Home > செய்திகள் > பெங்களூருவிலிருந்து தென்கொரியாவுக்கு விமானம் ஏற்பாடு செய்த கொரிய தமிழ்ச் சங்கத்தின் “ஆபரேசன்-காமராஜர் தந்த கல்வி”

பெங்களூருவிலிருந்து தென்கொரியாவுக்கு விமானம் ஏற்பாடு செய்த கொரிய தமிழ்ச் சங்கத்தின் “ஆபரேசன்-காமராஜர் தந்த கல்வி”

30 மே சியோல், உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவியுள்ள இக்காலகட்டத்தில் மக்களின் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து, குறிப்பாக வெளிநாட்டு பயணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் பாதிப்புகள் இருந்தாலும் தென் கொரிய அரசாங்கம் கடுமையான ஊரடங்கை அமல்படுத்தாமல் மிகச்சிறப்பாக நோய் தடுப்பு, விழிப்புணர்வு வள மற்றும் ஆளுமை மேலாண்மை நடைமுறைகளை கையாண்டு நோய் பரவுவதைத் சிறப்பாக தடுத்து வருவதை உலகறியும். உள்நாட்டு போக்குவரத்து தடைபடாமல் வெளிநாட்டு போக்குவரத்து மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தென்கொரியாவில் இந்தியர்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலோனோர் உயர் கல்வி, உயர் தொழில்நுட்ப வேலை மற்றும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு காரணங்களால் தாயகம் சென்றவர்கள் மிகக்கடுமையான ஊரடங்கு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டால் சரியான நேரத்தில் திரும்பி வந்து தமது பணிகளை தொடரமுடியாத சூழலுக்கு ஆட்பட்டனர். 1 ஜூன் முதல் தென்கொரியாவிற்கு வரும் வெளிநாட்டினருக்கு கடுமையான விசா நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்றதொரு இக்கட்டான சூழ்நிலைகளில் கொரியாவிற்கு திரும்பி வந்து மேற்சொன்ன பணிகளை மீண்டும் தொடருவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து உதவுமாறு மக்கள் பரவலாக கொரிய தமிழ்ச் சங்கத்திற்கு வேண்டுகோள் வைத்தனர். தமிழ்நாட்டிலிருந்து இந்த வாய்ப்புகளை தொடர்ந்து ஆராய்ந்து வந்த கொரிய தமிழ்ச் சங்கத்தின் கொரிய-தமிழ் கொரிய-இந்திய தொடர்புகள் குறித்த பணிகளை மேற்கொள்ளும் மக்கள் தொடர்பு அலுவலறும் மகளிர் தொழில் முனைவோருமான திருமதி சாந்தி பிரின்ஸ். சங்கத்தின் அறிவுரைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஜெபக்குமார் ஆகியோர் இந்தியாவிலுள்ள கொரியன் அசோசியேசன் மூலம் 30 மே அன்று பெங்களூரிலிருந்து சியோலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சிறப்பு விமானம் மூலம் சுமார் 40-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களை அழைத்து வர ஒருங்கிணைப்பு செய்தனர். இதற்காக ஏற்பாட்டாளர்களிடம் தொடர்ந்து பல நாட்கள் பேசி இந்த பணியை ஒருங்கிணைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுகாறும் இந்திய தூதரகத்திற்கு வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இதே நாளில் சென்னையிலிருந்து இயக்கப்படும் மற்றொரு விமானத்திலும் சென்னையையொட்டிய பிறமாநில மக்களும் பயன்பெறும் 60-க்கும் மேற்பட்ட இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. அதற்கும் கொரிய தமிழ்ச் சங்கத்தின் மூத்த உறுப்பினர் பேராசிரியர் முரளிதரன் மூலம் தூரிதமான தகவல் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பபட்டது. தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்க பல தலைவர்களும் அமைப்புகளும் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியிருக்கின்றனர். அவ்வகையில் ஊர்கள்தோறும் பள்ளிகள் திறந்து கல்விக்கண் திறந்த காமராசரின் பணிகள் போற்றத்தக்கது. ஆகவே இந்த காலம் கருதிய கல்விசார்/ஆராய்ச்சிசார் செயற்பாட்டிற்கு “ஆபரேசன் – காமராஜர் தந்த கல்வி” என்று பெயர் சூட்டுவதில் கொரிய தமிழ்ச் சங்கம் ஆறுதலடைகிறது. முன்னதாக இங்குள்ள இந்தியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இங்கு வர வேண்டிய மக்களுக்கான போக்குவரத்து தொடர்பான வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்த இந்திய தூதரகம் – சியோல், இந்திய அரசின் “வந்தேபாரத்” உள்ளிட்ட நடவடிக்கைகளின் ஊடாக தம்மாலான உதவிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது! இதற்காக கொரிய தமிழ்ச் சங்கம் இந்திய தூதரகத்திற்கும் இந்தியாவிலுள்ள கொரியன் அசோசியேசன் மற்றும் கொரியத் தூதரகத்திற்கும் துணைத்தூதரகங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறது! சியோலிலிருந்து கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகளை தலைவர் இராமசுந்தரம், துணைத் தலைவர் கிறிஸ்டி கேத்தரின், செயலாளர் இராமன் இணைச் செயலர்கள் ஆரோக்கியராஜ், பத்மநாபன் மற்றும் அறிவுரைகுழு உறுப்பினர் அச்சுதன் ஆகியோர் செய்தனர்.

You may also like
தடுப்பூசி போட்டிருக்கேன்… ஆனா போடல! – சோழராஜன்
இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!
ஆஸ்திரேலியாவை அலறவைத்த கொரோனா ஆடு!
கொரிய தமிழ்ச்சங்க பொங்கல் விழாவுக்கு, கவிஞர் வைரமுத்து, நக்கீரன் கோபால் வாழ்த்து!

Leave a Reply