Home > கட்டுரைகள் > 4. டாக்டர் பி. வரதாஜுலு நாயுடு – TAMIL LEADERS – 5

4. டாக்டர் பி. வரதாஜுலு நாயுடு – TAMIL LEADERS – 5

வங்காளத்தில் பிறந்த ‘‘வந்தேமாதரம்’’ கரை மார்க்கமாய்த் தமிழ்நாட்டுக்கு வந்ததோ அல்லது கடல் மார்க்கமாய் வந்ததோ சந்தேகம். கடல் மார்க்கமாய்த்தான் வந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தூத்துக்குடியில் மட்டும் இவ்வளவு வந்தே மாதரக் கூக்குரல் ஏன்? ஸ்ரீமான்கள் சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவமும் சிறைக்குச் சென்றார்கள். சுப்பிரமணிய பாரதியார் புதுச்சேரிக்குப் போய்விட்டார். ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் சுப்பிரமணிய அய்யர் சர்க்காரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். திருநெல்வேலிச் சதிக் கூட்டத்தார், சிறைக்குள் தள்ளப்பட்டனர். இத்தனை ‘‘வைபவங்களுக்கிடையே’’ தமிழர்களின் நாடி எப்படி அடித்துக் கொண்டிருக்கும் சொல்லுங்கள். பார்ப்போம்.

சூரத்து காங்கிரஸ் 1907ல் உடைந்துபோய், மிதவாதிகள் அனைவரும் சர்க்காரோடு ஒத்துழைக்கக்
கங்கணம் கட்டிக் கொண்ட பின்னர், சர்க்கார் உள்ளம் குளிர்ந்தது. அவர்கள் முகம் ‘‘பிரசன்னவதன’’ மாயிற்று. உற்சாகத்தை அளவிட முடியாது. அந்தக் காலத்துக்குச் சிறிது பின்னர், சென்னையிலே, பெண்ட்லண்டு பிரபு என்று ஒரு கவர்னர் இருந்தார். நமது நாட்டுக்கு வந்த கவர்னர்களில் அவர் ‘‘ரொம்ப மோசமானவர்.’’ தனக்கென்று யோசிக்கும் உரிமையைக்கூட வைத்துக் கொள்ளாத உத்தமத் தியாக புருஷன்! அவர், ‘‘நாள் நட்சத்திர, லக்கினம், பார்த்து.’’ மலையுச்சியின் குளிர்ச்சி வாடையினிடையே ஊட்டியில் (உதகமண்டலத்தில்) ஒரு சமயம் திருவாய் மலர்ந்தருளினார்.

‘‘தொண்டு செய்யும் அடிமை, உனக்குச் சுதந்திர நினைவோடா. பண்டு கண்டதுண்டோ, அதற்குப் பாத்திரமாவாயோ’’ என்ற கருத்தை, வசனத்தில் வெளியே விட்டார்.

சுயராஜ்ய நினைப்புக் கொண்டவர்களுக்குக் காயமான இருப்பிடம் சிறை என கர்ஜித்தார் பிரபு. அதிகார வர்க்கத்தினர் கொக்கரித்தனர். தமிழர்களோ வாடின கீரைத் தண்டைப் போலத் துவண்டுபோய்விட்டனர். ஜனத்தொகைக் கணக்கிலே சுமார் மூன்று கோடி தமிழர்கள்! ஆனால் கவர்னர் துரை அவர்களுக்கு, தலை நிமிர்ந்து ஜவாப்புச் சொல்ல – ஒரே ஒரு வரதராஜுலு நாயுடு. இத்தகைய பொறுப்பும் பாக்கியமும் நிறைந்த பதவி, ஸ்ரீமான் நாயுடு அவர்களுக்குத் திடீரென்று ஏற்பட்டதற்குக் காரணம் அவரது சொந்த சக்தியா அல்லது சந்தர்ப்பமா? இரண்டும் என்பேன் நான்.

