Home > செய்திகள் > புதிய கல்வி கொள்கை சந்தேகங்கள் தீர்க்கப்படும் – பிரதமர் நரேந்திர மோடி

புதிய கல்வி கொள்கை சந்தேகங்கள் தீர்க்கப்படும் – பிரதமர் நரேந்திர மோடி

தேசிய கல்விக் கொள்கை பற்றிய, மாநில ஆளுநர்கள் மாநாடு நேற்று (செப்டம்பர் 7) காணொலியில் நடந்தது. இந்த மாநாட்டில் குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பேசிய, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “தேசிய கல்விக் கொள்கை 21ஆம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப இந்தியாவை வழிநடத்தி செல்லும்.

தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ மாநிலங்களில் அமல்படுத்துவதற்கு, அதை சார்ந்த மெய்நிகர் மாநாடுகளை நடத்த ஆளுநர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு கூறுகளைப் பற்றி விரிவாக ஆலோசித்த பிறகு, ஆலோசனைகளைக் கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பலாம்” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “கல்விக்கான பொறுப்பு மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் பொறுப்பு என்றாலும், கல்விக் கொள்கை உருவாக்குவதில் இவற்றின் தலையீடு குறைவாக இருக்க வேண்டும்.

இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் பங்கு அதிகரிக்கும்போதுதான், கல்விக் கொள்கை முழுமையடையும். நாட்டின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் மற்றும் கல்வித் துறையைச் சார்ந்தவர்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்ற பின்புதான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது.

தற்போது ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட ஒவ்வொருவரும் கல்விக் கொள்கையைச் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

கல்விக் கொள்கை குறித்து ஆரோக்கியமான விவாதம் நடைபெறுவதைப் பாராட்டுகிறேன். கல்வி முறையில் சீர்திருத்தத்தை மட்டும் ஏற்படுத்தாமல், 21ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கான சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படுவதால், இத்தகைய விவாதம் அவசியம்” எனப் பிரதமர் கூறினார்.

மேலும் அவர், “வேகமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், இளைஞர்களை எதிர்காலத்துக்குத் தயாராக்குவதுதான் இந்த கல்விக் கொள்கையின் நோக்கம்.

எதிர்கால தேவைக்கான அறிவும், திறனுடன் நாட்டின் இளைஞர்களை தயார்படுத்தும் நோக்கில் இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

படிப்பதை விட, கற்றலில் புதிய கல்விக் கொள்கை கவனம் செலுத்துகிறது மற்றும் பாடத்திட்டத்தைத் தாண்டி விவேகமாகச் சிந்திப்பதை புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. நடைமுறையை விட விருப்பம், செய்முறை மற்றும் செயல்பாட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது” எனப் பிரதமர் கூறினார்.

கற்றலின் முடிவு, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஒவ்வொரு மாணவரையும் முன்னேற்றுதல் ஆகியவற்றில் புதிய கல்விக் கொள்கை கவனம் செலுத்துகிறது.

புதிய கல்விக் கொள்கையை நாட்டில் எப்படி அமல்படுத்துவது என்ற முயற்சி தற்போது நடக்கின்றன. இதில் அனைத்து தரப்பினரின் ஆலோசனைகள் திறந்த மனதுடன் கேட்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அனைவரது சந்தேகங்களும் தீர்க்கப்படும்.

இந்தக் கல்விக் கொள்கை, அரசின் கல்விக் கொள்கை அல்ல; நாட்டின் கல்விக் கொள்கைஎன்றும் பிரதமர் மோடி கூறினார்

You may also like
ஐநா சபை கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறிய இந்தியப் பிரதிநிதி…
பா.ஜ.க.-வினர் விவசாயிகளை சந்தித்து வேளாண் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி
பிரதமர் மோடி ஐநா சபை கட்டமைப்புகளில் மாற்றங்கள் தேவை என தெரிவித்துள்ளார்.
நிதியுதவி முறைகேட்டுக்கு மத்திய அரசுதான் காரணம் – தமிழக முதல்வர்

Leave a Reply