Home > செய்திகள் > இந்தோனேசியாவைச் சென்றடைந்த சீனாவின் கொரோனா தடுப்பூசிகள்!!

இந்தோனேசியாவைச் சென்றடைந்த சீனாவின் கொரோனா தடுப்பூசிகள்!!

சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 1.2 மில்லியன் அளவிலான கொரோனா தடுப்பு மருந்துகள் இந்தோனேசியாவைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களைக் காப்பதற்காக தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா – சீனா போன்ற நாடுகள் தங்களது சொந்த தயாரிப்பு தடுப்பு மருந்துகளை மக்களுக்கு செலுத்தத் தொடங்கியுள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வல்லரசு நாடுகளிலும் எதிர்வரும் வாரங்களில் தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படும் என்கின்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், சீனத் தயாரிப்பு கொரோனா தடுப்பு மருந்துகளின் ஒரு தொகுதி இந்தோனேசியாவைச் சென்றடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

சீனாவின் சினோவக் நிறுவனத்தின் 1.2 மில்லியன் தடுப்பூசிகளே இந்தோனேசியாவைச் சென்றடைந்துள்ளன. மேலும் 1.8 மில்லியன் மருந்துகள் அடுத்த மாதம் அங்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்று மட்டும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில், கடும் கட்டுப்பாடுகளுக்கு மில்லியன் கணக்கான மக்கள் தயாராகியுள்ளார்கள்.

இதேவேளை, பிரித்தானியாவில் முதல் பைசர்/பயோடெக் கொவிட்19 தடுப்புமருந்து நாளை வழங்கப்படலாம் எனத் தெரிகின்றது.

முதற்கட்டமாக 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன் கள சுகாதாரப் பணியாளர்களுக்கும் அது வழங்கப்படவுள்ளதாக தேசிய சுகாதார சேவைகள் அமையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply