Home > செய்திகள் > மாநிலங்களவையில் எதிர்ப்புக்கிடையேநிறைவேறியது வேளாண் மசோதாக்கள்

மாநிலங்களவையில் எதிர்ப்புக்கிடையேநிறைவேறியது வேளாண் மசோதாக்கள்

மாநிலங்களவையில் மூன்று வேளாண் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து மத்திய அரசு மசோதா கொண்டுவந்தது. இதற்கு பஞ்சாப், ஹரியானா என நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று (செப்டம்பர் 20) மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இந்த மசோதாக்களை தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த மசோதாக்கள் வரலாற்று ரீதியானவை மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நாட்டில் எங்கும் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய முடியும். இந்த மசோதாக்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் தொடர்புடையவை அல்ல என்பதை விவசாயிகளுக்கு நான் உறுதிப்படுத்த விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.
மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய திமுக எம்.பி திருச்சி சிவா, “கொரோனா சூழலைப் பயன்படுத்தி மத்திய அரசு கள்ளத்தனமாக சில அவசரச் சட்டங்களை நடைமுறைப்படுத்தியும், மசோதாக்களை நிறைவேற்றியும் வருகிறது. அதிலுள்ள குறைகளை தேர்வு குழுவுக்கோ அல்லது நிலைக் குழுவுக்கோ அனுப்பி ஆராயாமல் அதனை செயல்படுத்தி வருகிறது. இந்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு அல்லது திணிப்பதற்கு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிய திருச்சி சிவா, “இந்த கொரானா காலத்தில் மத்திய அரசுக்கு விவசாயிகள் மீது திடீரென கரிசனம் வந்தது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. விவசாயிகள் மாதக்கணக்கில் டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் அரை நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால், அவர்களை சந்திக்கக் கூட யாரும் செல்லவில்லை. அவர்களின் குறைகளைக் கூட கேட்கவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.

ஆனால், இப்போது வந்து நாங்கள் விவசாயிகளுக்கு உதவி செய்கிறோம் என்று சொல்கிறீர்கள். உங்களின் அறிக்கைப்படி, வர்த்தகர்களின் பிடியில் இருந்து விவசாயிகளை பாதுகாப்பதே நோக்கம் என்று கூறுகிறீர்கள். ஆனால் அது கட்டுப்பாடற்றது. மேலும், இது மாநிலங்களின்உரிமைகளில் அத்துமீறுகிறது. ஏனெனில், விவசாயம் என்பது மாநில உரிமைகளில் வருகிறது. இதுதொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது என்று ஆவேசமாகப் பேசியவர், இந்தியா என்பது விவசாய நாடாக அழைக்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசு இதனை கார்பரேட் நாடாக மாற்றி வருகிறது எனக் குற்றம்சாட்டினார்.

இதுபோலவே காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, சிரோன்மணி அகாலிதளம், சிவசேனா எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர். திரிணமூல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்டோர் மாநிலங்களவை துணைத் தலைவர் இருக்கைக்கு முன்பு வந்து ஆவேசமாக முழக்கங்கள் எழுப்பினர். துணைத் தலைவர் ஹரிவன்ஸ் அவர்களை இருக்கையில் சென்று அமரச் சொன்னபோதும், அமளி தொடர்ந்தது.

சிறிது நேர ஒத்திவைப்புக்குப் பிறகு மீண்டும் அவை கூடிய நிலையில், எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று வேளாண் மசோதாவுக்கு எதிராக குரலெழுப்பினர். விவாதத்தை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். எனினும், எதிர்ப்புகளுக்கு மத்தியில் மசோதா மீது குரல் வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார் ஹரிவன்ஸ். அதன் முடிவில் மூன்று வேளாண் மசோதாக்களும் எந்தவித திருத்தங்களும் இன்றி நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. 

You may also like
காங்கயத்தில் வரும் 3ம் தேதி விவசாயிகள் போராட்டம்
4.5 ஏக்கர் நெற்பயிரை அழித்த உத்தர பிரதேச விவசாயி..
உச்சநீதிமன்ற
மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
கிசான் முறைகேடு; புதுக்கோட்டையில் ரூ.1.40 கோடி வசூல்

Leave a Reply