Home > செய்திகள் > மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்கும் 12, 500 கோடி ரூபாய்

மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்கும் 12, 500 கோடி ரூபாய்

கொரோனா தடுப்புப் பணிகள், ஊரடங்கால் ஏற்பட்டுள்ள வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டுமென மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 41ஆவது கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொலி காட்சி மூலமாக நேற்று (ஆகஸ்ட் 27) நடைபெற்றது.

தமிழகத்திலிருந்து மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், நிதித் துறைச் செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

இந்த ஆலோசனையில் சரக்குகள் மற்றும் சேவை வரி இழப்பீடு குறித்து 5 மணி நேரத்துக்கும் மேலாக விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “தமிழகத்திற்கு மத்திய அரசு 2018ஆம் நிதி ஆண்டு முதல் 2020 வரை வழங்க வேண்டிய இழப்பீடு 12,258 கோடியே 94 லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்.

2017- 18 நிதி ஆண்டில் வழங்க வேண்டிய ஐஜிஎஸ்டி நிலுவை தொகையான 4,037 கோடியும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்” என்ற தகவலைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “2018-2019ஆம் ஆண்டுக்கு தமிழகத்துக்கு மத்திய அரசால் வழங்கப்பட வேண்டி, நிலுவையாக உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.553.01 கோடி,

2019-2020 ஆம் ஆண்டுக்கு நிலுவையாக உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.246.56 கோடி மற்றும் 2020-2021ஆம் ஆண்டுக்கு நிலுவையாக உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையான ரூ.11,459.37 கோடி, ஆக மொத்தம் ரூ.12,258.94 கோடியினை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டுமென அமைச்சர் ஜெயக்குமார் இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தினார்.

2017-2018ஆம் ஆண்டுக்கு தமிழகத்திற்கு வரப்பெற வேண்டிய ஐஜிஎஸ்டி (IGST) நிலுவைத் தொகையான ரூ.4,073 கோடியினையும் விரைந்து வழங்கிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், “மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்கு ஜிஎஸ்டி மேல்வரி தொகுப்பு நிதிக்கு மத்திய அரசு கடனாகவோ, முன்பணமாகவோ வழங்கிட வேண்டும்.

இந்தக் கடனானது எதிர்வரவிருக்கும் மேல்வரி வரவினத்தில் ஈடு செய்து கொள்ளலாம்.

மேற்படியான பரிந்துரையினை ஜிஎஸ்டி (GST) மன்றமானது மத்திய அரசுக்கு அளித்திட வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

தற்போது கோவிட்-19 நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் பொருட்டு பிற செலவினங்களைத் தமிழகமானது குறைத்துக் கொண்டுள்ள சூழ்நிலையில், மேலும் மாநிலத்தின் நிதி ஆதாரங்களை விட்டுக் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தின் நிதி ஆதாரத்தினை மேலும் விட்டுக்கொடுக்கும் பட்சத்தில் அது ஏழை எளியோர்களுக்கான நலத்திட்டங்களை மாநில அரசு செயல்படுத்துவதில் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தக் கூடும் என்று அமைச்சர் ஜெயக்குமார் இன்றைய கூட்டத்தில் வலியுறுத்தி, மாநிலங்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி இழப்பீட்டினைத் தொடர்ந்து வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்” என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like
அதிமுக வின் 49-வது ஆண்டு தொடக்க விழா
அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா
42-ஆவது ஜிஎஸ்டி கூட்டம் தொடங்கியது
அ.தி.மு.க. எத்தனை துண்டாய் உடையும்? அதிமுக அப்பம் யாருக்கு?
கூட்டணி ஆட்சி தமிழக மக்களுக்கு எப்பவுமே பிடிக்காது

Leave a Reply