Home > செய்திகள் > பிரிட்டன் விமானங்கள் இந்தியாவுக்கு வர தடைவிதிக்கப்பட்டது

பிரிட்டன் விமானங்கள் இந்தியாவுக்கு வர தடைவிதிக்கப்பட்டது

கொரானா வைரசின் புதிய வடிவம்  பிரிட்டனில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும், பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன.

இந்தியா உட்பட உலக நாடுகளில் கொரானா பாதிப்பால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

சமீப நாட்களாகப் பாதிப்பு குறைந்து வருவதாக பல்வேறு நாடுகளும் தெரிவித்தன. இது மக்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தியிருந்த நிலையில், கொரானா தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்க நிறுவனமான ஃபைசர் கண்டுபிடித்த தடுப்பூசிக்குப் பிரிட்டன் அரசு முதலில் ஒப்புதல் அளித்து, மக்களின் பயன்பாட்டுக்கும் வந்தது.
ஆனால் சமீப நாட்களாகப் பிரிட்டனில் கொரானா வைரசின் புதிய வடிவம் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

புதிய வடிவம் லண்டன் மற்றும் தென் கிழக்கு இங்கிலாந்தில் வேகமாகப் பரவி வருகிறது என்றும் கூறியுள்ளது.
ராக்கெட் வேகத்தில் பரவுவதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறையினர் கூறி வந்த நிலையில், இதுதொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றனர்.

இதில்  முந்தைய கொரானா வைரசை விட புதிதாகப் பரவும் கொரோனா வித்தியாசமானதாக இருக்கிறது என்றும் அதாவது கொரானா வைரஸ் சூழ்நிலைக்கு ஏற்றார்போல வளர்சிதை மாற்றம் அடைந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். 

இது 70 சதவிகிதம் அதிகளவு பரவுவதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில், நிலைமை கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டதாகப் பிரிட்டன் சுகாதாரத்துறைச் செயலர் மேட்ஹன்காக் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை தவிர்த்து, வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் நான்குஅடுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
கொரானாவின் புதிய வடிவம் வேகமாகப் பரவுவதாகத் இங்கிலாந்து அறிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு ஐரோப்பிய நாடுகளும், பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. 

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு ஜனவரி வரை தடை விதிப்பதாக நெதர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.  அயர்லாந்து 48 மணி நேரம் தடை விதித்துள்ளது.
24 மணி நேரத்திற்கு தடை விதித்துள்ள பெல்ஜியம், இந்த காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று கூறியுள்ளது. ஆஸ்திரேலியா, துருக்கி ஆகிய நாடுகளும் தடை விதித்துள்ளன.

சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து வந்த இருவருக்கு புதிய வகை கொரானா வைரஸ் அறிகுறி தென்பட்டதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள இத்தாலி அரசு, பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளது.

பிரிட்டனில் புதிய கொரானா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தனது கூட்டு கண்காணிப்புக் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், உலக சுகாதார அமைப்பின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் ரோடெரிகோ எச் ஆஃப்ரினும் கலந்துகொள்ளவுள்ளார்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்  கூறுகையில், மிகுந்த எச்சரிக்கையாக  இருப்பதாகவும், விஞ்ஞானிகள் வைரசின் வளர்ச்சி குறித்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், மக்கள் அச்சம்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் இங்கிலாந்திலிருந்து வரும் அனைத்து விமானங்களையும் தடை செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தியிருந்த நிலையில், பிரிட்டன் விமானங்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்படும் அனைத்து விமானங்களும் டிசம்பர் 31 இரவு 11:59 மணி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று இந்திய விமான போக்குவரத்து துறை இன்று பிற்பகல் அவசரஅறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply