Home > தொடர்கள் > ஈழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு – பகுதி – 2 The Rising History of the Eelam Liberation Struggle – 2

ஈழ விடுதலைப் போராட்டத்தின் எழுச்சிமிகு வரலாறு – பகுதி – 2 The Rising History of the Eelam Liberation Struggle – 2

இலங்கையின் வரலாறு எப்போது தொடங்குகிறது என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

அறிவியல் ரீதியாக அந்த நாடு உருவான விதம் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதைப்பற்றி அறிந்து கொள்வதற்கு முன்பு, மகாவம்சம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள கதையை கொஞ்சம் படியுங்கள்.

கிரேக்க புராணக்கதைகளிலும் இந்தியப் புராணக்கதைகளிலும் நாம் படித்த பல வேடிக்கையான காட்சிகள் மகாவம்சத்திலும் இடம்பெற்றுள்ளன.

இலங்கையின் வரலாறு, நாடு கடத்தப்பட்ட விஜயன் என்ற கலிங்க இளவரசனும் அவனுடைய ஆதரவாளர்கள் 700 பேரும் இலங்கையில் தரையிறங்கியதில் இருந்து தொடங்குவதாக மகாவம்சம் கூறுகிறது.

இந்த விஜயன் யார்? என்கிற கேள்விக்கு கிடைக்கிற பதில் மிகவும் அருவருப்பானது.

இந்தியாவின் வடமேற்கில் உள்ள வங்க மன்னர் ஒருவரின் மகள் சுபதேவி. இவளை வனராஜா சிங்கம் கடத்திச் சென்று தனது குகையில் அடைத்துவிட்டதாம். பிறகு அவளுடன் குடும்பம் நடத்தியதாம். இதன் விளைவாக சுபதேவிக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தனராம்.

சிங்கம் புணர்ந்து உருவான சிங்கள இனம்

ஆண் குழந்தைக்கு சின்ஹபாஹு எனவும், பெண் குழந்தைக்கு சின்ஹவலி எனவும் பெயரிடப்பட்டது.

சுபதேவியும் அவளது குழந்தைகளும் குகையை விட்டு வெளியில் சென்றுவிடாமல், குகை வாசலை ஒரு பெரிய பாறையால் அடைத்து வைத்து இருந்ததாம் சிங்கராஜா.

சின்ஹபாஹுக்கு கால்களும், கைகளும் சிங்கத்தைப் போலவே இருந்தனவாம். இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் சுபதேவியும் அவளுடைய இரு குழந்தைகளும் குகையிலிருந்து தப்பிவிட்டனராம்.

குகையிலிருந்து தப்பிய பிறகு, சின்ஹபாஹு தன்னிடமிருந்த அம்பைக் கொண்டு சிங்கத்தை கொன்றுவிட்டானாம்.

அதன்பிறகு, தனது சகோதரி சின்ஹவலியை திருமணம் செய்து கொண்டான். தொடர்ந்து சின்ஹபுரம் என்ற சிறுநகரத்தை மையமாகக் கொண்டு ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்தினான்.

சின்ஹவலிக்கு அடுத்தடுத்து இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. மூத்த குழந்தைக்கு விஜயன் என்று பெயரிடப்பட்டது. இளைய சகோதரனுக்கு சுமித்தா என்று பெயரிட்டு இருந்தனர்.

விஜயன் தொடக்கத்திலிருந்தே தீய குணங்களுடன் வளர்ந்தான். அவனுடைய ஆதரவாளர்களும் அவனைப் போலவே இருந்தனர். இவர்கள் நடத்திய வன்செயல் களுக்கும், கொடுமைகளுக்கும் அளவில்லாமல் போனது. சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட விஜயனுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டுமென்று மன்னர் சின்ஹபாஹுவை மக்கள் வற்புறுத்தினர். ஆனால், வயதாகிவிட்டதால் விஜயனையும் அவனுடைய ஆதரவாளர்களையும் தண்டிக்க முடியாமல் தவித்தார் மன்னர்.

கடைசியில் வேறு வழியில்லாமல், விஜயனையும், அவனுடைய ஆதரவாளர்களையும், அவனுடைய மனைவி குழந்தைகளையும் நாடுகடத்த உத்தரவிட்டார்.

