Home > செய்திகள் > கூடுதல் கடன் வாங்க தமிழகத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் அனுமதி

கூடுதல் கடன் வாங்க தமிழகத்திற்கு மத்திய நிதி அமைச்சகம் அனுமதி

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் கூடுதலாக ரூ.16,728 கோடி நிதி பெற மத்திய நிதி அமைச்சகம் அனுமதித்துள்ளது. எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக இதுவரை தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் பல்வேறு சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் மாநிலங்கள் கூடுதல் கடன் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதன்படி தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மத்தியப்பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் எளிதான வர்த்தகம் தொடர்பான சீர்திருத்தங்களை நிறைவேற்றியுள்ளன.

தொழில், வர்த்தகம் தொடங்குவதற்கான பதிவுச் சான்று பெறுதல், சான்றுகளைப் புதுப்பித்தல், அங்கீகாரம் வழங்குதல், ஒப்புதல் அளித்தல் போன்றவற்றுக்கான தேவைகளை நீக்குதல் இந்தச் சீரமைப்பின் ஒரு பகுதியாகும்.

இதுதொடர்பாக மத்திய நிதித் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கூடுதல் நிதியாக தமிழகத்திற்கு ரூ.‌4,813 கோடியும், ஆந்திரப்பிரதேசத்திற்கு ரூ. 2,525 கோடியும், கர்நாடகாவிற்கு ரூ. 4,509 கோடியும், மத்தியப்பிரதேசத்திற்கு ரூ. 2,373 கோடியும், தெலங்கானாவிற்கு ரூ. 2,508 கோடியும் நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

கடந்த பட்ஜெட் தாக்கலின் போது தமிழக அரசின் கடன் சுமை ரூபாய் 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடி அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply