Home > செய்திகள் > தமிழக பாஜகவுடன் மோத தயாராகும் அதிமுக தலைமை

தமிழக பாஜகவுடன் மோத தயாராகும் அதிமுக தலைமை

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கூட்டணி என்ற ஒன்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அமைக்கப்பட்டாலும்… அது இப்போது இருக்கிறதா, இல்லையா என்பது இரு கட்சிகளுக்கிடையே விவாதமாகத் தொடர்கிறது.

வரப்போகும் தேர்தலில் பாஜகவுக்கும் திமுகவுக்கும்தான் முக்கிய போட்டி என்று பாஜக துணைத் தலைவர் வி.பி. துரைசாமி சொன்னார்… தனித்து நின்றாலே பாஜக 60 இடங்களில் ஜெயிக்கக்கூடிய வல்லமையோடு இருக்கிறது என்று மாநிலத் தலைவர் முருகன் சொன்னார்.

அமைச்சர்கள் வரம்பு மீறி பேசக்கூடாது என்று முதலமைச்சர் கூட சொல்லாத நிலையில் ஹெச். ராஜா சொன்னார்… இப்படி கடந்த வாரத்தில் அதிமுகவை வேண்டுமென்றே சீண்டி பார்க்கும் வகையில் பாஜக தலைவர்கள் வார்த்தைகளால் சிலம்பம் ஆடி கொண்டு இருந்தார்கள்.

ஏற்கனவே அதிமுகவுக்கும் தமிழக அரசுக்கும் பாஜகவின் அடிமை என்ற கடுமையான விமர்சன முத்திரை விழுந்திருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு ஆண்மையுள்ள கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது என்று ஊர்வலத்துக்குத் தடை போட்ட தமிழக அரசை மறைமுகமாக விமர்சித்தார் ராஜா.

இப்படி பல்வேறு வகைகளில் அதிமுகவை நையாண்டி செய்யும் பாஜகவின் திடீர் நடவடிக்கைகள் அதிமுகவின் உயர்மட்ட ஆலோசனைக்கு வழிவகுத்தது.

சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லி புறப்பட்டு விட்டார்கள் என்று ஒரு தகவல் பரவியது.

டெல்லியில் இருந்து எந்த அப்பாயின்ட்மென்ட்டும் வழங்கப்படாத நிலையில் அவர்கள் பயணம் திட்டமிடப்பட்டு பிறகு ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே கொங்கு வட்டாரத்துக்கு நெருக்கமான… ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொழில் செய்யும் தமிழகத்தைச் சேர்ந்த லிக்னைட் நிலக்கரி தொழிலதிபர் ஒருவர் மூலமாக பியூஸ் கோயலிடம் பேசியிருக்கிறார்கள் முதல்வர் தரப்பினர்.

சென்ற நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான தமிழக விவகாரங்களை கவனித்தவர் கோயல்தான். அந்த அடிப்படையில் அவரிடம், தமிழக பாஜக தலைமையின் நடவடிக்கைகள் சில வாரங்களாக எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன.

இது தேசியத் தலைமைக்குத் தெரிந்துதான் நடக்கிறதா அல்லது தமிழக பாஜக தலைமை தன்னிச்சையாகச் செயல்படுகிறதா? என்று அந்த தொழிலதிபர் மூலம் பியூஸ் கோயலிடம் கேட்டிருக்கிறார்கள் முதல்வர் தரப்பினர்.

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் நெருங்கிவரும் நிலையில் மாநில பாஜகவின் மையக் குழு கூடி தேர்தல் ரீதியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.

அதில் தேசிய தலைமை சில திருத்தங்களைச் செய்யுமே தவிர அந்த முடிவை ஒரேயடியாக மறுத்து விடாது. எனவே அவர்கள் பேசுவதுபடி பேசிக்கொண்டு இருக்கட்டும். நீங்கள் ஒரு முடிவு எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று கோயல் மூலமாக எடப்பாடி தரப்புக்குப் பதில் தரப்பட்டிருக்கிறது.

இதை அடிப்படையாக வைத்து அதிமுகவில் தனக்கு நெருக்கமான சிலரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார் எடப்பாடி. அதன்பிறகுதான் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது… அடுத்தவர்களைக் காலால் மிதிக்க மாட்டோம்.

எங்களை மிதித்தால் சும்மா விட மாட்டோம்’ என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளார். இது ஆரம்பம் தான் பாஜகவுக்கு எதிராக அதிமுக விரைவில் தொடர் தாக்குதலை நடத்தும் என்று கூறுகிறார்கள் அதிமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

மத்திய அரசின் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி இனிமேல் அதிமுக பிரமுகர்கள் மீது நியாயமான நடவடிக்கை எடுத்தால்கூட…. பாஜகவை எதிர்த்து நிற்பதால் தான் பழிவாங்கும் போக்கோடு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சொல்லி அதிலும் அரசியல் செய்யலாம் என முடிவெடுத்திருக்கிறார் எடப்பாடி.

தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போதைய இந்த சண்டை தொடருமா என்பது பாஜகவின் தேசியத் தலைமை அதிமுகவை அணுகும் விதத்தில்தான் இருக்கிறது.

இந்த நிலையில் பாஜகவின் வார்த்தை தாக்குதல்களுக்கு உடனடியாகவும் உறுதியாகவும் பதில் கூற வேண்டும் என அதிமுகவின் அமைச்சர்களுக்கும் பிரமுகர்களுக்கும் வாய்மொழி அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

அதேநேரம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் இன்னமும் பாஜக விஷயத்தில் மென்மை போக்கைக் கடைப்பிடித்துவர எடப்பாடி உள்ளிட்ட மற்ற தரப்பினர் பாஜக மீதான பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டார்கள்.

You may also like
“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” : நடிகை குஷ்பு
அதிமுக வின் 49-வது ஆண்டு தொடக்க விழா
அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா
பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு
நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய பாஜக பிரமுகர்கள் உள்பட 19 பேர் கைது

Leave a Reply