச் செய்தியை தி.மு.க மகளிரணி சமூக வலைதளக்குழுவில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து சோழிங்கநல்லூர் கிழக்குப்பகுதி தி.மு.க. மகளிரணி அமைப்பாளர், ந.கலைச்செல்வி, காஞ்சிபுரம் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஈஸ்வரி மகள் பொன்மணி இருவரும் தந்தையை இழந்து தவித்த இளம்பெண்ணோடு மகாராஸ்டிரா மாநிலத்துக்கு சென்று அவரை அவருடைய இல்லத்தில் சேர்த்துவிட்டு திரும்ப முன்வந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பணிபுரியும் நிறுவனத்தில் ஊருக்குச் செல்வதற்காக அந்தப் பெண்ணோடு தி.மு.க மகளிரணி நிர்வாகிகள் இருவரும் செல்வதற்கு முறையான அனுமதியைப் பெற்று, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார். நீண்ட பயணத்திற்குப் பிறகு ஏப்ரல் 29 –ம் தேதி இரவு 11.40 க்கு மூன்று பெண்களும் மகாராஷ்டிரா சென்று சேர்ந்துள்ளனர். இக்கட்டான நேரத்திலும் இளம்பெண்ணுக்கு உதவ 2,400 கிலோமீட்டர் பயணித்து, உடனிருந்து உதவிய இருவரும் ஏப்ரல் 30-ம் தேதி காலை சென்னை வந்து சேர்ந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களும், மகாராஷ்டிரா நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியாவும் தி.மு.க மகளிரணியினருக்கும் கனிமொழிக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர். மகளிர் அணி நிர்வாகிகளுக்கு தனியே தனது வாழ்த்துகளை கனிமொழி தெரிவித்தார்.

You may also like
சீர்காழி தொகுதியில் வெற்றி யாருக்கு?
தோழர் தா.பாண்டியனின் தோழமை உணர்வு!
உனது கடைசிக்காலம் மிக மோசமாக இருக்கும்டா நாயே…!
திமுகவில் புதிய “காக்காய் புடிக்கி” பழக்கம்!

Leave a Reply