அவர்கள் அனைவரும் தம்பபன்னி என்று அழைக்கப்பட்ட பிரதேசத்தில் வந்து தரையிறங்கினர். தம்பபன்னி என்பது இலங்கையின் இன்னொரு பெயராக கருதப்படுகிறது.

இந்தக் கதையின் நிஜத்தன்மை குறித்து வேறுபட்ட விவாதங்கள் தொடர்கின்றன. வங்க அரசருக்கும் கலிங்க ராணிக்கும் பிறந்த சுபதேவியை சின்ஹா என்ற எதிரி கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கூற்று நிலவுகிறது.

வங்கம் என்பது இன்றைய வங்கதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலம் ஆகியவற்றை குறிக்கும். கலிங்கம் என்பது இன்றைய ஒரிஸா மாநிலத்தைக் குறிக்கும். ஆக, இன்றைய சிங்கள இனத்தின் மூலவேர் இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்குப்பகுதியை மையமாகக் கொண்டது என்பது தெளிவாகிறது.

இலங்கை வந்தடைந்த விஜயன் தனது ஆதரவாளர்களுடன் ஒரு ராஜ்யத்தை அமைத்தான். அவன் இலங்கையை அடைந்த அதே சமயத்தில்தான் புத்தர் மரணமடைந்தார். அப்போது, விஷ்ணு விஜயன் முன் தோன்றி விஜயனையும், அவனுடைய வாரிசுகளையும் பாதுகாக்க புத்தர் தன்னை அனுப்பியதாக கூறினாராம்.

விஜயன் தனது ஆதரவாளர்களுடன் வந்து இறங்கியபோது, அங்கு யக்ஷர்கள், நாகர்கள் என இரு பிரிவினர் வாழ்ந்தனர். இவர்கள் இந்தியாவின் தென் பகுதியில் இருந்து இலங்கையில் குடியேறியவர்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கு சாத்தியம் இருக்கிறது. அந்தக் காலகட்டத்தில் கடல் பனிக் கட்டியாக உறைந்து கிடந்தது.

விஜயன் வந்து இறங்கிய சிறிது நேரத்தில் குவேனி என்ற யக்ஷர்களின் இளவரசி விஜயனை கடத்திச் செல்ல முயன்றாள். விஷ்ணு பாதுகாப்பில் இருந்த விஜயனை குவேனி கடத்திச் செல்லமுடியவில்லை. ஆனால், அவனையும் அவனுடைய ஆதரவாளர்களையும் தனது பிடியில் வைத்திருந்தாள்.

தனது ஆதரவாளர்களை விடுவிக்காவிட்டால் இறந்து விடுவதாக விஜயன் மிரட்டல் விடுத்தான். இதையடுத்து, அவனுடைய ஆதரவாளர்களுக்கு உணவும், உடையும் வழங்க குவேனி உத்தரவிட்டாள்.

குவேனியிடம் மயங்கினான் விஜயன்

இது முடிந்தவுடன், விஜயனுடன் குவேனி வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டாள். அதை தொடர்ந்து இலங்கை தனது இனத்தவரை ஜெயிக்க விஜயனுக்கு உதவினாள். இலங்கை மண்ணுக்கு மன்னராக அவனை நியமித்து பிரகடனம் செய்தாள். இலங்கையின் ராஜாவாக நியமிக்கப்பட்ட அவன் அங்கிருந்து யக்ஷர்களை விரட்டியடித்தான். இந்த சண்டையின் போது குவேனி அவனுக்கு அருகிலேயே இருந்தாள்.

குவேனிக்கு ஆண் குழந்தை ஒன்றும், பெண் குழந்தை ஒன்றும் பிறந்தன. குவேனியை தனது மனைவியாக ஏற்கமறுத்தான் விஜயன். Ôஎங்காவது போய்விடு, குழந்தைகளை என்னிடம் விட்டுவிடுÕ என்று விஜயன் அச்சுறுத்தினான்.

“என்னை அனுப்பாதீர்கள்” என்று கெஞ்சினாள் குவேனி.

ஆனால், விஜயன் பிடிவாதமாக இருந்தான்.