அரண்மனைக்கு எதிர்மனை இருக்க முடியுமா என்று உறுமிய பெண்ட்லண்டு பிரபுவுக்கு, முடியும் என்று அனாயாஸமாய்ப் பதில் சொன்ன நாயுடு அவர்கள் நொடிப்பொழுதில், தமிழர்களின் உள்ளத்தில் வேரூன்றிப் போனார். எதிர்பாராத எழுச்சியால், தமிழர்களைக் குதூகலத்துடன் திடுக்கிடச் செய்யவும் அதிகார வர்க்கத்தினரை வேறுவகையில் திடுக்கிடச் செய்யவும் கூடிய சக்தி நாயுடு அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? பரம்பரைச் செல்வாக்கா? இல்லை பள்ளிக்கூடப் பயிற்சியா? பள்ளிகளில் தேசாபிமானப் பயிற்சிக்கூடமா? இல்லை, அடிமைத்தனத்திலிருந்து விடுபட வேண்டுமென்பது தமிழர்களுக்குப் பொதுவாக இருந்த ஆவலா? இல்லை சுயராஜ்ய நினைப்போ? உடம்புக்கும் வாழ்வுக்கும் ஒத்துக்கொள்ளாது என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு அதிகமாகவே முடிவு செய்து, முடிப்புக் கட்டிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு, அந்த ஆவலைப்பற்றிப் பேச வேண்டாம் என்கிறீர்கள். சரி, எதிர்வாதம் செய்யாமல் ஒப்புக்கொண்டேன். பின்னே, நாயுடுவின் ‘‘சிறுபிள்ளை’’த் துணிவுக்குப் பக்கத் துணை யாது? நாயுடுவின் துணிவுக்கு நாயுடுதான் துணை.

‘‘சிதம்பரம் போகாமல் இருப்பேனோ, இந்த ஜன்மத்தை வீணாகக் கழிப்பேனோ’’ என்று, அன்று நந்தனார் கூறியதாகக் சொல்லுவதுண்டு. அது மெய்யோ பொய்யோ, எனக்குத் தெரியாது. ஆனால் நாயுடு அவர்கள் பிரசங்க மேடைக்குப் பெருமையும் பலமும் அளிக்கத் தொடங்கிய காலத்தை என்னவென்று சொல்லுவது?

ஒரு சமயம் வீட்டில் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நண்பர் திடீரென்று தோன்றினார். வந்ததும் வராததுமாக, நாயுடு பிரசங்கம் நீர் கேட்டிருக்கிறீரா என்றார். தமிழ் நாட்டில் ஒரே ஒரு நாயுடு மட்டும் இருப்பதாக அவர் பேசியது எனக்கு விசித்திரமாயிருந்தது. சிரிப்பை அடக்கிக்கொண்டு, இல்லை என்றேன். தமது இரண்டு கைகளையும் ஏககாலத்தில் பல வித ரகங்களாகச் சொடுக்கிக் கொண்டு, ‘‘ச்சூச்சூ’’ என்று நாயைக் கூப்பிடுவதுபோல, உதடுகளினால் மிகுதியும் சுவைத்துக்கொண்டு சத்தம் செய்தார். தேள் கொட்டிவிட்டதா என்று சொல்லிச் சிரித்தேன். உம்முடைய ஜன்மம் வீண் என்றார். அந்த நண்பர் காண்பித்த மனோபாவம்தான், பொதுவாகத் தமிழ்நாட்டில் அக்காலத்தில் இருந்து வந்தது.

நாயுடு அவர்களின் பிரசங்க விளம்பரம்! நண்பர் என்னை விடவில்லை. நானும் கூட்டத்துக்குப் போனேன் (சுமார் இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால்) அரண்மனைக்கு எதிர்மனையை வெகு அழகுடனும் துணிவுடனும் நாடெங்கும் கட்டிக் கொண்டு வரும் ஆசாமியை, நான் அதற்கு முன் பார்த்ததேயில்லை. பார்க்க ரொம்ப ஆசை; ஆனால் ஆளைக் காணவில்லை.

ஸிலோன் போட்மெயிலுக்கு ஆத்திரத்துடன், ஒரு மணி நேரம் சலிக்காமல் காத்துக்கொண்டிருக்கும் கிராமவாசி இனத்தைச் சேர்ந்த எனது நண்பர், வெற்றி முகத்துடன் என்னை நோக்கிக் கொண்டேயிருந்தார். திடீரென்று புளியம்பழம் உடைக்கிற மாதிரி கலகலவென்று ஒரே காலத்தில் கூட்டத்தில் கைகளின் சத்தம் கேட்டது. நாயுடு அவர்களின் பிரவேசத்துக்கு அடையாளம்! நிமிர்ந்து பார்த்தேன். சிறிய உருவம்! எனது நண்பரைக் கேலி செய்வது போல, தொண்டையைக் கனைத்துக் கொண்டேன். பதற்றம் வேண்டாம் என்று சொல்லுவதைப் போல, அவர் என்னைப் பார்த்தார். ஆனால், அவருடைய பிராணனெல்லாம், மேடையின் பேரில் வீற்றிருந்த வரதராஜுலுநாயுடு அவர்களின் பேரில் இருந்தது. . . அன்றைய தலைவரின் முகவுரைக்குப் பின்னர்; நாயுடு அவர்கள் எழுந்து நின்று பேசத்துவங்கினார்.

