Home > செய்திகள் > நிவார் புயலை எதிர்கொள்ள தயாராகும் கடலோர மாவட்டங்கள்

நிவார் புயலை எதிர்கொள்ள தயாராகும் கடலோர மாவட்டங்கள்

வங்காள விரிகுடா கடலின் தென்பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்  சூறாவளி புயலாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக வானிலை எச்சரிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வீச வாய்ப்பிருக்கும் புயலுக்கு நிவார் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, இது சென்னையில் இருந்து 700 கி.மீ தூரத்தில் இருந்து தமிழ்நாட்டைநோக்கி வந்துகொண்டிருக்கிறது. இது புதன்கிழமை தமிழக கடற்கரையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் கணிப்புகளின்படி, புதன்கிழமை பிற்பகல் இந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகர்ந்து காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் செவ்வாய் கிழமை முதல் வியாழக் கிழமை வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகியவற்றில் பரவலான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவார் புயலைப் பற்றிய பேச்சு டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு வீட்டிலும் கேட்கிறது. தமிழகம் முழுமைக்கும் மழை இருக்கும் என்று கூறப்பட்டாலும் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால்,கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் நிவார் புயலின் வீச்சு கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 2018 நவம்பர் மாதம் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கிய வலி மக்களுக்கு இன்னும் மறக்கவில்லை. அதனால் டெல்டா மக்கள் நிவார் புயல் பற்றிய தகவலைக் கேட்டதுமே அரசை முந்திக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கிவிட்டனர்.

டெல்டா மாவட்டங்களில் பலர் தங்களுக்குச் சொந்தமான மரங்களின் கிளைகளைக் கழித்து, புயலை எதிர்கொள்ள மரங்களைத் தயார்படுத்தியிருக்கிறார்கள்.

குறிப்பாக கஜா புயல் தென்னை மரங்களை ஏராளமான அளவில் சாய்த்துச் சென்றுவிட்டதால், இந்த நிவார் புயலில் தென்னை மரங்கள் பாதிப்படையக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையோடு விவசாயிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக வேதாரண்யம் பகுதிகளில், கஜாவுக்கு தப்பிய தென்னை மரங்களை நிவாரிடம் இருந்து காப்பாற்றும் நோக்கில், தென்னை மரங்களின் உச்சை மட்டைகளை மட்டும் விட்டுவிட்டு பக்கவாட்டில் இருக்கும் மட்டைகளை எல்லாம் பாதுகாப்பாக வெட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று (நவம்பர் 23) காலை மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி மின்வாரிய அலுவலகத்தில் உயர் அதிகாரிகளோடு புயலால் ஏற்படும் பாதிப்புகளை மின்சாரவாரியம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் பிரபாகர், வேளாண்மைத்துறை செயலாளர் ககன் தீப்சிங் பேடி, வருவாய்த்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளனர் 

You may also like
வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
புரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்கிறது
டிசம்பர் 4 இல் பாம்பன் இடையே ‘புரெவி’ புயல் கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்

Leave a Reply