Home > கட்டுரைகள் > இருட்டறையில் உள்ளதடா உலகம்

இருட்டறையில் உள்ளதடா உலகம்

அண்மையில் அரியலூரைச் சேர்ந்த 17 வயது தலித்  சிறுமி கொடூரமாக கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி பெரும்பாலும் எந்த ஊடகத்தாலும் கவனம் பெறாமல் இருக்கிறது. இந்த கொலையை செய்தவர் இந்து முன்னணியின் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.  ஆதிக்க ஜாதி பெண்ணை திருமணம் செய்தால் தலித் ஆண் கொடூரமாக கொல்லப்படுவதும், தலித் பெண்ணை ஆதிக்க ஜாதி ஆண் திருமணம் செய்து கொள்கிறேன் எனக்  கூறி ஏமாற்றி கொலை செய்வதும் தொடர் நிகழ்வுகளாகவே இருக்கின்றன. இதற்கு முன் கண்ணகி – முருகேசன், இளவரசன், கோகுல்ராஜ் என கொலைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. 

இந்த நிகழ்வுகளுக்கு மூல கரணம் ஜாதி என்னும் காரணி . மனுவில் கீழ்ஜாதிப் பெண்ணை உயர் ஜாதி ஆண் மணக்கலாம், ஆனால் உயர் ஜாதிப் பெண்ணை கீழ் ஜாதி ஆண் மணக்கக் கூடாது. அதற்கு கடும் தண்டனை என்று எழுதி வைத்து அதை ஆண்டாண்டு காலங்களாக பின்பற்றி வருவதே இதற்கு முக்கிய காரணம். மேலும் இந்த உயர் ஜாதிக்காரர்கள் அடுத்தடுத்த தாழ்ந்த ஜாதிப் பெண்ணை திருமணம் செய்துகொள்ளலாம்; ஆனாலும் அந்தந்த ஜாதிக்குள் திருமணம் செய்த பெண்கள் தான் தர்மபத்தினி; மற்றவர்களெல்லாம் அதர்மபத்தினி என்று எழுதியும் வைத்துள்ளனர்.

இந்த மனுவை பின்பற்றி தான் இங்கே ஆதிக்க ஜாதிகள் வெறியாட்டம் போடுகின்றனர். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தான் மிகத் தெளிவாக கூறுவார்கள் இங்கே ஜாதி என்பது ஏணிப்படிகள் போல் உள்ளது(Graded Inequality) . அதனால் தான் தன்னை மேல் இருந்து ஆதிக்கம் செலுத்துபவனைப் பற்றி கவலை கொள்ளாது தான் நசுக்க கீழே ஒரு ஜாதி இருக்கின்றதே என்ற எண்ணம் ஏற்படுகின்றது. இந்த மனநிலை கொண்டோன் மனநோய் கொண்டோன் எனத்  தெளிவாக குறிப்பிடுகின்றார். 

இங்கே மிக நுட்பமாக பார்ப்பனர்கள் caste engineering செய்து கொண்டிருக்கின்றார்கள். அதை உடைத்து விடுவது ஜாதிய போதை கொண்ட சமூகத்தால் இன்றும் முடியாத ஒன்றாகவே இருக்கின்றது. அதாவது சூத்திரர்கள், பஞ்சமர்கள், பழங்குடியினர், பெண்கள் இந்த நான்கு மக்கள் தான் பார்ப்பனீயத்தால் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இந்த நான்கு கூட்டத்தையும் பிரித்தாள்வது என்பது தான்  caste engineering . இதை முறியடிக்க அம்பேத்கர் கூறியது தான் social engineering . அதாவது பிரத்தாளப்படும் இந்த நான்கு பிரிவுகளும்  ஒன்றிணைவது. பிரச்சனை என்னவென்றால் இதனை உணர்ந்து கொள்ளாத சூத்திர மக்கள் பார்ப்பனியத்தின் ஜாதியை காப்பாற்றுவதில் அவர்களின்  காலாட்படையாகவே செயல்படுகின்றனர். தங்களுக்கு கீழ் என நினைக்கும் ஆதிதிராவிடர் சமூகத்தை கொடுமையான முறையில் தாக்குகின்றனர் . 
குடி அரசு – துணைத் தலையங்கம் – 08.11.1931 இல் தந்தை பெரியார் இப்படி எழுதுகின்றார். 