குழந்தைகளை விட்டுச்செல்லவேண்டும் என்ற விஜயனின் பேச்சை மீறி இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு யக்ஷ நகரம் ஒன்றுக்கு சென்றாள். ஆனால், அங்கு அவளுடைய சொந்த மக்களால் கொல்லப்பட்டாள்.

விஜயனும் அவனுடைய ஆதரவாளர்களும் இலங்கையை ஆட்சி செய்யத் தொடங்கினர். பெண் துணை இல்லாமல் ஆட்சி நடத்தும் தங்களுடைய மன்னருக்கு, அவனுடைய அமைச்சர்கள் பெண் தேடும் படலத்தை தொடங்கினர்.

தென் மதுரைக்கு வந்தனர். ஆதியில் இந்த தென் மதுரை கிழக்கு கடற்கரை ஓரத்தில் கொற்கை துறைமுகம் அருகில் அமைந்து இருந்ததாக கூறப்படுகிறது. முதல்சங்கம் இங்குதான் நடைபெற்றதாக இலக்கியங்கள் கூறுகின்றனர். இன்று உள்ள மதுரை கடைச் சங்ககால மதுரை ஆகும். தென் மதுரையை பாண்டு என்ற மன்னர் ஆட்சிசெய்து வந்தார். அவருடைய மகளை விஜயனுக்கு பெண் கேட்டு அமைச்சர்கள் சென்றனர்.

பெண் கேட்டுச் சென்ற அமைச்சர்களிடம் தனது மகளை விஜயனுக்கு மணமுடிக்க சம்மதித்தார் பாண்டு. அதேசமயம், அமைச்சர்களின் மனைவியரை பிரித்து, அவர்களுக்கு பதிலாக மதுரை நகரின் பெண்களை அமைச்சர்களுக்கு மணமுடித்து வைத்தார்.

அமைச்சர்களின் மனைவியரை இன்றைய மாலத்தீவுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

பாண்டுவின் மகள் விஜயனுக்கு மனைவியானாள். இதை ஒரு திருவிழாவாக கொண்டாடினார்கள். விஜயனுக்கு வயதாகிவிட்டது. திருமணமும் ஆகிவிட்டது. எனவே, அவனுடைய போக்கில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டன. அடுத்த 38 ஆண்டுகள் அமைதியான முறையில் ஆட்சி நடத்தினான் என்று மகாவம்சம் கதை சொல்கிறது.

விஜயன் இறந்தவுடன் அவனுடைய வாரிசாக யார் வருவது என்ற குழப்பம் நிலவியது. அவனுடைய அமைச்சர்களே ஆட்சி பொறுப்பை ஏற்க போட்டிபோட்டனர். ஆனால், கலிங்க தலைநகர் சின்ஹபுரத்திலிருந்தே தனது இளைய சகோதரன் சுமித்தாவை இலங்கை வரும்படி அழைப்பு விடுத்தான் விஜயன். ஆனால், சுமித்தா வரவில்லை. அவனுடைய மகன் பாண்டுவஷ்தேவா இலங்கை வந்தான். விஜயனின் அரசாங்கத்தை அவன் ஏற்றுக்கொண்டான். விஜயனின் நேரடி வம்ச ஆட்சி அப்போதிருந்து தொடங்கியது.

இலங்கையின் நவீன கப்பல் படையில் நீண்டகாலமாக விஜயன் என்ற ஒரே ஒரு போர்க் கப்பல்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயன் தரையிறங்கிய நாளில் இருந்துதான் இலங்கை வரலாறு தொடங்குவதாக மகாவம்சம் கூறுவதில் ஓரளவு உண்மை இருந்தாலும் அதுவே முழு உண்மை அல்ல.

பிறகு எதுதான் உண்மை?

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் நிலப்பகுதி இரண்டு மாபெரும் கண்டங்களாக பிரிந்து கிடந்தது. வடக்கே யுரேசியா என்றும், தெற்கில் கோண்டுவானா என்றும் இரண்டு கண்டங்கள் இருந்தன. அவை ஒரு காலகட்டத்தில் பிளவுபட்டு நகரத் தொடங்கின.

