இந்தியாவில் மணமகள் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாப்பிள்ளை அவரை கொரோனா சிகிச்சை மையத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டது, பலரது வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் இளம் ஜோடியினருக்கு, கடந்த திங்கட் கிழமை மாலை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டதால், அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன.
இந்நிலையில், திருமணத்திற்கு 2 நாட்கள் முன்னதாக நஹர்கார்ஹ் பகுதியைச் சேர்ந்த மணப்பெண்ணின் அத்தை, மாமாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர்களுடன் தொடர்பில் இருந்த மணப்பெண் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் மணப்பெண் மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதை அறியாத மணப்பெண் குடும்பத்தினர், திருமணம் நடைபெறும் ஷாபாத் பகுதிக்கு சென்றனர். கொரோனா தொற்று உறுதியானதை அறிந்த சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ ஊழியர்கள் மணப்பெண் மற்றும் அவரது தாயாரை அழைத்து வர, அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
ஆனால், அதற்கு முன்னதாகவே மணப்பெண் குடும்பத்தினர் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்றுவிட்டதை அறிந்ததும், திருமணம் நடைபெறும் பகுதிக்கு சென்றனர்.
கொரோனா தொற்று உறுதியான தகவலை, மணமக்களிடம் கூறி, கொரோனா சிகிச்சை மையத்திற்கு, மணமகள் மற்றும் அவரது தாயாரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேலும் கொரோனா சிகிச்சை முடிந்தப்பின்னரே திருமணம் நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். தாலி கட்டும் நேரத்தில், இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணமக்களிடன் குடும்பத்தினர், ஏற்கனவே திருமண திகதியை உறுதிப்படுத்திவிட்டதால், இனிமேல் தங்களது வழக்கப்படி திருமண திகதியை மாற்றமுடியாது என்று சுகாதாரத்துறை ஊழியர்களிடம் கெஞ்சி வற்புறுத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி மாப்பிள்ளை இதைப் பற்றி எதையும் யோசிக்காமல், திருமணம் செய்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார். கொரோனா என்றவுடன் பயப்படாமல், தன்னை நம்பி வரவிருக்கும் பெண்ணிற்காக உறுதியாக நின்றார்.
இதையடுத்து மனமிறங்கிய சுகாதாரத்துறை ஊழியர்கள், திருமணம் நடைபெறும் இடம் இல்லாமல், கொரோனா சிகிச்சை மையத்திலேயே, உறவினர்கள் யாரும் இன்றி திருமணம் நடத்த அனுமதி தந்தனர்.
இதனால் வேறுவழியின்றி, கொரோனா சிகிச்சை மையத்தின் காலி இடத்தில், தற்காலிக திருமண பந்தல் இட்டு, மணமகன், மணமகள், மணமகளின் தந்தை, திருமணம் நடத்தி வைக்கும் குருக்கள் மட்டும் தனிமனித கவச உடையணிந்து பாதுகாப்புடன் திருமணத்தை நடத்தினர்.
திருமணத்திற்குப் பின்னர், மணமகள் மற்றும் அவரது தாயார் கொரோனா சிகிச்சை மையத்தின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர். மாப்பிள்ளை உறுதியாக இருந்ததன் மூலமே இந்த திருமணம் நடந்தது, இது ஒரு நெகிழ்ச்சி யான முடிவு என்று கூறியுள்ளனர்.
#WATCH Rajasthan: A couple gets married at Kelwara Covid Centre in Bara, Shahbad wearing PPE kits as bride’s #COVID19 report came positive on the wedding day.
The marriage ceremony was conducted following the govt’s Covid protocols. pic.twitter.com/6cSPrJzWjR
— ANI (@ANI) December 6, 2020