Home > செய்திகள் > ஒரு மணி நேரத்தில் இத்தனை வகை உணவா..? 9 வயது சிறுமியின் சாதனை

ஒரு மணி நேரத்தில் இத்தனை வகை உணவா..? 9 வயது சிறுமியின் சாதனை

சென்னை- வண்ணாரப்பேட்டையில், உலக சாதனை முயற்சியாக, ஒரு மணி நேரத்தில், 46 வகையான உணவு வகைகளை தயாரித்து, ஒன்பது வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் லஷ்மி சாய் ஸ்ரீ, 9; ஐந்தாம் வகுப்பு மாணவி.இவர், நேற்று முன்தினம், தண்டையார்பேட்டை, தனியார் திருமண மண்டபத்தில், ஒரு மணி நேரத்தில், 46 வகையான உணவுகளை தயாரிக்கும், சாதனை முயற்சி மேற்கொண்டார்.

அதன்படி, பழ வகைகள், சைவம், அசைவம் என, 46 வகையான உணவு வகைகளை சமைத்து அசத்தினார். சாதனையை பாராட்டி, ‘யுனிகோ’ எனும், உலக சாதனை நிறுவனம், சான்றிதழ் வழங்கி கவுரவித்தது.

இதற்கு முன், ஒரு மணி நேரத்தில், 33 வகை உணவு வகைகள் தயாரித்ததே, உலக சாதனை நிகழ்வாக இருந்தது.

இது குறித்து, சிறுமியின் தாய் கலைமகள் கூறியதாவது:கொரோனா ஊரடங்கில், வீட்டில் இருந்தபோது, மகளுக்கு உணவு தயாரிப்பது குறித்து, கற்றுக் கொடுத்து வந்தேன்.

நாளொன்றுக்கு, ஐந்து முதல் ஆறு வகையான உணவுகள் தயாரிக்க செய்து, தொடர்ந்து, இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த, 46 வகையான உணவுகளிலும், கம்பு, ராகி உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள், அதிகளவில் பங்கு பெறுவதில் கவனம் செலுத்தப்பட்டது.

ஒரு மணி நேரத்தில், 46 வகையான உணவுகளை தயாரித்து, சாய்ஸ்ரீ சாதனை புரிந்துள்ளது பெருமையாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

கொரோனா ஊரடங்கு, பல திறமையாளர்களை வார்த்தெடுத்தது. அந்த வரிசையில், ஒன்பது வயது சிறுமி, ஒரு மணி நேரத்தில், 46 வகையான உணவுகளை தயாரிக்க கற்று, அதில் சாதனை படைத்தது, அனைவரிடமும் பாராட்டை பெற்றது.

Leave a Reply