நமது பூமி 20க்கும் மேற்பட்ட நிலத்தட்டுகளால் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு கால்பந்தைப் போல அது ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துள்ளது. தெற்கில் இருந்த கோண்டுவானா கண்டத்தின் நிலத்தட்டுகள் வடக்கு நோக்கி நகரத் தொடங்கின. இந்திய நிலத்தட்டு, ஆஸ்திரேலிய நிலத்தட்டு, ஆப்பிரிக்க நிலத்தட்டு, தென்அமெரிக்க நிலத்தட்டு ஆகியவை இவ்வாறு மெதுமெதுவாக நகரத்தொடங்கின.

இந்திய நிலத்தட்டுடன் இந்தியா, இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவு, மடகாஸ்கர் தீவு ஆகிய நிலப்பகுதிகள் இருந்தன.

இது அறிவியல்.

இந்திய நிலத்தட்டு யுரேசிய நிலத்தட்டுடன் மோதியதில் உருவானதுதான் இமயமலை.

இலங்கைத் தீவு இந்தியாவிலிருந்து ஒரு நீரிணையால் பிரிக்கப்பட்டது. இந்தியக் கடற்கரையிலிருந்து நீந்திக்கடக்கும் இடைவெளியில் அந்த நீரிணை அமைந்திருந்தது. எனவே, இந்தியாவிலிருந்து குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து மக்கள் குடியேற ஏராளமான வாய்ப்புகள் இருந்தன.

இலங்கையில் 34 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேட்டையாடி வாழும் மனிதர்கள் வசித்தனர். இதற்கு, தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இந்த மனிதர்கள் குகைகளில் கூட்டமாக வசித்தனர்.

பலங்கோடா என்ற இடத்தில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த மக்களை பலங்கோடா மக்கள் என்றே தொல்லியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இவர்கள்தான், ஹார்ட்டன் சமவெளி உருவாகக் காரணமானவர்கள்.

விலங்குகளை வேட்டையாடும் முயற்சியில் காடுகளுக்கு இவர்கள் தீ வைத்தனர். அதையடுத்து, இந்தச் சமவெளி உருவானது. ஓட்ஸ், பார்லி ஆகியவற்றை இவர்கள் அந்தச் சமவெளியில் பயிரிட்டனர். கி.மு. 15ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் விவசாயம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

தொல்லியல் சான்றுகள்

இலங்கையில் உள்ள வாரண ராஜ மகா விஹார மற்றும் கலட்டுவாவ பிரதேசங்களில் தொடர்ந்து நடைபெறும் தொல்லியல் ஆய்வுகளில் இவற்றிற்கான ஆதாரங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன.

லவங்கப்பட்டை இலங்கையில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒன்று. இது கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் உபயோகத்தில் இருந்துள்ளது. எனவே, இந்தத் தீவுடன் எகிப்துக்கு வணிகத் தொடர்பு இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அனுராதபுரத்தில் கி.மு. 900 ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய குடியிருப்பு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதுதவிர, இரும்புக்கால கலாச்சாரத்திற்கான அறிகுறிகளும் காணக்கிடைத்துள்ளன.

புராதன சான்றுகள்

அனுராதபுரத்திற்கு அருகில் இருந்த குடியிருப்பு அந்தக் காலகட்டத்தில் சுமார் 15 ஹெக்டேர் பரப்பளவு இருக்கலாம். ஆனால், அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் அது 50 ஹெக்டேர் அளவுள்ள நகரமாக விரிவடைந்தது. இதேபோன்ற குடியிருப்பு பகுதியை சிஜிரியாவில் உள்ள அலிகாலாவிலும் தொல்லியல் நிபுணர்களும் கண்டுபிடித்துள்ளனர்.

வேட்டையாடி பிழைக்கும் வேடர் கூட்டத்தைச் சேர்ந்த பலங்கோடா மனிதர்களின் வம்சாவளியினர் இன்னமும் கூட இலங்கையில் மத்தியப் பகுதி, உவா, வடக்கிழக்கு பகுதிகளில் வசிக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

வெளியுலக மனிதர்கள் இலங்கையை ஆக்கிரமிக்க தொடங்கியபிறகு இவர்கள் மெதுமெதுவாக நகர்ந்து உள் பகுதிகளுக்கு சென்றிருக்கலாம்.

