Home > செய்திகள் > 12-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

12-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் கடும் குளிர் நிலவி வரும் நிலையிலும் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 12-வது நாளாக நடத்தி வருகின்றனர்.

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இது விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் என மத்திய அரசு கூறியுள்ளது.. ஆனால் இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, வேளாண்துறை தனியார்வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போர்க்கோலம் இன்று 12-வது நாளாக தொடர்ந்தது. சுமார் 40 விவசாய அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குழுமி உள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நாடு முழுவதும் நாளை (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டத்தை (பாரத் பந்த்) நடத்துகின்றனர். இதையொட்டி சாலைகளின் சுங்கச்சாவடிகளை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த முழு அடைப்புக்கு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து உள்ளது.

இதைப்போல இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதளம், தெலுங் கானா ராஷ்டிர சமிதி உள்ளிட்ட கட்சிகளும் விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கப்போவதாக அறிவித்துள்ளன.

அத்துடன் ஐ.என்.டி. யு.சி., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 10 முக்கிய தொழிற்சங்கங்கள் அடங்கிய கூட்டமைப்பும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்திலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் இந்த முழு அடைப்பில் பங்கேற்கப்போவதாக அறிவித்துள்ளன.

Leave a Reply