Home > அறிவியல் > கிராமப்புற மக்களுக்கு உதவும் மருத்துவ ஆராய்ச்சியில் கலாம் ஆலோசகர் பொன்ராஜுக்கு முனைவர் பட்டம்!

கிராமப்புற மக்களுக்கு உதவும் மருத்துவ ஆராய்ச்சியில் கலாம் ஆலோசகர் பொன்ராஜுக்கு முனைவர் பட்டம்!

நவீன தொழில்நுட்பங்களையும், தொலைத்தொடர்ப்புத்துறை, கணினித்துறை ஆகியவற்றுடன் மருத்துவத்துறையை இணைத்து, நகரத்தை விட்டு தள்ளி இருக்கும் கிராமப்புற மற்றும் மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்கச்செய்வது எப்படி என்ற ஆராய்ச்சி படிப்பில் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகரான வெ.பொன்ராஜ் முனைவர் பட்டம் பெற்றார்.

இதயைடுத்து, அப்துல்கலாமின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்ற கடைசி மாணவர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய இந்த பட்டத்தை அப்துல்கலாமின் நினைவிடத்தில் வைத்து வணங்கினார் பொன்ராஜ்.

நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளை கடந்தும் இந்தியாவில் தமிழகம், மேகாலயா, பீகார், ஒரிசா உள்ளிட்ட 15 மாநிலங்களில் கிராமப்புற மக்களும், பழங்குடியின, மலைவாழ் மக்களுக்கு அடிப்படை சுகாதாரம், மருத்துவ வசதிகள் கிடைக்கவில்லை. இதன்காரணமாக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கிராமப்புற, மலைவாழ் மக்கள் உயிர் இழக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும் என்று மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம்.
அவருடைய கனவை நிறைவேற்ற, அவரோடு 20 ஆண்டுகள் அறிவியல் ஆலோசகராக பயணித்த டாக்டர் பொன்ராஜ் விருப்பம் தெரிவித்தார். அவருடைய விருப்பத்துக்கு உதவ கலாம் ஒப்புதல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து, கிராமப்புற மக்களுக்கும், மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுக்கும் விரைவான மற்றும் தரமான, நவீன மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்வது எப்படி என்று விஞ்ஞானி பொன்ராஜ் ஆய்வு செய்தார்.
நவீன தொழில்நுட்பங்களையும், தொலைத்தொடர்ப்புத்துறை, கணினித்துறை ஆகியவற்றுடன் மருத்துவத்துறையை இணைத்து, நகரத்தை விட்டு தள்ளி இருக்கும் கிராமப்புற, மலைவாழ், பழங்குடியின மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்கச்செய்வது எப்படி என்ற ஆராய்ச்சி படிப்பை சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் அவர் தொடங்கினார்.

அவருடைய ஆராய்ச்சி படிப்புக்கு அப்துல் கலாமே, வழிகாட்டியாக இருந்தார். இதன்மூலம் அப்துல்கலாமின் கடைசி ஆராய்ச்சி மாணவர் என்ற தகுதியை பொன்ராஜ் பெற்றார்.

அவர் மறைவதற்கு 10 நாட்களுக்கு முன்பு, 2015, ஜுலை 16-ந் தேதி இரவு 3 மணி நேரம் தனது ஆராய்ச்சியை ஆய்வு செய்ததாகவும், பின்னர், தன்னை மனதார பாராட்டியதாகவும் வெ.பொன்ராஜ் கூறுகிறார். இந்த ஆராய்ச்சி முழு வடிவம் பெற்று இதை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றினால் ஒட்டு மொத்த இந்தியாவின் சாதாரண பொது மக்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று சொல்லி சில மாற்றங்களையும், பல்வேறு செயலாக்க யோசனைகளையும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அவருடைய யோசனைகளையும் உட்படுத்தி, பொன்ராஜ் உருவாக்கிய ஹெல்த்கேர் க்ளவுட் எகோ சிஸ்டமை உள்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து முனைவர் பட்டத்துக்கு பரிந்துரை செய்தனர். அதன் தொடர்ச்சியாக, இணையதள காணொளிக் காட்சிமூலம் நடைபெற்ற தேர்வில் அவருடைய ஆராய்ச்சி அங்கீகரிக்கப்பட்டு துணைவேந்தர் டாக்டர் பி.வி.விஜயராகவனிடமிருந்து முனைவர் பட்டத்தை பெற்றார்.

பின்னர் அப்துல்கலாமின் நினைவிடம் சென்ற டாக்டர் வெ.பொன்ராஜ் தனது பட்டத்தை நினைவிடத்தில் வைத்து வணங்கினார்.

Leave a Reply