குரலைக் கேட்டேன். எனது நரம்புகள் கடகட வென்று ஆட ஆரம்பித்து விட்டன. ‘‘ஒரு கோடிக்கு ஒரு கோடி பரவியிருந்த கூட்டம், ஊசி விழுந்தால் கேட்கும்படியான அமைதியுடனிருந்தது. நாயுடு அவர்கள் தமது குரலை உயர்த்த வேண்டிய தேவையே ஏற்படவில்லை. அவருடைய இனிமையான குரலில் எவருமே ஈடுபடாமலிருக்க முடியவில்லை. ‘‘மூர்த்தி சிறிதாயினும், கீர்த்தி பெரிது.’’

வெடுக்கு வெடுக்கு என்று பேசும் குழந்தையினிடம் யாருக்குத்தான் அபிமானம் இராது? பெரிய பெரிய மனிதர்களையும் உத்தியோகஸ்தர்களையும், நாஸுக்காகவும் நாகரிகமாகவும் தைரியத்துடனும் ‘மண்டகப்படி’ செய்யும் பிரசங்கியை, அது வரையிலும், தமிழ்நாடு பார்த்ததில்லை. தங்களுடைய உள்ளங்களில் பொங்கிக்கொண்டு கிடந்த உணர்ச்சியை, உருவப்படுத்தி நயமான சொற்களால், இங்கிதமான ஜாடையுடன், சங்கீதக்குரலில் சொல்லும் ஆற்றலுடைய நாயுடு அவர்களை, தமிழர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றதில், வியப்பு ஒன்றுமே யில்லே. காலத்துக்கேற்ற மனிதன் என்று கொண்டாடினார்கள். இது நியாயம்.

தமிழ்ப் பண்டிதர்கள்’ தமிழ்ப் பாஷையை ஒரு குழுவுக் குரியதாகச் செய்துவிட்டார்கள். அதாவது நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது பேர்களுக்கு விளங்காத பாஷையில் பேசியும் எழுதியும், தமிழைக் ‘‘குட்டிச்சுவராய்’’ அழித்துவிட்டார்கள். பண்டிதர்களால் தமிழுக்கு நேர்ந்த அவமதிப்பு ஒருபுறமிருக்க ஆங்கிலம் படித்த தமிழர்கள், தமிழைப் பேசாமலே, அதை அவமதிக்கத் தலைப்பட்டனர். இந்த இரண்டு, அவலக் கூட்டத்தினிடையே அகப்பட்டுக்கொண்டு, தமிழ் தவித்துக் கொண்டிருந்தது. பண்டிதர்கள் கூடினால், விளங்காத தமிழ். இங்கிலீஷ் படித்த தமிழர்கள் கூடினால் விளங்காத இங்கிலீஸ்! இந்தக் கட்டுப்பாடான குறும்புத் தனத்தைத் ‘‘தவிடுபொடி’’யாக்கிய ஏகபோக பாக்கியமும் பாத்தியமும் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களுக்கே உரித்தானதாகும். பாமரத் தமிழுக்குப் பெருமையும் பொலிவும் பலமும் உண்டு என்பதை நிலை நாட்டிய புண்ணியத்தை, எவரும் நாயுடு அவர்களுடன் பங்கு போட்டுக்கொள்ள முடியாது.

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த பிறகு, அது என்ன பிரமாத வித்தை என்று பலர் பேசினார்கள். ஆனால் கொலம்பஸுக்குமுன் அமெரிக்காவை யாரும் காணவில்லை என்பதொன்றே, அவர்களிடையே வாயை அடைக்கப் போதுமான ஆதாரமாகும். எல்லோரும் அறியக்கூடிய எளிய தமிழில், பெரிய விஷயங்களை, சிக்கலான சங்கதிகளை, பலவிதமாகப் பேச முடியும் என்பதை நாயுடு அவர்கள் விளக்கமாகக் காண்பித்துக் கொடுத்தார். (நாயுடு அவர்களின் தாய்பாஷை தெலுங்கு என்பது உங்கள் நினைவில் இருக்கட்டும்.) நாயுடு அவர்களின் இந்த ஒப்பற்ற தொண்டே, அவர் ஜன்மம் எடுத்ததற்குப் போதுமானது.

அனேகமாய் சம வயதுள்ள மூன்று ராஜீயவாதிகள், மூன்று வகைகளில், தங்கள் வாழ்க்கையைச் செப்பனிட்டுக்கொண்டு வந்தார்கள். மூன்று பேர்களும் பழுத்த ராஜதந்திரிகள் (1) ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு (2) ஸ்ரீ ஜ்யார்ஜ் ஜோஸப் (3) ஸர் ஆர். கே. ஷண்முகம் செட்டியார். மூன்று பேர்களும் மூன்று ‘‘திரிகடுகங்கள்!’’ செட்டியார் அவர்கள் வெற்றிக்கு, சுகத்துக்கு, தற்காலிகப் பெருமைக்குத் தொண்டனாகத் தம்மை அமைத்துக் கொண்டுவிட்டார். பாரிஸ்டர் ஜோஸப், மனச் சாட்சிக்கும் மன சஞ்சலத்துக்கும் மதத்திற்கும் பக்தனாக, தம்மை ஆட்படுத்திக் கொண்டு ‘‘ஆற்றில் கரையறியாமல்’’ அலைந்தார். ஸ்ரீமான் நாயுடு அவர்களோ, தூய தேசாபிமானம் ஒருபுறம் பிடித்து இழுக்க, சாமர்த்திய ராஜதந்திரம் மற்றொரு பக்கம் பிடித்திழுக்க, இரண்டுக்குமிடையே, மன அமைதியின்றி ஊசலாடுகின்றார். உலகமே ஒரு நடன அரங்கம், நாடகமேடை என்கிறார் இங்கிலீஷ் கவி ஷேக்ஸ்பியர். உண்மை இதிலே, தன்னை மறந்து, ‘‘ஆக்ட்’’ செய்யும் உத்தமனுக்கு முதல் பரிசு என்பதும் பொய்யா!

நாயுடு அவர்களுக்கு, எதிலும் சந்தேகம் ஏற்படுவதில்லை. அதாவது சந்தேகத்தைக் கொடுக்கக்கூடிய கருத்தோ, கற்பனையோ, கர்மமோ, அவருடைய அறிவிலே தோன்றுவதேயில்லை அவருக்குத் தெரிந்த சங்கதிகள் ஆணித்தரமானவை; தெரியாத விஷயங்கள், அவருக்குத் தேவையில்லை. இதுவே, அவரது வாழ்க்கைத் தத்துவத்தின் சாரம் என்பது எனது கருத்து. ஓர் எல்லைவரையிலும், அவர் காண்பிக்கும் துணிவையும் அபிமானத்தையும் போல, வேறு எவராலும் காண்பிக்க முடியாது. இதுவே, அவருடைய பலத்துக்கும் பலவீனத்துக்கும் அஸ்திவாரமாகும். அடிமை நாடு, கண் விழித்து விடுதலை பெறும் காலையில், தியாகம் நிறைந்தும் தந்திரம் குறைந்தும் இருக்க வேண்டும் என்பது காந்தியின் உபதேசம். இதை நாயுடு அவர்கள், முற்றிலும் ஏற்பதில்லை; முற்றிலும் தள்ளிவிடுவதுமில்லை.

தன் வழி போவதில், நாயுடு அவர்களுக்கு எவரும் ஈடாக மாட்டார்கள். இந்த நெஞ்சழுத்தத்தைக் கொடுத்தது எது? அவருக்கு எளிதிலே விரைவிலே கிடைத்த வெற்றிதான் அது. மேலும், இதற்கு வேறு காரணமும் உண்டு. பண்டைக் காலத்தில், புலவர் பொறாமை என்பது பெயர்போன சங்கதியாகும். இந்தக் காலத்தில் தலைவர் பொறாமை தலை தூக்கி ஆடுவதைப் போல், வேறு எந்த அவலட்சணமும் என் கண்களில் பெரிதாகப் படவில்லை. நாயுடு அவர்களிடம் சிலருக்கு ஏற்பட்ட பொறாமையினாலே, நாயுடு அவர்கள் அநியாயமாய் அனாவசியமாய், தனிவழி கோலிக் கொண்டு, தத்தளித்து வருகின்றார்.

நமது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்குள் நாயுடு அவர்கள் வயதில் சிறியார். எனவே நாட்டுப்பணி சம்பந்தப்பட்ட வரையிலும், அவர் செய்ததுபோக, இன்னும் அதிகமாகச் செய்வதற்குத் தேவையான ஆயுள் அவருக்கு உண்டு, அடிமைத்தனத்தை வெகுண்டு, அதிகாரவர்க்கத்தினருக்குச் சிறிதும் அஞ்சாமல், விர், என்று அரசியல் உலகில் தோன்றிய நாயுடு அவர்களுக்குத் தமிழ்நாடு என்றைக்கும் கடமைப்பட்டிருக்கிறது. அடிமைகளுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் இடையே நின்று பஞ்சாயத்து வேலை பார்த்துவரும் நாயுடு அவர்கள், தமது இயற்கையான வல்லமையையும் வேலையையும் மறந்துபோனார் போலும்! விடுதலைக்காக, தமிழர்களைத் தட்டி யெழுப்பிய வீரன், தமது இயல்பை மறந்துவிடுவாரா? நாம்தான் அவசரப் படுகிறாமோ, என்னவோ?
கீர்த்தி வாய்ந்த தலைவர்களுக்கு, பொதுஜனங்கள் செல்லப் பெயர் கொடுப்பதுண்டு. இந்த செல்லப்பெயர்தான், பொது ஜனங்களுக்கு ஒரு தலைவரிடம் இருக்கும் அன்புக்கும் பக்திக்கும் அடையாளமாகும். ஆங்கில நாட்டில் ஜோசப் சேம்பர்லேன் என்ற அரிய தலைவரை, ஜனங்கள் ‘ஜோ’ என்று அருமையாக அழைப்பார்கள். ராம்ஸே மாக்டொனால்டை அவர்கள் ‘மாக்’ என்பார்கள். அதுபோலவே, நாயுடு அவர்களுக்கும் ஒரு செல்லப் பெயர். அவருக்கு ‘துப்பாக்கி நாயுடு’ என்று பெயர். நாயுடு அவர்கள் தமது ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டிப் பிரசங்கம் செய்யும் வழக்கமே, இந்தப் பட்டப் பெயருக்குக் காரணமாகும். பெரிய பெரிய கூட்டங்களினிடையே அவரது சிறிய ஆட்காட்டி விரல் அதிகாரம் செய்வதை, நேரில் கண்டவர்கள்தாம் அனுபவிக்க முடியும்.

நாயுடு அவர்கள் வாய்ச் சொல் ஒத்துழையாதாருமல்ல, வைதீக ஒத்துழையாதாருமல்ல; அவர் அனுபவ ஒத்துழையாதார். பர்டோலித் தீர்மானத்துக்குப் பின்னர், காந்தி சிறைசென்ற சமயத்தில் மகாத்மா விடுதலையாகும் வரையில் எவ்வித வரியும் சர்க்காருக்குக் கொடுப்பதில்லை என்று நாயுடு அவர்கள் தீர்மானம் செய்து கொண்டார். மோட்டார் கார் ஏலத்திலே போய்விட்டது. போதாத தொகைக்கு, வீட்டிலே ஜப்திக்கு வந்து வேண்டிய ரொக்கத்தைச் சர்க்கார் எடுத்துக் கொண்டு போனது சரித்திரமாகும்.

ஸ்ரீமான் நாயுடு அவர்கள், தமது மத்தியஸ்த நிலைமையை விட்டுவிட்டு, தமக்குப் பல ஆண்டுகளாகக் கிடைத்திருக்கும் அனுபவத்தையொட்டி, கட்சிப் பிரதிகட்சியில்லாமல், தமிழர்களில் பெரும்பாலாரை ஒன்றுபடுத்தி, தமிழர்களுக்கு விடுதலை வெறியைக் கொண்டுவர வேண்டும் என்பது எனது ஆசை. இதை அவருக்கு நினைவூட்ட வேண்டுமென்ற பொறுப்பு, அவரது ஆதிகால நண்பனான என்னைச் சேர்ந்தது.

பாகிஸ்தான் என்ற பிரச்சனை தோன்றுவதற்கு வெகு காலத்துக்கு முன்னமேயே, நாயுடு இந்திய முஸ்லிம்களின் தேசபக்தியில் நம்பிக்கையை இழந்துகொண்டே வந்தார். கோஹட் கலவரத்துக்குப் பின்னர். காந்தியும் அலி சகோதரர்களும் மனவேறுபாடு அடைய நேர்ந்தது. ‘‘காலிபாவுக்காகத்தான், முஸ்லிம்கள் கத்தியை எடுப்பார்களே அல்லாமல் தாய் நாடாகிய ஹிந்துஸ்தானத்தைக் காக்க முன்வர மாட்டார்கள் என்பதை இந்தக் காந்தி ஏற்கெனவே தெரிந்து கொண்டிருந்தாலென்ன?’’ என்று நாயுடு அவர்கள் ஆத்திரத்தோடு கேட்பார்.

