Home > செய்திகள் > 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

7.5 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தடை விதிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு வந்த பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேருவது வெகுவாக குறைந்தது.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கூட கட் ஆப் மதிப்பெண் காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை இருந்தது.

இதனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.

இதன்முலம் நடப்பாண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பில் 405 அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இதனிடையே 2018 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்த பூஜா என்ற மாணவி மூன்றாவது முயற்சியில் இந்த ஆண்டு, நீட் தேர்வில் 565 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், அவருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை.

இதனால் 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பூஜா வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ரமேஷ் அடங்கிய அமர்வில் இன்று (டிசம்பர் 15) விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்த காரணத்தால் நீட்டில் அதிக மதிப்பெண் பெற்ற போதிலும் இடம் கிடைக்கவில்லை.

ஆனால், நீட்டில் 200 மதிப்பெண் கூட எடுக்காத அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்தது.

இது நியாயமற்றது என வாதிடப்பட்டது. அத்துடன், இந்த வழக்கு முடியும் வரை 7.5 சதவிகிதத்தில் இடஒதுக்கிட்டில் வழங்கப்பட்ட இடங்களை இறுதிசெய்யக் கூடாது என இடைக்கால தடை விதிக்க வலியுறுத்தப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், அனைத்து மருத்துவ இடங்களும் நிரப்பப்பட்டு விட்டதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

அரசுப்பள்ளி மாணவர்களை எதிரியாக பார்க்கக் கூடாது என்றும் கூறிய நீதிபதிகள், ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் படிப்பதை உறுதி செய்யவே உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினர்.

மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்குகளோடு, இவ்வழக்கும் விசாரிக்கப்படும் என தெரிவித்து வழக்கின் விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave a Reply