Home > செய்திகள் > தமிழ் முழக்கம் சாகுல்அமீது இறுதி சடங்கில் கதறிய சீமான்

தமிழ் முழக்கம் சாகுல்அமீது இறுதி சடங்கில் கதறிய சீமான்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ் தேசிய அரசியலில் கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வந்தவருமான தமிழ் முழக்கம் சாகுல் அமீது கொரானா தொற்று காரணமாக செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி., நாம் தமிழர் கட்சியினருக்கு மட்டுமன்றி கட்சி பேதமின்றி தமிழ் தேசிய அரசியல் தளத்தில் இயங்கிவரும் பல்வேறு தரப்பினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போதைய மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சாகுல் அமீது தனது உழைப்பால் சிறந்த தொழிலதிபராக விளங்கியவர். தான் தொழிலில் ஈட்டிய பணத்தை எல்லாம் தமிழ் தேசிய அரசியலுக்கு தயங்காமல் செலவிட்டவர்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஊடகங்களை சந்தித்தார். அந்த செய்தியாளர் சந்திப்பு குறித்த புத்தகத்தின் திறனாய்வுக் கூட்டத்தை சென்னை ஆனந்த் தியேட்டர் வளாகத்தில் தனது தமிழ் முழக்கம் இயக்கம் சார்பாக நடத்தினார் சாகுல் ஹமீது. அதுவரை தமிழ் முழக்கம் சாகுல் அமீது என அறியப்பட்டவர் அதன் பின் பொடா சாகுல் அமீது ஆனார்.

ஜெயலலிதா ஆட்சியில் அந்தப் புத்தகத் திறனாய்வுக் கூட்டத்துக்காக பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சாகுல் அமீது 17 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த காலகட்டத்தில் அவரது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டபோதும், சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் தன் தொழிலையும் தமிழ் தேசிய அரசியலையும் கட்டியெழுப்பினார். பழ.நெடுமாறனின் ஈழப்பயணம் குறித்த ‘மண் சிவந்தால்’ புத்தகத்தை விநியோகிப்பதற்காக பொறுப்பேற்று தன் தமிழ் முழக்கம் அலுவலகத்தில் வைத்திருந்தபோது அதற்காக ஒரு தேசியப் பாதுகாப்பு வழக்கை எதிர்கொண்டு ,மீண்டும் சிறை சென்றார் சாகுல் அமீது.2009 ஈழப் போருக்கு முன்பிருந்தே ஈழத் தமிழர் விடுதலை தொடர்பாக பெரும் ஈடுபாடு கொண்டிருந்தவர் சாகுல் அமீது. இந்த அடிப்படையில் கட்சி வேறுபாடு கடந்து பலருக்கும் உதவியர். 

சீமானிடம் தனிப்பட்ட முறையில் அன்பு செலுத்தியவர், தான் நடத்துகிற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சீமானை அழைத்தார். சமூக நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் வகையில் சீமானை தன் மருமகன் என்றும் தான் சீமானுக்கு தாய்மாமன் என்றும் கூறிய சாகுல் அமீது அப்படியே சீமானை அழைத்தும் வந்தார். சீமானும் சாகுல் அமீதுவை அன்புத் தாய்மாமன் என்றே அழைப்பார்.

நாம் தமிழர் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் கட்டப்பிள்ளை கூறுகிறபோது

சாகுல் அய்யா செப்டம்பர் முதல் வாரம் வரை நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தார். புதிய கல்விக்கொள்கை எதிர்ப்புப் போராட்டம், சுற்றுச் சூழல் வரைவு அறிக்கைக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை நாகை மண்டலத்தில் தீவிரமாக முன்னெடுத்தார். அப்போது கூட உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினோம். நம்மையெல்லாம் கொரானா ஒன்றும் செய்யாதுடா என்று சிரித்துக் கொண்டே கூறினார். ஆனால் சென்னை சென்ற சில நாட்களில் அவர் உடல் நலம் குன்றி ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில்தான் எங்களை விட்டுப் போய்விட்டார்என்றார்.
தனியார் மருத்துவமனையில் இருந்து சாகுல் அமீதுவின் உடல் அவரது குடும்பத்தினரிடமும், கட்சியினரிடமும் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடலில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடியை போர்த்தி, வீரவணக்கம் செலுத்தினர்.
ராயப்பேட்டை பள்ளிவாசலில் நல்லடக்கத்துக்காக சாகுல் அமீது உடல் கொண்டுவரப்பட்டது. அங்கே சென்ற சீமான் தலையில் அடித்துக் கொண்டு ஓவென ஓலமிட்டுக் கதறி அழுதார். ஐயோ…மாமா… ஐயோ மாமா என்று சீமான் கதறிய கதறல் அனைவரையும் உலுக்கியது.

தொழிலதிபராக இருந்து பல்வேறு தமிழ் தேசிய நிகழ்வுகளுக்குப் புரவலராக விளங்கிய சாகுல் அமீது சமீபத்திய ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சைக்குக் கூட போதிய தொகை இல்லாமல் கட்சி மூலம் நிதி திரட்டப்பட வேண்டிய நிலைக்கு ஆளானார் என்பதுதான் கொடுமை.

You may also like
செம்மொழி பட்டியலில் தமிழ் சேர்ப்பு; மு.க ஸ்டாலின் வரவேற்பு
புதிர் போட்டியில் புறக்கணிக்கப்படும் தமிழ்! கனிமொழி கடும் கண்டனம்
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதி!
தமிழ்-கொரிய மொழி ஒற்றுமை- கொரியா தமிழ் ராணி செம்பவளம் எங்கிருந்து போனார்?

Leave a Reply