செங்கம் அருகே ரேஷன் கடையில் பொருட்கள் வழங்காததை கண்டித்து பொது மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
செங்கத்தை அடுத்த அந்தனூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு, பொதுமக்களுக்கு வழங்குவதற்கான அத்தியாவசிய பொருட்கள் வந்துள்ளது. ஆனாலும் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் ரேஷன் கடையில் கேட்டதற்கு முறையான பதில் இல்லாததால் நேற்று திடீரென அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் செங்கம்- நீப்பத்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
செங்கம் தாசில்தார் மனோகரன், வட்ட வழங்கல் அலுவலர் லதா உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் ரேஷன் பொருட்கள் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.