Home > செய்திகள் > 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த செட்டிநாடு குழுமம்

700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்த செட்டிநாடு குழுமம்

தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செட்டிநாடு குழுமம் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித் துறை சோதனையில் தெரியவந்துள்ளது.

பிரபல தொழில் நிறுவனமான செட்டிநாடு குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வந்த புகாரை அடுத்து, சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள குழுமத்திற்குச் சொந்தமான 60 இடங்களில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் டிசம்பர் 9ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இக்குழுமம் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை  தெரிவித்துள்ளது. 

60க்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் ரூ.23 கோடி கணக்கில் வராத ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல், வெளிநாட்டு வங்கிகளில் ரூ.110 கோடி அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவ மேற்படிப்பிற்கு நன்கொடை பெற்றதைக் குறிக்கும் வகையிலான சில ரசீதுகளும் சிக்கியுள்ளன.

செலவை அதிகரித்து லாபத்தைக் குறைத்துக் காட்டுவதற்காகப் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ரூ.435 கோடி அளவிற்குப் பொய் கணக்குக் காட்டியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு சார்ந்த 3 சொத்துகளை மற்றொரு குழுமத்திற்கு விற்ற வகையில் 280 கோடி ரூபாய்  மூலதன ஆதாயத்தைக் குறைத்துக் காட்டுவதற்காக நடைபெற்ற மோசடியும் கண்டறியப்பட்டுள்ளது. 

சோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது 

Leave a Reply