கொரோனா தடுப்பூசியை வாங்கும் முயற்சிக்கு அமெரிக்கா தடையாக இருப்பதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது. அப்போது தொடங்கி இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது.
அதனை தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது.
இதனிடையே உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் ஈரானிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் கொரோனா தடுப்பு ஊசியை பெறுவதற்கான தங்களின் முயற்சிக்கு பெரும் தடையாக இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஈரான் மத்திய வங்கியின் கவர்னர் அப்தோல்நேசர் ஹேமதி கூறுகையில்,
‘உலக சுகாதார நிறுவனத்தின் மூலம் கொரோனா தடுப்பூசியை பெறும் எங்கள் முயற்சிகளை அமெரிக்கா தடுக்கிறது.
அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக எழும் பணப்பரிமாற்ற பிரச்சினைகளால் தடுப்பூசி வாங்கும் எங்கள் முயற்சிகள் தடைப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக ஈரானுக்கு மனிதாபிமான கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.