“இந்தியர்களின் அடிமைத் தன்மைக்கும் இழி நிலைக்கும் மதமும், ஜாதியும், வகுப்பும் அவை சம்பந்தமான மூடநம்பிக்கை எண்ணங்களும், வெறிகளும், சடங்குகளும் இவற்றிற்காக ஒருவரை ஒருவர் அவநம்பிக்கை கொண்டு அடக்கி ஆள நினைப்பதுமே முக்கியமான காரணங்களாகும் என்பதாக நாம் பல தடவை சொல்லி வந்திருக்கின்றோம். பலமாக அனேக உதாரணங்களுடன் எழுதியும் வந்திருக்கின்றோம்.


மதங்களின் பேரால் பல முக்கிய மதங்களும், அநேக கிளை மதங் களும் உட்பிரிவு மதங்களும் ஏற்பட்டு, மக்களை பெரும் பெரும் பிரிவு களாகப் பிரித்துவிட்டதென்றாலும் வருணாச்சிரமத்தையும், ஜாதிப்பிரிவு களையும், பலவகுப்புப் பிரிவுகளையும் கொண்டதான இந்துமதமானது எல்லா மதங்களையும் விட மக்கள் சமூகத்திற்கு பெரிய இடையூறாய் இருந்து கொண்டு மக்களின் ஒற்றுமையையும், தன்னம்பிக்கையையும் அடியோடு பாழாக்கி வருவதுடன் இதன் காரணமாய் மக்கள் வலி இழந்து, சுயமரியாதை இழந்து, சுதந்திரமற்று நடைப்பிணங்களாகவும் பகுத்தறிவற்ற மிருகத் தன்மையிலும் கேவலமாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.”
ஆனால் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் ஜாதி என்பது மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாகவே இருக்கின்றது என்பது தான் வேதனைக்குரிய ஒன்றாக இருக்கின்றது. பண்பாடு , பாரம்பரியம் என்று கவலைப்படும் மக்கள் அனைவரும் காப்பற்ற நினைப்பது ஜாதி என்னும் காரணியை மட்டும் தான். ஏனெனில் இங்கே பண்பாடு என்பதே ஜாதியத்தின் மீது தான் கட்டப்பட்டிருக்கின்றது.

மக்களவையில் அண்ணல் அம்பேத்கர் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை நாம் கவனத்தில் கொள்வது மிக அவசியம். நாம் ஒற்றை தேசம் என்று இந்தியாவை கட்டநினைப்பது எவ்வளவு பெரிய முரண் என்பதை அண்ணல் தெளிவாக விளக்குகின்றார். 

“..அரசியல் எண்ணமுள்ள இந்தியர்கள், முன்பு இந்திய மக்கள்’ என்று சொல்வதை எதிர்த்தது எனக்கு நினைவிருக்கிறது. இந்திய தேசம்’ என்று சொல்வதையே அவர்கள் விரும்பினர். நாம் ஒரு தேசம் என்று நம்புவதே ஒரு மிகப் பெரிய மாயை என்றே நான் கருதுகிறேன். ஆயிரக்கணக்கான சாதிகளாகப் பிளவுண்டிருக்கும் மக்கள், எப்படி ஒரு தேசமாக முடியும்? சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக நாம் இன்னும் ஒரு தேசமாக ஆகவில்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ, அந்தளவுக்கு நல்லது. அப்போதுதான், நாம் ஒரு தேசமாக வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அதை அடைவதற்கான வழிமுறையைப் பற்றி கவனமாக சிந்திப்போம். ஆனால், இத்தகைய உணர்வு நிலைக்கு வருவது மிகவும் கடினம். அமெரிக்காவில் வந்தது போன்ற நிலைக்கு வருவது கடினம். மேலும், அமெரிக்காவில் சாதிப் பிரச்சனை இல்லை. இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. இந்த சாதிகள் தேசத்திற்கு எதிரானவை. முதலில் சாதி, சமூக வாழ்க்கை முறையில் பிளவை ஏற்படுத்துகிறது. சாதி தேசத்திற்கு எதிரானது மட்டுமல்ல; சாதிகளுக்கிடையேயும் அது பொறாமையையும் எதிர்வினையையும் உருவாக்குகிறது. நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இத்தகைய இடர்ப் பாடுகளை எல்லாம் கடக்க வேண்டும். ஒரு தேசம் உருவாகும் போதுதான் சகோதரத்துவம் உண்மையாகும். சகோதரத்துவம் இல்லாமல், சமத்துவமும் சுதந்திரமும் வண்ணப் பூச்சு போல ஆழமற்றதாகவே இருக்கும். ”   _( 25.11.1949 அன்று, மக்களவையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

“இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்றதது என்பானும் இருக்கின்றானே?”

என்பார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். ஜாதி என்னும் கொடிய விடம் இந்தச்  சமூகத்தில் இருக்கின்ற வரை, இந்த புரட்சியும் , வளர்ச்சியும் சாத்தியப்படாது .

Leave a Reply