ஜின்னாவும் பாகிஸ்தானும் வானத்தில் தோன்றிய பின்னர் ஜின்னாவுக்கு அமெரிக்கா பரிவு காண்பித்த பின்னர், ஹிந்துக்களை விட்டுப் பிரிந்து வாழ்தல்தான் முறை என்று முஸ்லிம் தலைவர்கள் பல்லவி பாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டு, நாயுடு சும்மா இருக்க முடியுமா?

நாயுடு அவர்கள் ஹிந்து மகாசபையைச் சேர்ந்தது ஆச்சரியமில்லை. அகண்ட ஹிந்துஸ்தானத்தில் அவருக்கு நம்பிக்கை இருப்பதிலும் ஆச்சரியமில்லை. முஸ்லிம்களோடு எவ்வித சமரசப் பேச்சும் கூடாது என்று அவர் சொல்வதிலும் அணுவளவும் ஆச்சரியப்படத் தேவை இல்லை. நாயுடு, அஹிம்சையை ஒப்புக் கொள்ளாததிலும் ஆச்சரியம் எதுவும் இல்லை.

நவீன மனிதனுடைய மனப்பான்மை நாயுடுவுக்குக் கிடையாது. தானும் சகோதர ஹிந்துக்களும் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் ஹிந்துஸ்தானத்தை ஆளுவதற்கு ஹிந்துக்களைத் தவிர, வேறு எவருக்கும் பாத்தியம் கிடையாது என்பது நாயுடுவின் பிடிவாதமான எண்ணம்.

இவர் நினைக்கும் முறையில், இந்தியா விடுதலை அடையப் போகிறதா, இல்லையா என்பதைப் பற்றி, யாரும் எதையும் திட்டமாகச் சொல்லமுடியாது. ஆனால் ஹிந்தக்கள், பிற்போக்காளர்களாக இருக்கும் முஸ்லிம்களிடம் ஆத்திரம் கொண்டு வருகிறார்கள் என்பதற்கு நாயுடு அவர்கள் ‘நடக்கும் அத்தாட்சியாகும்’. தனது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள, எதை வேண்டுமானாலும் இழக்க நாயுடு தயார்.

ஆணிவேர் உணர்ச்சியான சுயமரியாதை இல்லாத நபர்கள் உயர்ந்த தத்துவத்தைப் பேசினால், நாயுடு விழுந்து விழுந்து சிரிப்பார். முதுகு எலும்பு இல்லாத பேர்வழிகள் மூட்டையைச் சுமக்க எண்ணினால், அது பலிக்கக் கூடியதா? இதை நினைத்துத்தான், நகைச்சுவையுள்ள நாயுடு சிரிக்கிறார். இதிலும் எதுவும் ஆச்சரியமில்லை.
மதன்லால் திங்ரா என்ற பஞ்சாபி இளைஞன் எஞ்சினீயர் பரீட்சைக்காகப் படிப்பதற்கு, இங்கிலாந்துக்குச் சென்றிருந்தான். அவனுக்கு இந்தியாவின் அடிமை நிலை, கொஞ்சங்கூட இனிக்கவில்லை. இந்திய மந்திரியின் சபையில், இரகஸியமாய், அளவற்ற செல்வாக்குடன் விளங்கின ஸர் கர்ஸன் வைலி என்பவர் பெருத்த சூதுகாரர் என்று தீர்மானங்கொண்டு, மதன்லால் திங்ரா, அவரைச் சுட்டுக் கொன்றுவிட்டான். அவனை இங்கிலீஸ் போலீசார் லண்டன் நகரில் கைது செய்தார்கள்.

You may also like
6. ஜ்யார்ஜ் ஜோஸப் – TAMIL LEADERS – 6
தலைமுறைகளை பாதுகாத்த தலைமுறை இடைவெளி!
5. டாக்டர். டி.எஸ்.எஸ். ராஜன் – TAMIL LEADERS – 6
3. திரு.வி. கலியாண சுந்தர முதலியார் – TAMIL LEADERS – 4

Leave a Reply