தீபவம்சம், மகாவம்சம் ஆகிய நூல்களில்கூட விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்பு, அங்கு பூதவழிபாடு நடத்திய யக்ஷர்கள், நாகவழிபாடு நடத்திய நாகர்கள், கடவுள் வழிபாடு நடத்திய தேவர்கள் வசித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.மு.600 ஆண்டுகளுக்கு முன்பு பிரமி, பிரமியல்லாத எழுத்துக்கள் அடங்கிய மண்பாண்டங்கள், அனுராதபுரத்தில் கிடைத்துள்ளன. இலங்கையில் எழுத்து வடிவம் இருந்ததற்கு இதுவே மிகப்பழமையான ஆதாரமாக இருக்கிறது.

இலங்கையில் இன்று வாழும் சிங்களர்கள், தமிழர்களிலும் சிறு பகுதியினர் இலங்கையின் பூர்வீக குடிகளோடும் வேறுபகுதிகளிலிருந்து வந்து குடியேறிய குழுக்களோடும் கலந்து வாழ்ந்தனர்.

விஜயன் ஆரிய வம்சத்தை சேர்ந்தவன் என்பதால் சிங்கள மக்கள் அவனை அங்கீகரிக்கின்றனர். புத்த மதத்தை அவன் பரப்ப உதவினான் என்பதும் சிங்களர்கள் மத்தியில் அவனுக்கு மரியாதையை ஏற்படுத்தி தந்தன.

அதேசமயம், விஜயனின் மனைவியர் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்கள் கருத்தில் கொள்வதே இல்லை.

இலங்கையில் வாழும் தமிழர்கள் தென்னிந்தியாவில் சோழர்கள், பாண்டியர்கள் காலத்தில் இலங்கைக்குச் சென்றவர்கள் என்று கூறப்படுவதுண்டு.

இலங்கையில் பூர்வீகமாக வசித்த நாகர்களின் நேரடி வாரிசுகள்தான் தமிழர்கள் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

தமிழர்கள் பெரும்பாலும் இந்துக்களாகவோ அல்லது கத்தோலிக்கர்களாகவோ இருந்தனர். இலங்கையில் கி.மு.2ஆம் நூற்றாண்டில் சேனன், குட்டகன் என்ற இரு மன்னர்கள் தமிழர்களின் முதல் முடியாட்சியை தொடங்கி வைத்தனர்.

தமிழர்களும், சிங்களர்களும் ஒருவருக்கொருவர் இணைந்து வாழ்ந்தனர். ஆனால், 12ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் வசித்த நகரங்களின் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றியபோதுதான் சிங்களமயம், தமிழ்மயம் என்ற பிரிவினை மேலோங்கத் தொடங்கியது.

புத்தர் பேசிய பாலி மொழியின் சிதைந்த வடிவம்தான் சிங்களம். சமஸ்கிருதமும் இதில் கலந்திருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இலங்கையின் பெயர்க்காரணம் இதை தெளிவுபடுத்தும். விஜயன் வந்தபோது தம்பபன்னி என்று இது அழைக்கப்பட்டது. இராமாயணத்தில் லங்கா என்று குறிப்பிடப்படுகிறது. தமிழில் இதை இலங்கை என்று குறிப்பிட்டார்கள். இராவணன் தமிழன் என்றும், அவன் ஆண்ட மண் இலங்கை என்றும் கூறப்பட்டது. இலங்கை என்றால் ஜோதிமயம் என்று பொருள். இலங்கை என்ற பெயரே அந்த மண்ணின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஆனால், 1972ல் சமஸ்கிருத கலப்புடன் ஸ்ரீலங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதுவரை, ஆங்கிலத்தில் சிலோன் என்றே இலங்கை அழைக்கப்பட்டது.

தமிழ் இலக்கியங்களில் ஈழம் என்று குறிப்பிடப்பட்டது. ஈழம் என்றால் சொர்க்கதேசம் என்றும் தங்கம் என்றும் பொருள்படுகிறது.

சமஸ்கிருதம் கலந்த சிங்கள மொழியின் மேலாதிக்கத்தை நிறுவுவதற்காகவே, ஸ்ரீலங்கா என்று பெயர் மாற்றம் செய்யபட்டதாக, அந்த சமயத்தில் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. அப்போதிருந்துதான் இலங்கையில் தமிழ் இனத்தவரை இராண்டாந்தர குடிமக்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் வேகவேகமாக நடைபெற்றன.

Leave a Reply