சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும அவரின் உறவினர்களின் தண்டனை காலம் முடிவடைய இருக்கிறது.
இந்த நிலையில் மூவரும் எப்போது விடுதலையாவார்கள் என்பது பேசு பொருளாகியிருக்கிறது.
சசிகலா ஜனவரி 27-ம் தேதி விடுவிக்கப்படுவார் என கர்நாடக சிறைத்துறை தெரிவித்திருந்தது. முன்கூட்டியே விடுதலைக்கான சசிகலாவின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.
தற்போது சசிகலாவின் உறவினர் சுதாகரன் இன்னும் சில தினங்களில் விடுதலை ஆகப்போகிறார் என்று செய்திகள் வெளியாக தொடங்கியிருக்கிறது.
சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் போதே சிறையில் இருந்துள்ளதால அந்த நாட்களை காரணம் காட்டி தன்னை முன்கூட்டியே விடுவிக்குமாறு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சுதாகரன் மனுதாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இதனால் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் சுதாகரன் விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.