Home > சினிமா > மதமோ சாதியோ மனுஷன காப்பாத்தாது. விஜய் சேதுபதி

மதமோ சாதியோ மனுஷன காப்பாத்தாது. விஜய் சேதுபதி

மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, “நான் இங்க 2 விஷயங்கள் பத்தி பேச விரும்புகிறேன். முதல் விஷயம் கொரோனா. யாரும் பயப்படவேண்டாம். இது இயல்பு. இதுபோல எதாவது ஒன்னு வந்துட்டேதான் இருக்கும். ஆனால், நம் மனதை பலப்படுத்தி கொள்ளவேண்டும். மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வருவான், மேலே இருந்து எதுவும் வராது. கொரோனா வந்துடும்னு சொந்தக்காரங்களே தொட்டு பேச மறுக்குற நிலைமைல, பரவும்னு தெரிஞ்சும் கொரோனா வைரஸுக்கு மருத்துவம் பாக்குற அத்தனை பேரையும் நான் வணங்குறேன்… அதனால தைரியமா எதிர்கொள்ள வேண்டும். என் பசங்களுக்கும் இதைதான் நான் கற்றுகுடுத்துட்டு வர்றேன்.

இரண்டாவது, இன்னொரு வைரஸ் இருக்கு. சாமிக்காக சண்டை போட்டுக்கிறவங்க.. சாமி பல கோடி வருஷமா இங்க இருக்கு. அதை சாதாரண மனிதனால் காப்பாத்த முடியாது… கடவுள் மேல இருக்கான். மனிதன் தான் இங்கே வாழ்கிறான். மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வரவேண்டும். மேல இருந்து எதுவும் வந்து காப்பாத்தாது. மதத்தின் பெயரை சொல்லி கடவுளை பிரிக்கிறார்கள். மதம் அவசியம் இல்லாதது. நம்புங்க ப்ளீஸ்.

மதமோ சாதியோ மனுஷன காப்பாத்தாது. கடவுளை காப்பாத்துறேன்னு சொல்லிட்டு இருக்குற கும்பல்களிடம் இருந்து தள்ளியே இருங்க. ஒருத்தன் ஏதாவது மதத்த பத்தி பேசுனா அதுக்கு தன்னோட மதத்துல இருக்கிறதுல இருந்து பேசாம மனிதத்தை மனிதநேயத்தையும் பேசுங்க. மனிதம் ஒன்றே மனிதனை காப்பாற்றும். கடவுள் எல்லாம் நம்மை காப்பாத்தாது. மனுஷங்கள நேசிக்கிறேன்..கடவுளை தள்ளி வச்சி தான் பாக்குறேன்” என்று சாட்டையை சுழற்றுவது போல அரசியல் பற்றிப் பேசினார்.

ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் விஜய் சேதுபதியிடம் வாழ்க்கையில் உங்கள் மாஸ்டர் யார்? சினிமாவில் உங்கள் மாஸ்டர் யார்?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி, “வாழ்க்கை என்றால் எப்போதுமே எங்கப்பா தான். அப்பாவை அடித்துக் கொள்ள இந்த உலகத்தில் யாருமே கிடையாது. தான் சம்பாதிக்கிற பணமாக இருந்தாலும் சரி, அறிவாக இருந்தாலும் சரி அது முழுமையாகப் போய் தன் பிள்ளைகளிடம் போய் சேர வேண்டும் என்று நினைப்பது அப்பா மட்டுமே. தான் பேசும் வார்த்தைகள் எல்லாம் பிடிக்காதோ இல்லையோ, பிள்ளைகளிடம் போய் சேருதோ இல்லையோ ஆனால் 1000 வார்த்தைகள் கொட்டுவார்கள். அது வாழ்க்கையில் என்றைக்காவது தடுக்கிவிழும் போது, அப்பா பேசிய வார்த்தைகள் நமக்கு துணையாக வந்து நிற்கும். அது தான் அறிவைக் கொடுப்பது. அதைத் தான் எங்கப்பா எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறார். அதனால் தான் இங்கு நிற்கிறேன்.

எப்போதாவது கோபம் வரும் போது எங்கப்பாவின் புகைப்படத்தைப் பார்த்து திட்டியிருக்கிறேன், சண்டையிட்டு இருக்கிறேன். ஒரு நாள் நல்ல சரக்கடித்துவிட்டு, எங்கப்பாவின் புகைப்படத்தைப் பார்த்து பயங்கரமாக திட்டினேன். ”நான் நன்றாக இருக்கிறேன். இந்த நேரத்தில் எங்கு போயிட்ட நீ” என்று கேட்டேன். எங்கப்பாவை எனக்கு அந்தளவுக்குப் பிடிக்கும். அவர் மட்டும் தான் மாஸ்டர். வேறு யாருமில்லை.

சினிமாவில், சந்திக்கும் அனைத்து மனிதர்களும் தான். ஏனென்றால் கலை என்பது ரொம்ப பெரியது. நீங்கள் கற்பனைப் பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு பெரியது. அதில் சந்திக்கும் அனைத்து மனிதர்களுடமிருந்து, அவர்கள் பண்ணும் சின்ன சின்ன வேலைகளிலிருந்தும் கற்றுக் கொள்கிறேன். நான் யார் எதை அழகாகப் பண்ணினாலும் ரசிப்பேன். முதலில் நான் அனைவருடைய ரசிகன். மனிதர்களை ரொம்பவே ரசிக்கிறேன், இந்த உலகத்தை ரொம்பவே நேசிக்கிறேன். கடவுளைக் கொஞ்சம் தள்ளிவைத்துப் பார்க்கிறேன்.” என்று கூறினார்.

விஜய் சேதுபதியின் இந்த பரபரப்பான பேச்சு சமூக ஊடகங்களிலும் அரசியலிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply